தீபாவளி பந்தயத்திலிருந்து விலகிய 2.0 – பின்னணியில் நடந்தது என்ன?

1197

ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன் நடிக்க, ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘2.0’.

இப்படத்துக்கு  நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

தமிழ் சினிமா இதுவரை கண்டிராத வகையில் மிகப் பிரம்மாண்டமான முறையில் 350 கோடி பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தை தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 20 – ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருந்தனர்.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பையும் லைகா நிறுவனத்தினர் வெளியிட்டிருந்தார்கள்!

சென்னை, டெல்லி போன்ற ஊர்களில் 2.0 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

இன்னொரு பக்கம், படத்தின் கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ‘2.0’ படம் தீபாவளி வெளியீட்டிலிருந்து பின்வாங்கி, ஜனவரி 25, 2018 ல் வெளியாகும்.” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக தரத்தில் கிராபிக்ஸ் பணிகளை மேற்கொள்ளவேண்டியிருப்பதால் மேலும் கால அவகாசம் தேவைப்படுகிறது அதனாலேயே இந்த மாற்றம் என்று லைகா தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

ஆனால் உண்மையான காரணம் வேறு என்று படத்துறையில் தகவல் அடிபடுகிறது.

2.0 படத்தை தமிழிலில் மட்டுமல்ல, தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் ஒரே நாளில்… அதாவது தீபாவளி அன்று வெளியிடத் திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில் அமீர்கான் நடித்த  ‘சீக்ரெட் சூப்பர் ஸ்டார்’ படம் தீபாவளி அன்று  வெளியாகிறது.

அமீர்கான் நடித்த தங்கல் உலக அளவில் மிகப்பெரிய வசூலைக்குவித்து மாபெரும் வெற்றியடைந்திருப்பதால், அமீர்கான்  நடித்த சீக்ரெட் சூப்பர் ஸ்டார் படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது.

தியேட்டர்காரர்களும் 2.0 படத்தைவிட  சீக்ரெட் சூப்பர் ஸ்டார் படத்துக்கே முன்னுரிமை கொடுக்கின்றனர்.

இந்த சூழலில் 2.0 படம் தீபாவளிக்கு வெளியானால் போதிய தியேட்டர்கள் கிடைக்காது. அது மட்டுமல்ல, சீக்ரெட் சூப்பர் ஸ்டார் அலையில் 2.0 படம்  காணாமல்போகவும் வாய்ப்பிருக்கிறது.

இதை எல்லாம் கருத்தில் கொண்டுதான், கிராபிக்ஸ் வேலைகள் முடியவில்லை என்ற காரணத்தைச் சொல்லி சாமர்த்தியமாக  2018 ஆம் வருடம் ஜனவரி 25 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

லைகாவின் புத்திசாலித்தனம் இப்படி என்றால், தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் புத்திசாலித்தனம் வேறு மாதிரி.

தீபாவளி வெளியீட்டிலிருந்து ‘2.0’ பின்வாங்கியதைத் தொடர்ந்து, அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தை தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்துள்ளனர்.

ஜூன் 22 ஆம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ஆகஸ்ட் மாதத்தில் இசை வெளியீடு, தீபாவளிக்கு படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.