ஜெயில் பற்றி வசந்தபாலனின் அப்டேட்

63

ஜி.வி.பிரகாஷ், அபர்ணதி கதாநாயகன், கதாநாயகியாக நடிக்க வசந்தபாலன் இயக்கும் ‘ஜெயில்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ஜெயில் படம் குறித்த அப்டேட்ஸை தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் இயக்குனர் வசந்தபாலன்.

‘‘ஜெயில் திரைப்படத்தின் கடைசி ரீலுக்கான பின்னணி இசை எழுதும் வேலை இன்றிரவு – இப்போது – தான் முடிந்தது.

ஜீவியின் விரல்களில் வழிந்த இசை என் ஆழ்மனஉணர்ச்சியை ஆழம் பார்த்தது. ரசிகனையும் விடாது.

தவிர்க்கமுடியாத விசையொன்றால் ஈர்க்கப்படுபவனைப்போல் இசையின் சுழற்சியில் மனம் முன்னும் பின்னும் பம்பரமாய் சுழன்றாடியது.

காட்சியும் இசையும் ஒன்றையொன்று புதுமண தம்பதி போல கைகோர்த்துக்கொண்டு என் முன் உலாவர என்னையறியாமல் கண்ணீர் விழியில் வழிந்தது.

மிக அழுத்தமாக காட்சி பிம்பம் அந்த பிம்பத்தின் உணர்ச்சி இருமடங்காக ஆக்கும் இசை. என் இசையின் மொழி ஜீவிக்கு எளியதாக புரியும்.

இப்போது கிளைமாக்ஸ் காட்சியை பார்க்கையில் மிக உயர்ந்த இடத்தில் இருந்தது.பின்னணி இசை கோர்ப்பு வேலைகள் பம்பாயில் முடிவுற்று முழுப்படத்தை பார்க்கும் நாளை ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறேன்.

மனதால் ஜீவியை இறுக அணைத்து கொண்டேன். இந்த முறை அர்ச்சுனா உன் இலக்கு தப்பாது என்று மனம் சொன்னது.

காலதேவன் துணையிருக்கட்டும். இசை இருபுறங்களிலுமாக மாறி மாறி ஒலித்து உளமயக்கை உருவாக்கியது. மனம் கொந்தளிப்பு அடங்கியது.

ஜெயில் தன்னுடலையே சிறகாக்கிக்கொண்டு பறக்கும் நாளுக்காய் காத்திருக்கிறது. ஜெயில் தன் விடுதலையை தானே தேடிக்கொள்ளும்’’ வசந்தபாலனின் பதிவு ஜெயில் படத்தின் மீதான நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் பல மடங்காக்கிவிட்டது.