‘டாடா’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் கணேஷ் கே. பாபு கதை எழுதி, தயாரிப்பாளராகவும் இணைந்துள்ள புதிய சைக்காலஜிக்கல் ஹாரர் திரில்லர் திரைப்படம் ‘டார்க்’. இப்படத்தில் அஜய் கார்த்தி, அஞ்சனா நேத்ரன், நட்டி நட்ராஜ், கே. பாக்யராஜ், சிபி சக்கரவர்த்தி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரவி சக்தி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு மனு ரமேசன் இசையமைத்துள்ளார். ஏ.பி.வி. மாறன், கணேஷ் கே. பாபு மற்றும் கே. செந்தில் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் முன்னோட்ட (Preview) வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் இயக்குநர்கள் பா. ரஞ்சித், கார்த்திக் யோகி, விக்னேஷ் கார்த்திக், மாறன் கார்த்திகேயன், நடிகர்கள் கௌதம் கார்த்திக், ரியோ, கலையரசன், தயாரிப்பாளர் டி. சிவா, ஃபைவ் ஸ்டார் செந்தில் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
விழாவில் பேசிய தயாரிப்பாளர் மணிமாறன், “தமிழ் சினிமாவில் அரிதாக உருவாகும் தரமான சைக்காலஜிக்கல் ஹாரர் திரில்லர்களில் ஒன்றாக ‘டார்க்’ இருக்கும். ஹீரோ அஜய் கார்த்தி தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க புதிய முகமாக உருவெடுப்பார்” என்றார்.
தயாரிப்பாளர் டி. சிவா, “டிரெய்லரிலேயே புதுமை தெரிகிறது. வித்தியாசமான கதைகளை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டு வெற்றிபெறச் செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் ‘டார்க்’வும் வெற்றி பெறும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
நடிகர் ரியோ, “சைக்காலஜிக்கல் திரில்லர் படங்களுக்கு குடும்ப ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு உள்ளது. ‘டார்க்’ டிரெய்லரில் அந்த ஈர்ப்பு தெளிவாக தெரிகிறது” எனக் கூறினார்.
நடிகர் நட்டி நட்ராஜ், “புதுமுக நடிகரான அஜய் கார்த்தி மிகச்சிறப்பாக நடித்துள்ளார். படக்குழுவின் உழைப்பு திரையில் தெளிவாக தெரிகிறது” என பாராட்டினார்.
இயக்குநர் பா. ரஞ்சித், “டிரெய்லர் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. அஜய் கார்த்தியின் திரை இருப்பும், தோற்றமும் வலுவாக உள்ளது. இந்தப் படம் ரசிகர்களை கவரும்” என்று வாழ்த்தினார்.
நடிகை அஞ்சனா நேத்ரன், “முதல் படத்திலேயே அனுபவமிக்க கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியிருப்பது பெரும் வாய்ப்பு. ரசிகர்களுக்கு படம் நிச்சயம் பிடிக்கும்” என்றார்.
நடிகர் கௌதம் கார்த்திக், “டிரெய்லர் மற்றும் காட்சியமைப்புகள் மிகவும் தரமாக உள்ளன. அஜய் கார்த்தி தமிழ் சினிமாவின் புதிய சாக்லேட் பாயாக உருவெடுப்பார்” என்று குறிப்பிட்டார்.
நடிகர் அஜய் கார்த்தி, “இது எனக்கு ஒரு திரைப்படம் மட்டுமல்ல, ஒரு பெரிய கற்றல் அனுபவம். ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் ‘டார்க்’ உருவாகியுள்ளது. அனைவரும் திரையரங்குகளில் வந்து பார்த்து ஆதரவு தர வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
இயக்குநர் கல்யாண் கே. ஜெகன், “புதுமுகங்களாக நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து எங்களால் முடிந்த சிறந்த படைப்பை வழங்கியுள்ளோம்” என்றார்.
தயாரிப்பாளர் மற்றும் கதை ஆசிரியர் கணேஷ் கே. பாபு, “எனது நண்பர்கள் மற்றும் என்மீது நம்பிக்கை வைத்தவர்களுக்கு நன்றிக்கடனாக உருவான திரைப்படம்தான் ‘டார்க்’. அஜய் கார்த்தியின் அர்ப்பணிப்பும், படக்குழுவின் உழைப்பும் இந்தப் படத்தின் பலமாகும்” என்று தெரிவித்தார்.
சைக்காலஜிக்கல் ஹாரர் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள ‘டார்க்’, ரசிகர்களுக்கு வித்தியாசமான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படம் விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.