தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான மோகன் பாபுவின் மகளும் பிரபல தெலுங்கு நடிகை மற்றும் தயாரிப்பாளரான லக்ஷ்மி மஞ்சு, தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருவதோடு இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழித்திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
’மறந்தேன் மன்னித்தேன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான லக்ஷ்மி மஞ்சு, தனது நடிப்பு மூலம் பாராட்டு பெற்றார்.
அப்படத்தை தொடர்ந்து மணிரத்னத்தின் ‘கடல்’, ராதாமோகன் இயக்கிய ‘காற்றின் மொழி’ ஆகிய படங்களில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்தவர், அதன் பிறகு மீண்டும் தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழித்திரைப்படங்களில் பிஸியாகி விட்டார்.
தற்போது, மோகன்லாலுடன் ‘மான்ஸ்டர்’ என்ற மலையாளப் படத்தில் நடித்து வரும் லக்ஷ்மி மஞ்சு, தமிழ்ப் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். பிக் பாஸ் தர்ஷன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் படத்தின் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் போலீஸ் வேடத்தில் லக்ஷ்மி மஞ்சு நடித்து வருகிறார்.
எந்த வேடமாக இருந்தாலும் அதில் கச்சிதமாக பொருந்தக்கூடிய நடிகைகளில் லக்ஷ்மி மஞ்சு மிக முக்கியமானவர்.
அதனால் தான் அவர் பல மொழித்திரைப்படங்களில் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.
சில தமிழ்ப் படங்களில் நடித்திருந்தாலும், தனது நடிப்பு மூலம் தமிழ்த் திரையுலகினரிடமும், ரசிகர்களிடமும் பாராட்டு பெற்ற லக்ஷ்மி மஞ்சு, தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்காதது ஏன்? என்ற கேள்வி ரசிகர்களிடமும், தமிழ்த் திரையுலகினரிடமும் எழுவதுண்டு. அந்த கேள்விக்கு தற்போது விடை கிடைத்திருக்கிறது.
ஆம், சமீபத்திய பேட்டி ஒன்றில் “தமிழ்ப் படங்களில் அதிகம் நடிக்காதது ஏன்?” என்ற கேள்வி நடிகை லக்ஷ்மி மஞ்சுவிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த நடிகை லக்ஷ்மி மஞ்சு, “தமிழ்ப் படங்களில் நடிக்க நான் ஆர்வமாகவே இருக்கிறேன். இதுவரை வந்த எந்த ஒரு தமிழ்ப் பட வாய்ப்பையும் நான் நிராகரித்ததில்லை.
அதேபோல், இப்படி தான் நடிப்பேன், இப்படிப்பட்ட வேடத்தில் தான் நடிப்பேன், என்று சொன்னதும் இல்லை. நல்ல வேடமாக இருந்தால், எந்த வேடமாக இருந்தாலும் நான் நடிக்க ரெடியாகவே இருக்கிறேன்.
தமிழ் சினிமாவை பொருத்தவரை, என்னை பலர் அணுகாததற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கிறது.
அதாவது, நான் பெரிய நடிகரின் மகளாக இருப்பதால் தான் என்னை, ஒரு நடிகையாக அணுக யோசிக்கிறார்கள். நான் எப்படி நடந்துக்கொள்வேனோ, என்னை வைத்து எப்படி படமாக்குவது, என்றெல்லாம் யோசிக்கிறார்கள் போலிருக்கிறது.
ஆனால், என்னை பொருத்தவரை நான் நடிகையாக ஒரு படத்தில் கமிட் ஆகிவிட்டால், நடிகையாக மட்டுமே இருப்பேனே தவிர நடிகர் மோகன் பாபுவின் மகளாகவோ அல்லது ஒரு தயாரிப்பாளராகவோ நடந்துக்கொள்ள மாட்டேன். இதுவரை அப்படித்தான் இருக்கிறேன், இனியும் அப்படித்தான் இருப்பேன்.
நான் பல மொழிகளில் நடித்து வந்தாலும் தமிழ்த் திரைப்படங்கள் மீது எனக்கு எப்போதும் தனி மரியாதை உண்டு.
அதனால், தமிழ்ப் படங்களில் நடிக்க நான் ஆர்வமாக இருக்கிறேன். நல்ல கதையாக இருந்தால், எந்த வேடத்திலும் நடிக்க ரெடி. பெரிய படம், சின்ன படம் என்றெல்லாம் பார்க்க மாட்டேன்.
அதனால் தமிழ் திரையுலகினர் என்னை எந்தவித தயக்கமும் இன்றி தாராளமாக அணுகலாம். நானும் தமிழ்ப் படங்களில், சவாலான வேடங்களில் நடிக்க மிக ஆர்வமாக இருக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
லக்ஷ்மி மஞ்சுவின் இந்த விளக்கம் மூலம் இனி அவரை தமிழ் சினிமா இயக்குநர்கள் பலர் அணுகுவார்கள், என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
காரணம், தான் நடிக்கும் கதாப்பாத்திரத்திற்காக கடுமையாக உழைக்க கூடிய லக்ஷ்மி மஞ்சு, தற்போது மோகன்லாலுடன் நடித்து வரும் ‘மான்ஸ்டர்’ படத்திற்காக களரி சண்டைப்பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
’மான்ஸ்டர்’ படத்தில் அவருக்கு பல அதிரடி சண்டைக்காட்சிகள் இருக்கின்றன. அந்த காட்சிகள் ரியலாக இருக்க வேண்டும் என்பதற்காக லக்ஷ்மி மஞ்சு, களறி பயிற்சியில் ஈடுபட்டு வருவதோடு, கடுமையான உடற்பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார். இதனால், படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் அவரை உடற்பயிற்சி கூடத்தில் மட்டுமே பார்க்க முடிகிறது.