விவேகம் – விமர்சனம்

vivegam

விவேகம் என்றால் ஞானம் என்றொரு அர்த்தம் உண்டு. ஞானம் என்றால் அறிவு.

அந்த அறிவை கழற்றி வைத்துவிட்டு முட்டாள்தனமான ஒரு கதையைப் படமாக எடுத்து ரசிகர்களையும் முட்டாளாக்கி இருக்கிறார் இயக்குநர் சிவா.

படம் பார்ப்பவர்களை குற்றுயிரும் குலைஉயிருமாக்கிய இப்படியொரு குப்பைப்படத்தைக் கொடுத்ததில் குற்றவாளி இவர் மட்டுமல்ல, அஜித்தும்தான்.
தனக்கு பின்னால் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருப்பதையும், தன்னிடம் அவர்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள் என்பதையும் அஜித் கொஞ்சம் கூட நினைத்துப்பார்க்கவில்லை என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

பில்லா2, ஆழ்வார், அசல், ஆரம்பம், என்னை அறிந்தால் என இத்தனை ப்ளாப் கொடுத்தும் நம்ம கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் பண்ணும் இந்த அறிவிலிகளுக்கு இது போதும் என்று நினைத்துவிட்டாரோ என்கிற அளவுக்கு இந்த நூற்றாண்டின் மிகச்சிறச்த குப்பைப்படத்தைக் கொடுத்து விஜய் ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய ரசிகர்களுக்கு தீராத அவமானத்தைத் தேடிக்கொடுத்திருக்கிறார் அஜித்.

ரசிகர்களைப் பற்றித்தான் நினைத்துப் பார்க்கவில்லை, வட்டிக்கு வாங்கி 35 கோடி சம்பளம் கொடுத்த தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜனையாவது சற்று நினைத்துப் பார்த்திருக்கலாம்.

மொத்தத்தில், அஜித்தும் சிவாவும் சேர்ந்து தயாரிப்பாளரை மட்டும் காலி பண்ணவில்லை, விவேகம் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களையும், தியேட்டர்கார்களையும் காவு வாங்கியுள்ளனர்.

அஜித்துக்கு சமையல் செய்வது பிடிக்கும். ரெஸ்ட்டாரண்ட்டில் சமைப்பது போல் ஒரு காட்சி.

அஜித்துக்கு நடப்பது பிடிக்கும். படத்தில் அடிக்கடி அவர் நடப்பதுபோல் காட்சிகள்.

அஜித்துக்கு பைக் ஓட்டுவது ரொம்பப் பிடிக்கும். பைக்கில் சாகசம் நிகழ்த்துவதுபோல் ஆக்ஷன் பிளாக் என்று அஜித்தின் பலவீனத்தை பக்காவாக கேட்ச் பண்ணி, விவேகம் கதையை தயாரிப்பாளரின் தலையில் கட்டி 7 கோடியை ‘கேஷ்’ பண்ணியிருக்கிறார் இயக்குநர் சிவா.

விவேகம் படத்தின் கதை என்னவென்று போட்டி வைத்து சரியாகச் சொல்பவர்களுக்கு, அஜித்துக்குக் கொடுத்த 35 கோடியையும் சிவாவுக்குக் கொடுத்த 7 கோடியையும் பிடுங்கி பரிசாகக் கொடுத்துவிடலாம்.

அந்தளவுக்கு குழப்பமான, குத்துமதிப்பாக மட்டுமே புரிந்துகொள்ளுமளவுக்கு கொஞ்சம் கூட தெளிவில்லாத கதை.

விவேகம் படத்தின் கதையை தோராயமாக சொல்ல வேண்டும் என்றால்…

counter terrorism squad என்ற பெயரில் ஒரு குழு இயங்குகிறது. இது யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது? இந்திய அரசின் அமைப்பா? அல்லது இந்திய ராணுவத்தின் துணை அமைப்பா? அல்லது வெளிநாட்டு அமைப்பா? அல்லது சர்வதேச அமைப்பா?

ஒரு மண்ணாங்கட்டியும் புரியவில்லை.

counter terrorism squad ஆபிசைப்பார்த்தாலே காமெடியாக இருக்கிறது.

ஹைடெக் என்ற பெயரில் வீடியோ கேமை அகன்ற திரையில் பார்ப்பதுபோல் கிராபிக்ஸில் காமெடி பண்ணி இருக்கிறார்கள்.

ஆக்ஷன் காட்சிகளில் அஜித் பயன்படுத்தும் ஆயுதங்களும் இதே ரேன்ஜில் இருப்பது இன்னும் காமெடி.

விவேகம் படத்தில் காமெடி இல்லாத குறையை இதுபோன்ற கிராபிக்ஸ் காட்சிகளே போக்கிவிடுகின்றன.

செயற்கையான நிலநடுக்கத்தை ஏற்படுத்தக் கூடிய புளோட்டோனியம் அணுகுண்டு இந்தியாவில் புதைக்கப்பட்டிருப்பதை அறிந்து, அதை அழிக்கப் புறப்படுகிறார் அஜித்.

அந்த ஆபரேஷனில், குற்றவாளியாக நினைத்து தேடப்பட்ட பலே ஹேக்கரான அக்ஷரா ஹாசன் குற்றவாளி இல்லை என்பது தெரியவருகிறது.

அவரை வைத்தே பேரழிவு ஆயுதத்தை செயல் இழக்க வைக்க முயற்சி செய்கிறார் அஜித்.

அதில் அக்ஷரா ஹாசன் கொல்லப்படுவது மட்டுமல்ல, அஜித்தின் சகாக்களான விவேக் ஓபராய், செர்ஜ் குரோசன், அமிலா டெர்சிமெகிக் ஆகியோரே திடீர் வில்லன்களாகி மாறி அஜித்தையும் சரமாரியாக சுட்டுத்தள்ளுகின்றனர்.

நண்பர்களாக  இருந்து துரோகிகளாக மாறியவர்களிடமிருந்து தப்பிக்கும் அஜித் தமிழ்சினிமாவின் அரதப்பழசான ஃபார்முலாவின்படி செகண்ட் ஹாபில் வில்லன்களை பழிவாங்குவதுதான் விவேகம் படத்தின் கதை.

முழுக்க முழுக்க வெளிநாட்டில் படத்தை எடுத்தால் அது ஹாலிவுட் படம் போல் இருக்கும் என்று எந்த அறிவாளி அஜித்துக்கு சொன்னார் என்று தெரியவில்லை.

அதை நம்பி இப்படி ஒரு படத்தில் நடித்த அஜித்தின் விவேகத்தை (அறிவு என்று பொருள் கொள்க) நினைத்தால் அய்யோ பாவம் என்று பரிதாபப்படத்தான் வேண்டியிருக்கிறது.

அறிமுகக்காட்சியில் அதிபயங்கர சாகசங்கள் செய்து ஒரு பொருளை கைப்பற்றுகிறார் அஜித். அதன் விலை 20 ஆயிரம் கோடியாம். அதை உலக நாடுகள் பல சட்டவிரோதமாக தேடுகின்றனவாம்.

அப்படி என்ன பொருள் அது என்று படத்தில் விளக்கம் இல்லை. கதை கேட்கும்போது அஜித்தாவது இயக்குநரிடம் கேட்டிருக்க வேண்டாமா?

செயற்கையான நிலநடுக்கத்தை உண்டாக்குவதற்காக டெல்லியில் புதைக்கப்பட்ட புளுட்டோனியம் அணுகுண்டை ‘ஏன் இன்னும் வெடிக்க வைக்கவில்லை?’ என்று முன்னணி கார்ப்பரேட் கம்பெனிகள் அவசரப்படுத்துவதாகவும் எனவே சீக்கிரம்அதை கண்டுபிடித்து வெடிக்கச் செய்ய வேண்டும் என்று சொல்கிறார் விவேக் ஓபராய் – ஒரு காட்சியில்.

நிலநடுக்கத்தை ஏற்படுத்தி டெல்லியை நாசப்படுத்துவதால் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு என்ன லாபம்?

நிலநடுக்கத்தினால் டெல்லி குலுங்கினால் குறிப்பிட்ட அந்த கார்ப்பரேட் கம்பெனிகளின் கட்டிடங்கள் இடிந்துவிடாதா?

விவேகம் படத்தின் மையப்புள்ளியே புளுட்டோனியம் அணுகுண்டு என்கிற அந்த டிவைஸ் பற்றியதுதான் என்கிறபோது அதைப் பற்றி தெளிவாகச் சொல்ல வேண்டாமா?

இப்படியாக படம் முழுக்க ஏகப்பட்ட நான்சென்ஸ் சீன்ஸ்.

அஜித் காதில் பூச்சுற்றுவதாக நினைத்துக் கொண்டு படம் பார்ப்பவர்களின் காதுகளிலும் பூந்தோட்டம்போட்டிருக்கிறார் இயக்குநர் சிவா.

சுற்றி துப்பாக்கிகள் குறிவைத்திருக்க, சாவகாசமாக நடந்து சென்று பிரம்மாண்டமான அணையில் குதிக்கும் அஜித்தின் அறிமுகக்காட்சி ஒன்றுபோதும் – விவேகம் படம் வௌங்காது என்பதற்கு.

மாஸ் ஹீரோ என்பதால்இதுபோன்ற அறிவுக்குப் புறம்பான காட்சியை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைத்தாரா…. அல்லது தன்னுடைய ரசிகர்கள் எல்லாம் முட்டாள்கள் என்று முடிவெடுத்துவிட்டாரா என்று தெரியவில்லை.

நரைத்ததலைமுடியுடன் அஜித்தைப் பார்க்கும்போது அஜித் அங்கிள் என்று ஆடியன்ஸ் மத்தியிலிருந்து கமெண்ட் வராமல் இருக்க வேண்டுமே என்ற கவலையே வருகிறது.

ஆக்ஷன் காட்சிகளில் நரைத்த தலைமுடி உறுத்தவில்லை என்றாலும், காஜல் அகர்வால் உடனான காதல் காட்சிகள் தாத்தா – பேத்தியை பார்ப்பதுபோல் இருக்கிறது.

தலைமுடி விஷயத்தில் தன் கொள்கையை தல மாற்றிக் கொள்ளாவிட்டால் இனி வரும்காலங்களில் கஷ்டம்தான் – ரசிகர்களுக்கு.

இந்தப்படத்துக்கு காஜல் அகர்வால் எதற்கு?  லட்சுமி ராமகிருஷ்ணனையோ, சரண்யா பொன்வண்ணனையோ கதாநாயகியாக்கி இருந்தால் பட்ஜெட்டில் 1.5 கோடி மிச்சமாகி இருக்கும். அதைவிட, ‘நரைத்த தல’  அஜித்துக்கும் பொருத்தமான ஜோடியாக இருந்திருப்பார்கள்.

கருணாகரனை காமெடியனாக நினைத்து ஒரு சில காட்சிகளில் தலைகாட்ட வைத்திருக்கிறார்கள். ஆனால்  விவேகம் படத்தின் உண்மையான காமெடியன்… விவேக் ஓபராய்தான். நண்பனின் பெருமை பேசிக்கொண்டே வில்லத்தனம் செய்யும் விவேக் ஓபராயின் கேரக்டர்சேஷனை திரைப்படக்கல்லூரிகளில் பாடமாக வைக்கலாம்.

வில்லன் வேடத்தை இவ்வளவு பலவீனமாகவும் பரிகசிக்கும் வகையிலும் எந்தப் படத்திலும் பார்த்ததாக ஞாகமில்லை.

அனிருத்தின் பின்னணி இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு,சண்டை இயக்கம் என விவேகம் படத்தில் பாராட்டத்தக்க அம்சங்கள் இருந்தாலும், அவை அத்தனையும் செத்த பிணத்துக்கு சென்ட் அடித்த கதையாக பயனில்லாமலே போயிருக்கின்றன.

விவேகம் – தமிழ்ராக்கர்ஸில் கூட பார்க்க தகுதியில்லாத படம்.

– ஜெ.பிஸ்மி