நடிகர் ராம் சரண் நடிக்கும் படமான ‘பெத்தி’ ஜூன் 4-ஆம் தேதி ரிலீஸ்

0

இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், நடிகர் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள பான்-இந்தியா திரைப்படமான ‘பெத்தி’ வரும் ஜூன் 4-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்துகொண்டு திரைப்படம் குறித்த பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டனர்.

கிராமத்து விளையாட்டு பின்னணியில் உருவாகியுள்ள ‘பெத்தி’, ஒரு கிராஸ்ஓவர் தடகள வீரரின் உணர்வுப்பூர்வமான மற்றும் ஊக்கமூட்டும் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்தது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் படம் வெளியாக உள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய ஒளிப்பதிவாளர் ஆர். ரத்னவேலு, “இயக்குநர் புச்சி பாபு சிறப்பான திரைக்கதையை உருவாக்கியுள்ளார். ராம் சரண் இந்தக் கதாபாத்திரத்திற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளார். அவரது தோற்ற மாற்றங்களும் நடிப்பும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும். மேலும் ஏ.ஆர். ரஹ்மானின் இசை படத்தின் முக்கிய பலமாக இருக்கும்,” என்றார்.

நடிகர் திவ்யேந்து சர்மா, ‘பெத்தி’ திரைப்படம் தனது தெலுங்கு திரையுலக அறிமுகமாக இருப்பதில் மகிழ்ச்சி தெரிவித்தார். இயக்குநர் புச்சி பாபு, ராம் சரண் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்த அவர், இந்தப் படம் தனது திறமையை வெளிப்படுத்த சிறந்த வாய்ப்பாக அமைந்ததாக கூறினார்.

இயக்குநர் புச்சி பாபு பேசுகையில், “இது மிகவும் உணர்வுப்பூர்வமான திரைப்படம். குறிப்பாக இரண்டாம் பாதியில் ராம் சரணின் நடிப்பு பார்வையாளர்களை ஆழமாக கவரும். ஏற்கனவே படத்தைப் பார்த்த பலரும் பாராட்டி வருகிறார்கள். ரத்னவேலுவின் ஒளிப்பதிவும், ஏ.ஆர். ரஹ்மானின் இசையும் படத்திற்கு உலகத் தரத்தை வழங்கியுள்ளன,” என்றார்.

நடிகர் சிவராஜ்குமார், குரு கதாபாத்திரத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். “ராம் சரணுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவம். உடல்நலப் பிரச்சினைகளுக்கிடையிலும் படக்குழு எனக்காக காத்திருந்தது நெகிழ்ச்சியளித்தது. ராம் சரணின் அர்ப்பணிப்பு இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம்,” என்று தெரிவித்தார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், “ராம் சரண் தனது தனித்துவமான இடத்தை உருவாக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் அவர் காட்டிய அர்ப்பணிப்பு ஒவ்வொரு காட்சியிலும் தெரியும். பின்னணி இசைப் பணிகளை சமீபத்தில் நிறைவு செய்தோம். இந்தப் படம் புதிய உற்சாகத்தை அளித்த அனுபவமாக அமைந்தது,” என்றார்.

நடிகர் ராம் சரண், “சென்னை எனக்கு எப்போதும் சிறப்பான நகரம். ‘பெத்தி’ திரைப்படத்திற்காக சுமார் இரண்டரை ஆண்டுகள் உழைத்தோம். இந்தக் கதையை நான் வெறும் நடிகராக அல்ல, மனதார நேசித்து செய்துள்ளேன். குடும்பத்துடன் பார்க்கக்கூடிய, ஊக்கமளிக்கும் திரைப்படமாக இது இருக்கும்,” என்றார்.

மேலும், தமிழ்நாடு முதல்வர் விஜய்க்கு தனது வாழ்த்துகளையும் ராம் சரண் தெரிவித்தார். திரைப்படத் துறையில் உச்சநிலையை அடைந்த பின்னரும் பொதுச் சேவைக்காக அரசியலுக்கு வந்திருப்பது பாராட்டத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ராம் சரண், ஜான்வி கபூர், சிவராஜ்குமார், ஜகபதி பாபு மற்றும் திவ்யேந்து சர்மா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘பெத்தி’ திரைப்படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள பாடல்கள் மற்றும் சமீபத்தில் வெளியான டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.