குடும்பத்துடன் காண வேண்டிய காதல் கலப்புத் திருமண கலாட்டா ‘அடடே சுந்தரா’

78

தெலுங்கின் முன்னணி நடிகர் நானி கதையின் நாயகனாகவும், மலையாள நடிகை நஸ்ரியா கதையின் நாயகியாகவும் நடித்திருக்கும் ‘அடடே சுந்தரா’ திரைப்படத்தின் நிகழ்வில் நடிகர் நானி…

”அடடே சுந்தரா படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஷ்யாம் சிங்கார ராய் போன்ற ஆக்சன் படங்களில் நடித்துவிட்டு, ‘அடடே சுந்தரா’ போன்ற நகைச்சுவையும், காதலும் கலந்த திரைக்கதையில் நடிப்பது பொருத்தமான தேர்வு என நினைக்கிறேன். ரசிகர்களுக்கும் நிச்சயம் இது பிடிக்கும். படத்தின் கதை, தெலுங்கு, தமிழ், மலையாளம் என மொழி கடந்து அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது.

படத்தின் உணர்வுபூர்வமான திரைக்கதை, அனைத்துவித ரசிகர்களையும் கவரும். எங்களுடைய ஒட்டுமொத்த படக்குழுவினரும் கடின உழைப்பை அளித்திருக்கிறோம். ‘அடடே சுந்தரா’ நல்லதொரு திரையரங்க அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும். குடும்பத்துடன் திரையரங்கத்திற்கு சென்று காண வேண்டிய அற்புதமான காதலும், நகைச்சுவையும் கலந்து திரைப்படம்தான் அடடே சுந்தரா” என்றார்.

படத்தின் நாயகி நஸ்ரியா…

”தமிழில் பேசி நீண்ட நாட்களாகிவிட்டது. அதனால் ஏதேனும் தவறு வந்து விடுமோ..! என்ற அச்சம் காரணமாக ஆங்கிலத்திலேயே பேசுகிறேன்.. இந்தப் படத்தில் நானி உடன் இணைந்து பணியாற்றியது மகிழ்வான அனுபவமாக இருந்தது.

காதல் கதைக்கு ஊக்கமும், ஆதரவும் அளித்து வரும் தமிழ் ரசிகர்கள் ‘அடடே சுந்தரா’ படத்திற்கும் ஆதரவு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். பொழுதுபோக்கு அம்சங்களுடன் காதலும் நகைச்சுவையும் கலந்து உருவாகியிருக்கும் ‘அடடே சுந்தரா’ படத்திற்கு ஆதரவு தாருங்கள்.” என்றார்.

நடிகர் அழகம் பெருமாள் பேசுகையில், ” எனக்கு இது முக்கியமான திரைப்படம். நான் தெலுங்கில் நேரடியாக அறிமுகமாகும் முதல் திரைப்படம் இது. தமிழைத் தவிர வேறு மொழி படங்களில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு.

ஏனெனில் ஒவ்வொரு மொழி திரைப்படங்களில் பணியாற்றும்போது ஒவ்வொரு வகையான கலாச்சாரத்தையும், வித்தியாசமான சிந்தனை கொண்ட படைப்பாளிகளையும் காணலாம். பழகலாம். அவர்களிடமிருந்து பல நுட்பமான விசயங்களை கற்றுக் கொள்ளலாம். வேறு மொழிப் படங்களில் நடிக்கும்போது கிடைக்கும் புத்துணர்ச்சி மிக மிக முக்கியமான தேவையாக இருக்கிறது.

நிறைய தமிழ் படங்களில் நடித்தாலும், வேறு மொழி படங்களில் நடிக்கும் போது கிடைக்கும் அனுபவம் அலாதியானது. அந்தவகையில் ‘அடடே சுந்தரா’ அற்புதமான அனுபவத்தை வழங்கிய திரைப்படம். படத்தின் இயக்குநர் விவேக் ஆத்ரேயா.

இளம் திறமைசாலி. ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என திறமையான தொழில்நுட்ப குழுவினருடன், திறமைவாய்ந்த நடிகர் நானி, நஸ்ரியா, ரோகிணி, நதியா போன்றோருடன் நடித்தது மறக்க இயலாதது. இந்தப்படத்தில் நானும், நதியாவும் ஜோடிகளாக நடித்திருக்கிறோம். ஆனால் என்னுடைய கல்லூரி காலகட்டங்களில் நதியா மீது எனக்கு கிரஷ் இருந்தது. தெலுங்கில் முக்கியமான குணச்சித்திர நடிகரான நரேஷ் நல்லதொரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

திறமையான கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன், தயாரிப்பு நிறுவனமும் என்னைப் போன்ற கலைஞர்களுக்கு இருந்த சங்கடங்களை புரிந்து முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள். படப்பிடிப்பு அனுபவம் முழுவதும் நான் எதிர்பார்த்ததை விட நேர்த்தியாக அமைந்தது. இதற்காக உளமார மகிழ்ச்சியடைந்து நன்றி கூறுகிறேன்.” என்றார்.

நடிகை ரோகிணி…

” தொடர்ந்து நல்ல படங்களில் நடித்துக்கொண்டே ரசிகர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ‘அடடே சுந்தரா’ எனக்கு மிகவும் ஸ்பெஷலான தனித்துவமான திரைப்படம்.

ஆக்ஷன் படங்களில் ஆக்ஷன் காட்சிகள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இதுபோன்ற நேரத்தில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவும், உற்சாகத்துடனும் சிரித்துக்கொண்டே கண்டு ரசிக்கக் கூடிய படமாக ‘அடடே சுந்தரா’ தயாராகியிருக்கிறது. நகைச்சுவையுடன் மட்டுமல்லாமல் மனதில் தங்கும் காதல் கதையும் இதில் இருக்கிறது.

இந்தப்படத்தில் நடிப்பதற்கு முன் நானும், நானியும் ஏராளமான திரைப்படங்களில் தாய் -மகன் வேடங்களில் நடித்திருக்கிறோம். எனக்கும், ரசிகர்களுக்கும் பிடித்த நடிகர் நானி. படப்பிடிப்பு தளத்தில் நானும், நானியும் பணியாற்றும்போது நிஜமாகவே தாயும் மகனையும் போலவே பழகுவோம். நடந்துகொள்வோம்.

இந்தப் படத்திலும் நானிக்கு தாயாக நடித்திருந்தாலும், அந்த கதாபாத்திரத்திற்கென தனித்தன்மை இருக்கிறது. அதை ரசிகர்களுக்கு திரையில் சொல்லும் விதம் அனைவருக்கும் பிடிக்கும். இந்த படத்தில் கதைதான் ஹீரோ என சொல்லலாம்.

இயக்குநர் விவேக் இந்தப் படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தனித்தன்மையை முன்கூட்டியே தீர்மானித்து, அதனை அவருடைய கற்பனை கண்களில் கண்டு ரசித்து, அதை மட்டுமே திரையில் கொண்டுவந்திருக்கிறார்.

இது படத்திற்கு பின்னணி பேசும்போது உணர முடிந்தது. தொடர்ந்து வெற்றிப் படங்களில் நான் இடம்பெறுவதற்கு விவேக்கை போன்ற இயக்குநர்கள் தான் காரணம் என்பதையும் இங்கே நான் கூற விரும்புகிறேன். ஜூன் 10ஆம் தேதி ‘அடடே சுந்தரா’ வெளியான பிறகு, ரசிகர்கள் அனைவரும் எங்களையும், எங்களது கதாபாத்திரங்களையும் கொண்டாடுவார்கள்.

தொடர்ந்து எனக்கு நல்ல கதாபாத்திரங்களை வழங்கிவரும் தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகினருக்கு நன்றி தெரிவிப்பதுடன், நான் இன்று நல்லதொரு நிலையில் திரையுலகில் பயணிக்கிறேன் என்றால், இதற்கு காரணமாக இருந்த அனைத்து இயக்குநர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

மைத்திரி மூவி மேக்கர்ஸ் எனும் பட நிறுவனத்தின் சார்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம் மொழிகளில் ஜூன் 10-ஆம் தேதியன்று ‘அடடே சுந்தரா’ வெளியாகிறது. தெலுங்கு இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தில் நானி, நஸ்ரியா, நரேஷ், அழகம்பெருமாள், நதியா, ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

நகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு விவேக் சாஹர் இசையமைத்திருக்கிறார். நகைச்சுவைக்கும், காதலுக்கும் முக்கியத்துவம் கொடுத்து தயாராகியிருக்கும் ‘அடடே சுந்தரா’ படத்தின் தமிழ் பதிப்பின் முன்னோட்டம் நேற்று வெளியிடப்பட்டது.