திரையுலகப் பெண்களுக்காக புதிய சங்கம்… முத்திரையை வெளியிட்ட முன்னணி இயக்குநர்கள்

women-union1

தமிழ்த் திரைத்துறை உருவாகி நூற்றாண்டை கடந்து பயணிக்கும் நிலையில் திரைத்துறையில் பணியாற்றி வரும் அனைத்து தரப்பு பெண்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பா் 11 ஆம் தேதி திரைத்துறையைச் சார்ந்த பெண்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. அதன் பிறகு நடைபெற்ற இரண்டு கட்ட கூட்டத்திற்குப் பிறகு தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

எதற்காக இப்படியொரு அமைப்பு?

“திரைத்துறையில் பெண்களுக்கு சம ஊதியம், சம வேலைவாய்ப்பைப் பெறவும், பாலியல் ரீதியான பாகுபாடு மற்றும் சுரண்டல்களை (Sexual Expectation) களைந்தெறிய வேண்டிய கட்டாயத் தேவையினை வலியுறுத்தக் கூடிய மையமாக இது செயல்பட உள்ளது.

குறிப்பாக பெண் உதவி இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், குழு நடனப் பெண்கள் (Group Dancer’s) பாத்திரம் கழுவும் பெண்கள் போன்றவர்களுக்கு படப்பிடிப்பு தளங்களில் அடிப்படை கழிவறை வசதிகள் கூட புறக்கணிக்கப்பட்ட நிலையில்தான் தங்கள் பணிகளை தொடர்ந்து, மேற்கொண்டு வருகின்றனர்.

காலவரையறையற்று வேலை செய்யும் பெண்களுக்கு முறையான வாகனவசதி, பாதுகாப்பு, மருத்துவ வசதி, குழந்தை காப்பகம் போன்றவை இருப்பதில்லை.

இது மட்டுமல்ல மாதவிடாய், மகப்பேறு காலங்களில் ஏற்படக்கூடிய உடல் உபாதைகள் போன்றவைகள் கூட திரைத்துறையில் இருக்கும் பெரும்பாலானோர் கண்டு கொள்வதில்லை.

பெண்கள் மிகுந்த திறமை வாய்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு சலிப்பூட்டும் வேலையே ஒதுக்கப்படுகிறது. பெண் உதவி இயக்குநராக இருந்தால் உடை அலங்காரத் தொடர்ச்சி (Costume Continuity) பார்ப்பவர்களாகவும் நடிகைகளுக்கு உதவி செய்பவர்களாகவும் மட்டுமே நியமிக்கப்படுகின்றனர்.

பெண் குழு நடனக்காரர்களைப் (Group Dancers) பொறுத்தமட்டில் அங்க அசைவுகளுடன் அரை நிர்வாணத்தில் தங்களின் பணியை மேற்கொள்வதினால் வெறும் ஆளுமையற்றவர்களாகவே நடத்தப்படுகின்றனர்.

பெரும் முதலாளிகளையும், நடிகர்களையும் மட்டுமே நம்பி இருக்கும் இயக்குநர்களால் முதலாளிகளுக்குச் சேவை செய்யும் வகையிலும், நடிகர்களை திருப்திப்படுத்தும் வகையிலும், மட்டுமே திரைப்படங்கள் உருவாக்கப்படுவதினால் எவ்வளவு திறமை மிக்க நடிகைகள் மற்றும் துணை நடிகைகள் இருந்தாலும் சலிப்பூட்டும் தரம் குறைந்த கதாபாத்திரங்களே அவர்களின் மீது திணிக்கப்படுகிறது.

24 சங்கங்கள் என்று சொல்லக்கூடிய திரைத்துறையில் சண்டைப்பயிற்சி இயக்குநர்கள், வாகன ஓட்டுநர்கள், Light Officer போன்ற அங்கங்களில் இன்றளவும் பெண்கள் கால் பதிக்க முடியாதவர்களாவே இருக்கிறார்கள்.

பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் மட்டும் அல்லாது பணியிடங்களில் நடத்தப்படும் ஏற்றத் தாழ்வுகளை களைந்தெறியவும், சம ஊதியம், சம வேலை வாய்ப்பு, வசதி போன்றவற்றுக்காக குரல் கொடுக்கவும் அனைவரும் அமைப்பாக திரள வேண்டிய கட்டாயத் தேவையுள்ளது.” என்கிறார்கள் தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் என்ற அமைப்பை முன்னெடுக்கும் பெண்கள்.

அதன்படி 19 ஜனவரி இயக்குநர்கள் வெற்றிமாறன், பாலாஜி சக்திவேல், கரு. பழனியப்பன், கோபி நாயனார், ஹலிதா ஷமீம், வ. கெளதமன், மிஷ்கின் மற்றும் நடிகை பிந்து மாதவி, காஸ்ட்யூமா் தாட்ஷா, சட்ட ஆலோசகா் சங்கர சுப்பு ஆகியோர் அதிகாரபூா்வ முத்திரையை வெளியிட்டு வாழ்த்த, மார்ச் 8-ம் தேதி அன்று தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் பதிவு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதில் தலைவா், துணைத் தலைவர், செயலாளா், துணைச் செயலாளா், மற்றும் பொருளாளர் உறுப்பினா்களால் ஒரு மனதாக தோ்ந்தெடுக்கப்பட உள்ளனர்.