அரசாங்கத்திடம் கூறியதையே மத்திய அரசுக்கு கடிதமாக எழுதினேன்- துணைவேந்தர் சூரப்பா

30

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மத்திய அரசு வழங்குவதாக அறிவித்த ‘உயர் சிறப்பு கல்வி நிறுவனம்’ என்ற சிறப்பு அந்தஸ்தை பெறுவதில் தொடர்ந்து பிரச்சினை நீடித்து வருகிறது. அதுதொடர்பாக சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதாக எழுந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது.

இதுதொடர்பாக அரசியல் கட்சிகளும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிப்பதற்காக நிருபர்களை நேற்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உலக தரவரிசையில் இடம்பிடித்து இருந்த அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்கியது. இதற்காக 2017-ம் ஆண்டு அன்றைய உயர் கல்வித்துறையின் முதன்மை செயலாளர் ஒப்புதலுடன் பரிந்துரை கடிதம் வெளிப்படை தன்மையுடன் முறையாக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதை அதிகாரமளிக்கும் குழு ஆய்வு செய்த பின்னர், கடந்த 2018-ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த சிறப்பு அந்தஸ்து மெகா ஆராய்ச்சி நிதி திட்டம் ஆகும். இது நிறுவனத்தின் நிர்வாக கட்டமைப்பை மாற்றி அமைக்க ஏற்படுத்தப்பட்டது அல்ல. இதன் மூலம் மத்திய அரசு தரும் நிதியை கொண்டு ஆராய்ச்சி, கற்பித்தல், கற்றல், புதுமை கண்டுபிடிப்பு போன்ற கட்டமைப்புகளுக்கு பயன்படுத்தப்படும்.

இதுகுறித்து மத்திய அரசு, மாநில அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது. அதற்கு மாநில அரசின் தலைமை செயலாளர் மே 29-ந் தேதி ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதனை அடிப்படையாக வைத்தும், ஏற்கனவே மாநில அரசாங்கத்திடம் என்ன கூறி இருந்தேனோ? அதையும் ஜூன் 2-ந் தேதி நான் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு கடிதமாக எழுதினேன். தனிப்பட்ட முறையில் எந்த கடிதமும் நான் எழுதவில்லை.

மேலும், கடந்த மே 30-ந் தேதி சிறப்பு அந்தஸ்து பெற காலஅவகாசம் கொடுக்கப்பட்டு இருந்ததால், மே 28-ந் தேதி முதல்-அமைச்சரை சந்தித்து அது தொடர்பாக விளக்கம் அளித்தேன். கிட்டத்தட்ட 7 நிமிடங்கள் அதுகுறித்து விளக்கினேன். அப்போது என்ன விளக்கினேனோ அதையேதான் கடிதமாக எழுதினேன்.

இதற்கிடையில் 69 சதவீத இடஒதுக்கீடு பிரச்சினை வந்தபோது கூட நான் அதுபற்றி விளக்கம் கேட்டு பல்கலைக்கழக துணைவேந்தராக நான் கடிதம் எழுதினேன். அதற்கு மத்திய அரசு பதில் எழுதி இருந்தது. அதில் மாநில அரசின் சட்டத்தின்படி எது பின்பற்றப்படுகிறதோ அதற்கு எந்த தடையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. எனவே நிர்வாகம், இடஒதுக்கீட்டில் எந்த பிரச்சினையும் இல்லை என்பது தெளிவாகிவிட்டது. நான் மாநில அரசுடன் தொடர்ந்து தொடர்பில் தான் இருக்கிறேன். 6 முறை முதல்-அமைச்சரையும், அமைச்சரை பலமுறையும் சந்தித்துள்ளேன். சில நாட்களுக்கு முன்பு நான் எழுதிய கடிதம் குறித்து மாநில அரசு என்னிடம் கேட்டது. அதை கொடுத்து இருக்கிறேன். மற்றவர்கள் செய்யமுடியாததை நான் செய்கிறேன். அதனால் எனக்கு மகிழ்ச்சி தான். கல்விக்கான என்னுடைய முயற்சியை நான் தொடருவேன். என் பணியை மகிழ்ச்சியோடு செய்கிறேன். தமிழக அரசும், அண்ணா பல்கலைக்கழகமும் ஒன்றாக இணைந்து பணியாற்றுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து ‘உங்களை பணிநீக்கம் (டிஸ்மிஸ்) செய்ய கவர்னரிடம், முதல்- அமைச்சர் பரிந்துரைக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறாரே? என்று சூரப்பாவிடம் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, ‘சிரித்தபடி, மேல்நோக்கி பார்த்து கைகூப்பி’ எதுவும் பதில் கூறவில்லை.