எது கட்டுக்கதை? சொல்லுங்க விஜய்.. சொல்லுங்க!

856

விஜய்-அமலாபால் நடித்த தலைவா படம் கடந்த 9 ஆம் தேதி திரைக்கு வர இருந்தது. தலைவா படம் திரையிடப்பட இருந்த தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததை(?) தொடர்ந்து படத்தை திரையிடுவதற்கு தியேட்டர் அதிபர்கள் மறுத்தார்கள். படத்துக்கு யு சான்றிதழ் கிடைத்தும் வரிவிலக்கும் கிடைக்கவில்லை.

இந்தப் பிரச்சனைக்கு உண்மையான காரணம் தலைவா படத்தில் இடம்பெற்றிருந்த, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தாக்கும் சர்ச்சைக்குரிய அரசியல் வசனங்கள்தான் என்று சொல்லப்பட்டது. விஜய்யின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் திணிக்கப்பட்ட இந்த வசனங்கள் தற்போது நீக்கப்பட்டிருக்கிறது.
அது மட்டுமல்ல, ‘தலைவா’ என்ற டைட்டிலுக்கு கீழே இடம்பெற்றிருந்த ‘டைம் டு லீட்’ (தலைமை தாங்கும் நேரம் வந்து விட்டது) என்ற வாசகமும், படத்தில் இடம்பெற்றிருந்த தமிழ்நாட்டு அரசியலுக்கு நீ தயாராகி விட்டாய் என்ற வசனமும் நீக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து படம் செவ்வாய்க்கிழமை வெளிவருகிறது. தியேட்டர்களில் முன்பதிவு தொடங்கியது.
இந்நிலையில் தலைவா படம் நாளை வெளிவருவதை முன்னிட்டு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து விஜய் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஆகஸ்ட் 9-ந்தேதி வெளிவர வேண்டிய ‘தலைவா’ திரைப்படம், சில அச்சுறுத்தல் காரணமாக தியேட்டர்களில் திரையிட முடியவில்லை. இதனால், கடந்த பத்து தினங்களாக எனக்கு, தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது.
மீடியாக்களில் வந்த பல கட்டுக்கதைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முதல் அமைச்சர் ஜெயலலிதா இந்த பிரச்சினையில் தலையிட்டு ‘தலைவா’ திரைப்படம் சுமூகமாக வெளிவர நடவடிக்கை எடுத்துள்ளார். பல வேலைகளுக்கு நடுவிலும் இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்ட முதல்அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னோடு பொறுமை காத்த அத்தனை ரசிகர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு ‘தலைவா’ திரைப்படத்தை குடும்பத்தோடு தியேட்டரில் பார்த்து ரசிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்”
என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதாவது தலைவா படத்துக்கு ஏற்பட்ட சிக்கலுக்கு அரசும், விஜய் தரப்பும் சொல்லி வந்த புளுகுமூட்டையையும், கட்டுக்கதைகளையும் அம்பலப்படுத்தி உண்மைக்காரணத்தை உலக மக்களுக்கு சொன்னது ஊடகங்கள்தான். இன்று தலைவா படம் வெளிவரவும் ஊடகங்களே காரணம். இந்த உண்மையை மறந்துவிட்டது மட்டுமல்ல, நன்றி மறந்து நாம் (ஊடகங்கள்) கட்டுக்கதைகளை வெளியிட்டதாக அறிக்கை வெளியிடுகிறார் விஜய்.
தலைவா படம் வெளியாகாமல் தடைபட்டதற்கு வெடிகுண்டு மிரட்டல்தான் உண்மையான காரணம், முதல்வரை எரிச்சல்படுத்திய விஷயங்கள் இல்லை என்றால்…
இரண்டு தினங்களுக்கு முன்புவரை தலைவா போஸ்டர்களில் இடம்பெற்றிருந்த டைம் டு லீட் என்ற ஆங்கில வார்த்தைகள் தற்போது நீக்கப்பட்டதற்கு என்ன காரணம்?
சொல்லுங்க விஜய்.. சொல்லுங்க!