சைலன்ஸ் விமர்சனம்

539

ஆண்டனியும்(மாதவன்), அவரின் வருங்கால மனைவியுமான காது கேளாத, வாய் பேச முடியாத சாக்ஷியும்(அனுஷ்கா) ஒரு வீட்டிற்கு செல்கிறார்கள். 1972ம் ஆண்டு அந்த வீட்டில் ஒரு இளம் ஜோடி கொலை செய்யப்பட்டதாக படத்தின் துவக்கத்திலியே காட்டுகிறார்கள்.

கொலை நடந்த பிறகு யாரும் வசிக்காத அந்த வீட்டில் இருக்கும் ஒரு அரிய ஓவியத்தை பார்த்து வரைய சாக்ஷி ஆசைப்படுகிறார். அதனால் ஆண்டனியும், சாக்ஷியும் அங்கு செல்கிறார்கள். ஆனால் அங்கு ஆண்டனி கொலை செய்யப்படுகிறார். அதுவும் 1972ம் ஆண்டு அந்த வீட்டில் நடந்த கொலை பாணியிலேயே ஆண்டனியும் கொல்லப்படுகிறார். காயம் அடைந்த சாக்ஷி அங்கிருந்து தப்பித்து ஓடி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

தற்போது சியாட்டில் போலீஸ் டிடெக்டிவ் மகாவும்( அஞ்சலி), அவரின் உயர் அதிகாரியான ரிச்சர்டும்( மைக்கேல் மேடிசன்) அறிமுகமாகிறார்கள். அவர்கள் ஆண்டனியின் கொலை குறித்து விசாரணை நடத்த அவருக்கு எதிரிகள் யாருமே இல்லை என்பது தெரிய வருகிறது. விசாரணையை எப்படி தொடர்வது என்று யோசித்த நேரத்தில் மகா சோனாலி(ஷாலினி பாண்டே) ஆண்டனி மற்றும் சாக்ஷியுடன் இருக்கும் புகைப்படத்தை பார்க்கிறார். சோனாலி சாக்ஷியின் சிறுவயது தோழி ஆவார்.

சோனாலி ஆண்டனிக்கு முன்பே மாயமானவர். சோனாலி மாயமானதற்கும், ஆண்டனி கொலை செய்யப்பட்டதற்கும் இடையே என்ன தொடர்பு?

யார் செய்தார், யார் செய்தார் என்று நம்மை கேட்க வைக்க வேண்டிய படம் சைலன்ஸ். ஆனால் படம் அப்படி இல்லை. படத்தில் வரும் டுவிஸ்டுகளை நாமே எளிதாக யூகிக்க முடிகிறது. த்ரில்லை எதிர்பார்த்து சென்றவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

படத்தின் ஹாரர் ஆங்கிள் கூட மெயின்டெய்ன் செய்யப்படவில்லை. அடுத்து நடக்கப் போவதை பார்வையாளர்களே சொல்லும் அளவுக்கு இருக்கிறது. முக்கிய நிகழ்வுகள் அனைத்துக்கும் வாய்ஸ்ஓவர் கொடுக்கப்பட்டுள்ளது.

நடிப்பும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. நடிப்புக்கு பெயர் போன மைக்கேல் மேடிசனின் நடிப்பு கூட எடுபடவில்லை. அனுஷ்காவின் நடிப்பு நன்றாக இருந்தாலும் அவரின் கதாபாத்திரம் வலுவாக இல்லை. ஷாலினி பாண்டே, சுப்புராஜுவின் நடிப்பு ஓகே. மோசமாக எழுதப்பட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடிக்க முயற்சி செய்திருக்கிறார் அஞ்சலி. இது தமிழ், தெலுங்கில் எடுக்கப்பட்ட படம் என்று கூறினாலும், சைலன்ஸ் தமிழில் டப் செய்யப்பட்டது போன்று தான் இருக்கிறது.