ஆண்டவன் கட்டளை – விமர்சனம்

1173

‘காக்கா முட்டை’யில் ஜெயித்து ‘குற்றமே தண்டனை’யில் சறுக்கிய இயக்குநர் மணிகண்டனின் மூன்றாவது படம்.

வெகுஜன ஹீரோவின் கால்ஷீட் கிடைத்ததும் அஞ்சு ஃபைட்டு, ஆறு பாட்டு என மசாலாத்தனமாக சிந்திப்பதுதான் தமிழ்சினிமா இயக்குநர்களின் வழக்கம்.

மணிகண்டனோ, மசாலாப்பட மாயைக்குள் மாட்டிக்கொள்ளாமல் விஜய்சேதுபதியை வைத்துக் கொண்டு, தன்னுடைய பாணியிலிருந்து இம்மியளவும் தடம் மாறாமல் ‘ஆண்டவன் கட்டளை’யைக் கொடுத்திருக்கிறார்.

அதற்காகவே அவருக்கு நம் கை குலுக்கல்.

ஆண்டவன் கட்டளை…. பாசாங்குகள் இல்லாத மிக யதார்த்தமான எளிமையான கதை.

சின்னச் சின்னதாக முடிச்சுக்களைப்போட்டுக் கொண்டேபோய் இறுதியில் திணறடிக்கும் திரைக்கதை உத்தியில் படத்தை படு சுவாரஸ்யமாகக் கொடுத்திருக்கிறார் மணிகண்டன்.

மதுரைக்கு பக்கமிருக்கிற சின்ன கிராமத்தில் வசிக்கும் விஜய்சேதுபதி கடன் பிரச்சனையில் சிக்கித்தவிக்கிறார்.

டூரிஸ்ட் விசாவில் லண்டனுக்குப்போய் இலங்கை அகதி என்ற அடையாளத்தோடு தங்கினால் செமத்தியாய் சம்பாதிக்கலாம் என்று நமோ நாராயணன் சொன்ன யோசனைப்படி, சென்னைக்கு வருகிறார் விஜய்சேதுபதி. கூடவே யோகி பாபு.

பாஸ்போர்ட் எடுக்கும்போது, லண்டன் விசா கிடைக்க வேண்டும் என்பதற்காக டிராவல் ஏஜென்ட் சொன்னதைக் கேட்டு தனக்கு திருமணமாகிவிட்டது என்றும் மனைவி பெயர் கார்மேக குழலி என்றும் கற்பனையான ஒரு பெயரைக் குறிப்பிடுகிறார்.

அந்த ஒற்றைப்பொய்யால் அடுத்தடுத்து ஒவ்வொரு பிரச்சனையாக எழ, அதை சமாளிக்க ஒரு பொய், அந்தப்பொய்யை சமாளிக்க இன்னொரு பொய், அந்த பொய்யை உண்மையாக்க இன்னொரு பொய் என.. பொய்களை அடுக்கிக் கொண்டே போகும் விஜய்சேதுபதி கடைசியில் என்னாகிறார் என்பதுதான் ஆண்டவன் கட்டளை.

எதையும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செய்ய வேண்டும், குறுக்குவழியைத் தேடக் கூடாது என்ற சின்ன லைனை வைத்துக் கொண்டு முழுப்படத்தையும் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார் மணிகண்டன்.

சென்னையில் வாடகை வீடு குறித்த அவலங்கள், இலங்கை தமிழர் பிரச்சினையில் நம் அரசாங்கத்தின் அணுகுமுறை, விவாகரத்துகள் பெருகிவருவது குறித்தான கவலை என போகிறபோக்கில வேறுபல சமூகப்பிரச்சனைகளையும் தொட்டிருக்கிறார்.

படத்தில் நகைச்சுவை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கான உதாரணப்படங்களில் ஒன்றாகி இருக்கிறது ஆண்டவன் கட்டளை.

விஜய்சேதுபதி, யோகி பாபு இருவரையும் வைத்துக் கொண்டே இயல்பான நகைச்சுவையை கதையோடு இழையவிட்டிருக்கிறார். காமெடிக்கு தியேட்டரில் செம ரெஸ்பான்ஸ்.

‘ஆண்டவன் கட்டளை’யின் பலம் நடிகர் நடிகைகளின் பங்களிப்பு.

முக்கியமாக… விஜய் சேதுபதி. ஆண்டவன் கட்டளை கதையில் வணிக சமரசத்துக்கான எவ்வித மசாலாநெடியும் இல்லை என்பது தெரிந்தும் கதைக்கு தன்னை முழுமையாய் அர்ப்பணித்திருக்கிறார்.

யோகி பாபு காமெடியனாக மட்டுமல்ல குணசித்திர நடிகராகவும் வேறு பரிமாணம் காட்டியிருக்கிறார். அவரது இயல்பான நகைச்சுவைக்கு தியேட்டரில் கைதட்டல் பறக்கிறது.

இவர்கள் மட்டுமல்ல, கார்மேகக் குழலியாக வரும் ரித்திகாசிங்கும் கதாபாத்திரத்தோடு பொருந்திப்போயிருக்கிறார். ஆனாலும், ரெடி டேக் என்பதற்கு முன் ஒரு டம்ளர் இஞ்சிச்சாறை குடித்ததுபோல் எந்நேரமும் உர்ரென்று இருப்பதைத்தான் ரசிக்க முடியவில்லை.

தெரிந்த முகங்கள் மட்டுமல்ல, நேசன் என்கிற இலங்கைத் தமிழர் வேடத்தில் நடித்தவரும், விறைப்பும் முறைப்புமாக விசாரணை அதிகாரியாக வரும் பெயர் தெரியாத அந்த நடிகரும் கூட சபாஷ் போட வைத்திருக்கின்றனர்.

இவர்களைத் தவிர நாசர், சிங்கம் புலி, பூஜா தேவரியா, இயக்குநர் எஸ்.எஸ். ஸ்டான்லி ஆகியோரும் அந்தந்த கதாபாத்திரங்களாகி இருக்கிறார்கள்.

பாடல்கள் இடையூறாகவோ…இடைச்செருகலாகவோ இல்லாமல், காட்சிகளின் ஊடே பின்னணி இசையாகவே படம் முழுக்க பயன்படுத்தப்பட்டுள்ளது.

பழைய படங்களின் பாணியைப் பின்பற்றி பண்ணப்பட்ட படத்தொகுப்பும், யதார்த்தத்தை மீறாத ஒளிப்பதிவும் ஆண்டவன் கட்டளை படத்துக்கு வேறு ஒரு அந்தஸ்தைக்கொடுத்திருக்கிறது.

‘ஆண்டவன் கட்டளை’ – அபூர்வமான படைப்பு.

tamilscreen.com Rating

review-rating-3-good