சாருகேசி படத்தில் ஒய் ஜீ மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜ், சமுத்திரக்கனி, சுஹாசினி மணிரத்னம், தலைவாசல் விஜய், ரம்யா பாண்டியன், ராஜ் ஐயப்பன், மதுவந்தி, லிவிங்ஸ்டன், ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
அருண் ஆர் இந்த படத்தை தயாரிக்க, சுரேஷ் கிருஷ்ணா திரைக்கதை எழுதி இயக்கி உள்ளார். பாடல்கள் மற்றும் வசனம் பா. விஜய் எழுத, தேனிசை தென்றல் தேவா இசையமைத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
சாருகேசி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சத்யராஜ் நேரில் வர முடியாத காரணத்தால் வீடியோ பதிவின் மூலம் அனைவரிடமும் பேசியிருந்தார்.
சத்யராஜ் …
“ஒருநாள் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா எனக்கு தொலைபேசி மூலம் அழைத்து சாருகேசி படத்தில் நான் நடிக்கும் கதாபாத்திரம் பற்றி விவரித்தார். நான் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா என்ற உடன் நடிக்க சம்மதித்து விட்டேன். பா விஜய் சிறப்பான வசனம் எழுதி உள்ளார். ஒவ்வொரு வசனமும் சிறப்பாக இருந்தது. இந்த படத்திற்கு கண்டிப்பா ஒய் ஜி மகேந்திரனுக்கு தேசிய விருது கிடைக்கும். இன்னொரு முக்கியமான துணை கதாபாத்திரத்தில் தலைவாசல் விஜய் நடித்திருக்கிறார்.
சுரேஷ் கிருஷ்ணா முன்பே அந்த கதாபாத்திரத்தை பற்றி சொல்லியிருந்தால் நான் அதில் நடிக்கிறேன் என்று சொல்லி இருப்பேன். அப்படி ஒரு சிறந்த கதாபாத்திரம் அது. அதிகமான ஹீரோயிசம் இருந்தால் தான் படம் வெற்றி அடையும் என்ற நிலை மாறி டூரிஸ்ட் ஃபேமிலி, மாமன், மெட்ராஸ் மேட்னி போன்ற படங்கள் மக்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.
வீடியோ வடிவில் பேசிய சங்கர் மகாதேவன், சாருகேசி படத்தின் விழாவில் கலந்து கொள்ள முடியாதது வருத்தம் அளிக்கிறது. இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா அவர்களுக்கும், தேவாவுக்கும், ஒய் ஜி மகேந்திரனுக்கும் வாழ்த்துக்கள். தற்போது வெளியாகும் படங்களுக்கு மத்தியில் சாருகேசி படம் நிச்சயம் உங்களை கவரும்.” என்று பேசினார்.
வீடியோ வடிவில் பேசிய மோகன்லால், “சாருகேசி படத்தின் விழாவில் கலந்து கொள்ள முடியாதது வருத்தம் அளிக்கிறது. இந்தப் படம் அனைவரிடமும் சென்று மிகப் பெரிய வெற்றி அடைய வேண்டும். படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று பேசினார்.
மதுவந்தி அருண்…
“இந்த மேடையில் நிற்பது ஒரு மகளாகவும், ஒரு அம்மாவாகவும் எனக்கு பெருமை சேர்க்கிறது. ஒரு மேடை நாடகம் சினிமாவாக மாறி உள்ளது. மேடை நாடகத்தின் மீது எனது தந்தைக்கு உள்ள ஆர்வம் தான் எனக்கும் வந்துள்ளது. ரஜினி மற்றும் கமல் உடன் அந்த காலத்தில் நிறைய படங்களில் எனது தந்தை நடித்துள்ளார். பாட்ஷா படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா சாருகேசி படத்தை இயக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. தேவா இந்த படத்திற்கு அற்புதமான இசையை கொடுத்துள்ளார்.
இந்த படத்திற்கு பிறகு அவர் எவ்வளவு பெரிய இசையமைப்பாளர் என்று அனைவரும் புரிந்து கொள்வீர்கள். தமிழ் சினிமாவில் ஒரே படத்தில் மூன்று தலைமுறை நடித்துள்ளது இந்த படத்தில் தான். நானும், எனது தந்தையும் நடித்துள்ளோம். என்னுடைய மகன் ரித்விக் இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறான். ஒரு பாடலும் பாடியுள்ளார். இந்த படத்தை அனைவரும் கண்டிப்பாக திரையரங்கில் பார்த்து பாராட்டவும்.” என்று பேசினார்.
நடிகர் தலைவாசல் விஜய் பேசும்போது, “என்னுடைய வாழ்க்கையில் முக்கியமான படம் இது. ஒய் ஜி மகேந்திரன் அவர்களுடன் நடித்தது மிகவும் பெருமையாக உள்ளது. எனக்கு இந்த கதாபாத்திரத்தை கொடுத்த சுரேஷ் கிருஷ்ணா அவர்களுக்கு நன்றி. நிச்சயம் சாருகேசி படம் மிகப்பெரிய வெற்றியடையும். படம் பார்த்துவிட்டு வெளியே வரும் போது அனைவருக்கும் நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று பேசினார்.
நடிகர் சமுத்திரக்கனி…,
“சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது. இந்த நாடகம் பார்த்ததும் அனைவருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்று தோன்றியது. வாழ்க்கையில் ஒழுக்கமாக இருப்பவர்களை சினிமா என்றும் கைவிடாது. அதற்கு எடுத்துக்காட்டு ஒய் ஜி மகேந்திரன், அவர் எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன். நேரத்திற்கு மரியாதை கொடுப்பவர். எனது குரு பாலச்சந்தருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நடிகர் ஜெயபிரகாஷ் …
“இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த சுரேஷ் கிருஷ்ணா அவர்களுக்கு நன்றி. அவரது இயக்கத்தில் நான் நடித்தேன் என்பது எனக்கு மிகப்பெரிய கௌரவம். அவர் இயக்கிய படங்களை பார்த்தால் அவர் யார் என்று புரியும், ஆனால் அதனை காட்டிக் கொள்ளாமல் இருப்பார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள்” என்று பேசினார்.
Related Posts
நடிகை சுகாசினி…
நீண்ட நாட்கள் கழித்து சாருகேசி படத்தில் தான் நல்ல வசனங்கள் இடம் பெற்றுள்ளது. எனக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார் ஒய் ஜி மகேந்திரன். சாருகேசி நாடகத்தை நான் இரண்டு முறை பார்த்து உள்ளேன். மேடை நாடகத்தை பொறுத்தவரை ஒய் ஜி மகேந்திரன் ஒரு ஜாம்பவான். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. சாருகேசி படம் வாழ்க்கையைப் பற்றி யோசிக்க வைத்தது.” என்று பேசினார்.
நடிகை ரம்யா பாண்டியன் …
” இந்த படம் பார்த்துட்டு அனைவரும் உறவுகளை மதிப்பார்கள். முதல் நாள் படப்பிடிப்பு முடிந்த பிறகு சுரேஷ் கிருஷ்ணா வந்து என்னை பாராட்டினார், அது எனக்கு மிகவும் ஊக்கத்தை கொடுத்தது. ரஜினியை இயக்கிய ஒருவர் என்னை வைத்து இயக்குவது எனக்கு வாழ்நாள் சாதனையாக இருந்தது. படப்பிடிப்பு முழுவதும் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். ஒய் ஜி மகேந்திரன், சுகாசினியுடன் நடித்தது பெருமையாக இருந்தது.” என்று பேசினார்.
தேவா …
“தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் உள்ள சூப்பர் ஸ்டார் படங்களுக்கு இசையமைத்துள்ளேன். இவை அனைத்திலும் எனது வாய்ப்பு கொடுத்தவர் சுரேஷ் கிருஷ்ணா அவர்கள். ஒய் ஜி மகேந்திரன் சாருடன் 45 வருடமாக பயணித்துக் கொண்டிருக்கிறேன். ஒய் ஜி மகேந்திரன் மற்றும் சுகாசினி இந்த படத்தில் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர். இருவரும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளனர். இந்த படத்தில் பாடல்களுக்கு பா. விஜய் அவர்கள் சிறப்பான வரிகளை எழுதி இருக்கிறார், இந்த நாடகத்தை ஒரு படமாக மாற்ற நினைக்க தயாரிப்பாளர் அருண் அவர்களுக்கு பாராட்டுக்கள். அனைவரும் மிகவும் ரசித்து இந்த படத்தை எடுத்துள்ளனர். இந்தப் படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்” என்றார்.
பா விஜய்…
“சில படங்கள் பணத்திற்காக வேலை செய்வோம், சில படங்கள் நம்மளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்பதற்காக வேலை செய்வோம், ஆனால் ஒரு சில படங்கள் மட்டுமே நமது மனதிற்கு நிறைவாக இருக்கும். அப்படி ஒரு படம் தான் சாருகேசி. எனக்கு அங்கீகாரம் வாங்கி கொடுத்தவர் இசையமைப்பாளர் தேவா அவர்கள் தான். மீண்டும் அவருடன் பணிபுரிவது மகிழ்ச்சியாக உள்ளது. 22 வருடமாக ஒய் ஜி மகேந்திரன் சாருடன் பணிபுரிந்து வருகிறேன். சாருகேசி படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த ஒய் ஜி மகேந்திரனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா…,
“ரஜினி இந்த நாடகத்தை பார்த்து பலமுறை ஒய் ஜி மகேந்திரன் அவர்களிடம் சொல்லி இருக்கிறார், இந்த நாடகத்தை படமாக எடுங்கள் என்று. நான் இந்த நாடகத்தை முதல் முறை பார்த்து விட்டு ஒய் ஜி மகேந்திரனிடம் சென்று இந்த கதையை படமாக எடுங்கள் என்று சொன்னேன். ஆனால் எனக்கு ரஜினி இப்படி ஏற்கனவே சொல்லி இருக்கிறார் என்று தெரியாது.
தயாரிப்பாளர் அருண் அவர்கள் நீங்கள் இந்த படத்தை இயக்கினால், நான் தயாரிக்கிறேன் என்று சொன்னார். நாடகத்தை படமாக மாற்றுவது மிகவும் கடினம். சாருகேசி நாடகத்தைப் பார்த்ததும் இரண்டு நாட்களில் திரைக்கதை எழுதி விட்டேன், இசையமைப்பாளராக தேவா அவர்களை கமிட் செய்தோம்.
இந்த படத்தில் பாடல் பாடிய சங்கர் மகாதேவன் அவர்களுக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும். தேவா அவர்கள் இசையமைக்க, அடுத்த நிமிடமே பாடல் வரிகளை எழுதிக் கொடுத்தார் பா விஜய். அதே போல வசனமும் சிறப்பாக எழுதியுள்ளார். பா விஜய்யை சமுத்திரக்கனி, சத்யராஜ் என அனைவரும் பாராட்டினர். சத்யராஜ் அவர்கள் முதல் முறையாக ஒரு படத்தை பார்த்து அழுதது இதுதான் என்று நினைக்கிறேன்.
தலைவாசல் விஜய் சிறப்பாக நடித்துள்ளார். ரம்யா பாண்டியன் நடிப்பை அனைவரும் பாராட்டினர். இந்த படத்திற்கு ஒரு முக்கிய தூணாகவும் மாறி உள்ளார் ரம்யா. ஒய் ஜி மகேந்திரன் அவர்கள் இல்லை என்றால் சாருகேசி என்ற படமே இல்லை. நாடகத்திற்கும், சினிமாவிற்கும் வித்தியாசத்தை புரிந்து கொண்டு சிறப்பான நடிப்பில் வெளிப்படுத்தியுள்ளார். 75 வயதிலும் இவ்வளவு சுறுசுறுப்பாக ஞாபக சக்தியுடன் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. அனைவருக்கும் நன்றி” என்று பேசினார்.
ஒய் ஜி மகேந்திரன்…,
“எனது 75 வயதில் இப்படி ஒரு கதாபாத்திரம் எனக்கு கிடைத்ததற்கு கடவுளுக்கு நன்றி, இந்த படத்தை தயாரிக்க முன் வந்த அருண் அவர்களுக்கு நன்றி. சுரேஷ் கிருஷ்ணா போன்ற இயக்குனர் கிடைப்பது வரம், இன்றைய இளம் இயக்குனர்களுக்கு மத்தியில் சுரேஷ் கிருஷ்ணா அவர்கள் இந்த படத்தை சிறப்பாக எடுத்துக் கொடுத்துள்ளார். இந்த படத்தில் நடித்துள்ள அனைவரும் கேட்டு கேட்டு இந்த படத்திற்குள் வந்துள்ளனர். சாருகேசி நாடகத்தை பார்த்துவிட்டு இந்த படத்தில் நான் இருக்க வேண்டும் என்று தேவா கேட்டு வாங்கினார். சுகாசினி அவர்கள் ஒரு சிறப்பான நடிப்பை படத்தில் கொடுத்துள்ளார்.
அதேபோல தலைவாசல் விஜய் நன்றாக நடித்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் கத்தி, ரத்தம் இன்றி வரும் படம் சாருகேசி. பா. விஜய் இந்த படத்தில் அற்புதமாக வசனம் எழுதியுள்ளார். சாருகேசி படம் முடிந்து அனைவரும் வெளியே வரும் போது மனதிற்கு நிறைவாக இருக்கும். ரஜினிகாந்த் சார் நீண்ட நாட்களாக எனக்கு ஒரு ஆலோசராக இருந்து வருகிறார், அவருக்கு மிகப்பெரிய நன்றி. இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றிகள். நானும் சுரேஷ் கிருஷ்ணாவும் இத்தனை ஆண்டுகள் சினிமாவில் பணம் சம்பாதித்தோம் என்பதை விட, இத்தனை மனிதர்களை சம்பாதித்துள்ளோம் என்பது தான் பெருமை. ” என்று பேசினார்.