விஜய்சேதுபதிக்காக இரண்டு வருடங்கள் காத்திருந்த இயக்குநர்

1524

சினிமா  ஹீரோக்கள் சொந்தப்படம் தயாரிக்கிறார்கள் என்றால் மூன்று காரணங்கள்தான் இருக்க முடியும்…

ஒன்று – அவரை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் யாரும் வரவில்லை.

இரண்டு – அவரை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் சம்பாதிக்கும் பணத்தையும் தானே சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசை.

மூன்று – வருமானவரித்துறைக்கு நஷ்டக்கணக்கு காட்டுவதற்காக.

முதல் காரணம் தவிர மற்ற இரண்டு காரணங்களும், மார்க்கெட்டில் உச்சத்தில் இருக்கும்போது சொந்தப்படம் எடுக்கும் ஹீரோக்களுக்கு மட்டுமே பொருந்தும்.

‘மேற்கு தொடர்ச்சிமலை’ என்ற படத்தை விஜய் சேதுபதி தயாரிப்பதற்கு இந்த காரணங்கள் இருக்க வாய்ப்பில்லை.

காரணம்.. இந்தப் படத்தில் அவர் நடிக்கவில்லை. தவிர, இது வழக்கமான மசாலாப்படம் இல்லை.

சர்வதேச அளவில் பல விருதுகளை வென்றுள்ள ‘மேற்கு தொடர்ச்சிமலை’ படத்தை லெனின் பாரதி என்ற புதுமுக இயக்குநர் இயக்கியுள்ளார். இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த ’ஆதலால் காதல் செய்வீர்’ படத்தின் கதாசிரியர்களில் ஒருவராக பணிபுரிந்தவர் இவர்.

இப்படத்துக்கு  இளையராஜா இசையமைத்துள்ளார்.

மேற்கு தொடர்ச்சி மலை படம் பற்றி லெனின் பாரதி  என்ன சொல்கிறார்?

“இந்தப் படத்தின் முழு கதை என்ன என்று தெரியாமலே என் மேல் உள்ள நம்பிக்கையில் விஜய் சேதுபதி இப்படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டார். அவருக்கு படத்தை பற்றி முதல் இருபது நிமிடம் மட்டுமே தெரியும். படத்தின் கதை மேற்கு தொடர்ச்சி மலையைச் சுற்றி நடைபெறும். இந்த படத்தில் கதாநாயகனாக அந்தோணி நடித்துள்ளார். இவர் சில படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார்.

அதே போல் கதாநாயகியாக ஜோக்கர் படத்தில் நடித்துள்ள காயத்ரி கிருஷ்ணா நடித்துள்ளார்.

மலையும் மலை சார்ந்த இடத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை முறையை சொல்லும் படம் இது.

படத்தில் நடித்துள்ள சில முக்கிய கதாபாத்திரங்களில் அந்த கிராமத்து மக்களே நடித்துள்ளார்கள்.

இளையராஜாவும் என் தந்தையும் ஒரே ஊர் நண்பர்கள்,

இந்த படத்தின் கதை எழுதும் போதே அவர்தான் இசையமைக்க வேண்டும் என்று கேட்டு கொண்டேன் அவரும் கதை கேட்டு விட்டு இசை அமைக்க சம்மதித்தார்” என்றார்.

மேற்கு தொடர்ச்சி மலை படத்தை தயாரிக்க விஜய் சேதுபதி  முன்வந்தது ஏன்?

‘’வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் எனக்கு அறிமுகமானவர் அந்தோணி.  அந்த படத்தில் நானும் துணை நடிகராக நடித்திருந்தேன். இயக்குனர் என்னிடம் வந்து கதை சொல்லும்போது என்னிடம் இப்போது பணம் இல்லை எனக்காக கொஞ்சம் காத்திருக்கும்படி சொன்னேன். அதேபோல் அவர் எனக்காக இரண்டு வருடம் என் மேல் நம்பிக்கை வைத்து காத்திருந்தார்.

சர்வதேச விருது உட்பட7 விருதுகளை பெற்றுள்ள இப்படத்தை தயாரித்ததிலும், இசைஞானியுடன் நான் பயணித்ததிலும் பெரும் பங்கு இயக்குனரையே சேரும்” என்கிறார் விஜய் சேதுபதி..