முதியவர்களை சீக்கிரம் சாகச் சொல்கிற எழவு எடுத்த பாடல்

11

தமிழ்சினிமாவில் எத்தனையோ காதல் கதைகளைக் கண்டிருக்கிறோம். இப்படியும் ஒரு காதலா என அதிர்ச்சியடைய வைக்கும் படமாக வரப்போகிறது விழா என்ற படம்.

சாவு வீட்டில் பறை அடிப்பவனுக்கும், அங்கே ஒப்பாரி வைக்கும் கிழவியின் பேத்திக்கும் காதலாம். படம் முழுக்க சாவு, ஒப்பாரி சத்தம் என இழவு வீட்டில் நடக்கும் காதலை மையமாகக் கொண்டு விழா படத்தை எடுத்திருக்கிறார் புதுமுக இயக்குநர் பாரதி பாலகுமாரன்.

நாளைய இயக்குநர்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இயக்குநர் கே.பாலசந்தர், கமல்ஹாசன் இருவரது பாராட்டுக்களையும் பெற்று முதல் பரிசு பெற்ற உதிரி என்ற குறும்படத்தை இயக்கியவர் இவர். அந்த உதிரி குறும்படமே இப்போது விழாவாக வெள்ளித்திரைக்கு வருகிறது.

பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக மாளவிகா மேனன் அறிமுகமாகிறார்.

ஜேம்ஸ் வசந்தன் இசையில் மதுரையின் மண்வாசனை வீசும் பாடல்கள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளன. அதில் ஒரு பாடல் முதியவர்களை சீக்கிரம் சாகச் சொல்லி வற்புறுத்துகின்றன. வார்த்தை உபயம்..வைரமுத்துவின் மகன் கார்க்கி.

இதில் கொடுமை என்ன தெரியுமா?

குழந்தைகளாக பார்க்க வேண்டிய முதியவர்களை சீக்கிரம் செத்து தொலைக்கச் சொல்கிற இப்பாடலை புதிய சிந்தனை என்பதுபோல் சிலாகித்தார்கள் இசைவெளியீட்டுவிழாவில்.

சுனாமி வந்து மக்கள் செத்து மடிந்தபோதும், மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களின்போதும் கூட படங்களை வெளியிட்டு மக்களின் பணத்தைப் பறிப்பவர்கள்தான் – திரைத்துறையினர்.

மரணம் போன்ற துயரமான நிகழ்வுகளைக் கூட காதலிக்கும் இடமாக எண்ணும் சினிமாக்காரர்களின் சீழ்பிடித்த சிந்தனை என்றைக்கு மாறும்?