தமிழக அரசுக்கு எதிராக வழக்குத் தொடர விஜய் தரப்பு முடிவு! – தலைவா பட விவகாரத்தில் திடீர் திருப்பம்!

2159

விஜய் நடித்த தலைவா படத்தை வெளியிட்டால் திரை அரங்குகளில் குண்டு வைப்போம் என்று ஒரு அமைப்பினரின் மிரட்டல் காரணமாக, தமிழ்நாட்டில் தலைவா படம் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வெளியாகவில்லை. வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் குறிப்பிட்ட தேதியில் தலைவா வெளியானது. இதனால், இப்படத்தின் திருட்டு விசிடிக்கள் புழக்கத்தில் வர ஆரம்பித்துள்ளன.
இந்நிலையில், இன்று தலைவா படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயினும், இயக்குநர் விஜய்யும் சென்னை காவல்துறை ஆணையாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
தலைவா திரைப்படம் ஆகஸ்ட் 9-ம் தேதி உலகமெங்கும் வெளியாக இருந்தது. ஆனால் திரையரங்குகளுக்கு வந்த மொட்டை கடிதங்களாலும், தொலைபேசி மிரட்டல்களாலும் திரையரங்கு உரிமையாளர்கள் தலைவா திரைப்படத்தினை வெளியிட மறுத்து வருகிறார்கள்.
இதனால் தமிழகத்தில் மட்டும் தடைசெய்யப்பட்டு திரைக்கு வெளிவராத சூழல் அமைந்துள்ளது. இதனால் தயாரிப்பாளருக்கும், விநியோகஸ்தர்களுக்கும் மிகுந்த பொருள் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தை தவிர உலகமெங்கும் வெளியான காரணத்தினால் தலைவா திரைப்படம் அனுமதியின்றி இணையதளத்திலும், விசிடி வழியாகவும் தமிழகமெங்கும் புற்றீசல் போல பரவி உள்ளது.
தமிழகத்தில் தலைவா திரைப்படம் வெளிவர பல வகையில் முயற்சித்தும் திரையரங்கு உரிமையாளர்கள் வெளியிடாத காரணத்தினால் தலைவா படத்தில் நடித்த நடிகர் விஜய், சத்யராஜ், அமலாபால் மற்றும் படத்தில் நடித்த நடிகர், நடிகைகளும், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின், இயக்குனர் விஜய், இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் தலைவா திரைப்படம் தமிழகத்தில் உடனடியாக வெளியாக வேண்டி ஆகஸ்ட் 16 அல்லது 17 தேதிகளில் அரசு அனுமதி கொடுக்கும் இடத்தில் அடையாள உண்ணாவிரதம் இருக்க ஒருமனதாக முடிவு செய்துள்ளோம். அதற்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
– என்று தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயினும், இயக்குநர் விஜய்யும் அந்த கடிதத்தில் கோரிக்கைவிடுத்திருக்கிறார்கள்.
இதற்கிடையில். தலைவா படத்துக்கு இப்படியொரு சிக்கல் ஏற்பட்டதற்கு காரணமே தமிழக அரசும், முதல்வர் ஜெயலலிதாவும்தான் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் கொந்தளித்து வருகிறாராம் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன்.
அதுமட்டுமல்ல, தலைவா படத்தை வெளியிட தமிழக முதல்வரிடம் கெஞ்சிக் கொண்டிருப்பதைவிட, தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் திட்டமிட்டு வருகிறாராம். இது தொடர்பாக அவருக்கு வேண்டப்பட்ட சட்ட வல்லுநர்களிடம் ஆலோசித்து வருகிறாராம்.
அதோடு, தலைவா படத்தை வெளியிடக் கோரி ஒவ்வொரு ஊரிலும் பஸ் மறியல், கடை அடைப்பு செய்யச் சொல்லி விஜய் ரசிகர் மன்றத்துக்கு கட்டளையிட்டிருக்கிறாராம்.
யானை தன் தலையில் தானே மண்ணைக் கொட்டிக் கொண்ட கதைதான் ஞாபகத்துக்கு வருது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here