ஃபஹத் பாசில் நடிக்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ டீசர் வெளியீடு – மாயாஜாலம், நகைச்சுவை, சாகசம் கலந்த புதிய உலகம்!
பன்முகத் திறமை கொண்ட நடிகர் ஃபஹத் பாசில் கதாநாயகனாக நடிக்கும் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் (Don’t Trouble The Trouble)’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை, இந்திய சினிமாவை உலக அரங்கில் உயர்த்திய ‘பாகுபலி’ உள்ளிட்ட பிரம்மாண்ட திரைப்படங்களின் படைப்பாளிகளான எஸ். எஸ். ராஜமௌலி குழுவினர் உருவாக்கியுள்ளனர். Showing Business நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். கார்த்திகேயா, Arka Media Works நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் ஷஷாங்க் யெலேட்டி இயக்கியுள்ள இந்தப் படத்தில், ஃபஹத் பாசில் மையக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபல தயாரிப்பாளர்களான ஷோபு யார்லகட்டா மற்றும் பிரசாத் தேவினேனி ஆகியோரும் தயாரிப்பில் இணைந்துள்ளனர்.
நீண்ட நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த இப்படத்தின் டீசர், படக்குழுவினர் அனைவரும் பங்கேற்ற பிரம்மாண்ட விழாவில் வெளியிடப்பட்டது. வெளியான சில நிமிடங்களிலேயே டீசர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
டீசர், ஒரு சிறுமிக்கு ஃபஹத் பாசில் மேஜிக் செய்து காட்டும் காட்சியுடன் தொடங்குகிறது. இருவருக்கும் இடையேயான அன்பான உறவும், மனதை கவரும் தருணங்களும் பார்வையாளர்களை ஈர்க்கின்றன. பின்னர், அந்தச் சிறுமியை தனது மேஜிக் மூலம் மறையச் செய்து, அதைவிட பெரிய வித்தையை காட்டுவதாக அவர் உறுதியளிக்கிறார். ஆனால் அந்த தருணமே அவரது வாழ்க்கையில் எதிர்பாராத சிக்கல்களின் தொடக்கமாக மாறுகிறது.
அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே படத்தின் சுவாரஸ்யமான கதையாக அமைந்துள்ளது. கற்பனை, நகைச்சுவை, மர்மம் மற்றும் உணர்வுபூர்வமான தருணங்களை இணைத்திருக்கும் டீசர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
ஃபஹத் பாசிலின் இயல்பான நடிப்பும், கலகலப்பான திரை இருப்பும் டீசருக்கு கூடுதல் வலுசேர்க்கின்றன. அவருடன் நடித்துள்ள சிறுமியும் தனது இயல்பான நடிப்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார்.
இசையமைப்பாளர் காள பைரவாவின் பின்னணி இசை டீசரின் மர்மத்தையும் பரபரப்பையும் மேலும் உயர்த்துகிறது. அதேபோல், காட்சிகளின் வண்ணமயமான அமைப்பும், சிறப்பான ஒளிப்பதிவும் திரைப்படத்தின் கற்பனை உலகை உயிர்ப்புடன் வெளிப்படுத்துகின்றன.
மாயாஜாலம், சாகசம், நகைச்சுவை மற்றும் உணர்வுகளை ஒருங்கே கொண்ட குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படமாக ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ உருவாகியுள்ளது.
உலகம் முழுவதும் இந்தத் திரைப்படம் 2026 செப்டம்பர் 11 முதல் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. படம் தொடர்பான கூடுதல் அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.