விவேகம் படமும்…. வியாழக்கிழமை சென்ட்டிமென்ட்டும்…

vivegam

அமராவதியில் நடிக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே அஜித்குமாருக்கு கடவுள் நம்பிக்கை உண்டுதான்.

ஆனால் இன்றைக்கு எதற்கெடுத்தாலும் சாய்… சாய் என்கிற அளவுக்கு அப்போது பக்தி முற்றவில்லை.

ஏ.எம்.ரத்னத்தின் தயாரிப்பில் அடுத்தடுத்து படங்கள் நடித்தபோதுதான் சாய்பாபா பக்தராக மாறினார் அஜித்குமார்.

ஏற்கனவே சாய்பாபா பக்தரான ஏ.எம்.ரத்னம், தன் வீட்டின் ஒரு பகுதியையே சாய்பாபா ஆலயமாக மாற்றினார்.

அந்த ஆலயத்தை திறந்து வைத்ததே அஜித்குமார்தான்.

அதன் பிறகு சாய்பாபாவின் மகிமையால் அஜித் வாழ்க்கையில் என்ன அதிசயம் நடந்ததோ தெரியவில்லை… சாய்பாபாவின் தீவிரமான பக்தராகிவிட்டார் அஜித்.

தன்னுடைய பக்தியை தான் நடிக்கும் படங்களிலும் கடைபிடிக்கும் அளவுக்கு சாய்பாபாவிடம் சரணாகதி அடைந்துவிட்டார்.

சாய்பாபாவுக்கு வியாழக்கிழமை உகந்த நாள் என்பதால், தன்னுடைய படங்களின் ஃபர்ஸ்ட்லுக், டீசர், டிரெய்லர்களை மட்டுமல்ல, படத்தையும் வியாழக்கிழமைகளில் வெளியிடுவது என்ற சென்டிமென்ட்டுக்குள் செட்டிலாகிவிட்டார்.

‘ஆரம்பம்’ படத்தில் தொடங்கிய இந்த வியாழக்கிழமை சென்ட்டிமென்ட் அந்தப்படத்தைத் தொடர்ந்து இப்போது வரைக்கும் தொடர்ந்து வருகிறது.

‘வீரம்’ படத்தைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் ‘வேதாளம்’ படத்தில் அஜித் நடித்தபோது, அவரும் சாய்பாபா பக்தர் என்பதை அறிந்தார்.

அதன் காரணமாக வேதாளம் படத்திலும் இந்த வியாழக்கிழமை சென்டிமென்ட் தொடர்ந்தது.

சிவா இயக்கத்தில் அஜித் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் ‘விவேகம்’ படத்திலும் இந்த சென்டிமென்ட் தொடர்ந்து வருகிறது.

‘விவேகம்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக், டீசர் தொடர்ந்து டிரைலர் வெளியிடப்பட்டிருப்பதும் வியாழக்கிழமைதான்.

விவேகம் படம் ஆகஸ்ட் 24 ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அதுவும் வியாழக்கிழமைதான்.