அஜித்தின் விசுவாசம் படத்துக்கு ஆபத்து….! – அதிர்ச்சி தகவலை வெளியிட்ட முக்கியப்புள்ளி!

keg

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் தயாரிப்பாளர் கே.இ. ஞானவேல்ராஜா.

இந்த சங்கத்தில் ஏறக்குறைய 17 ஆண்டுகளாக தலைவர் நாற்காலியில் அமர்ந்திருந்த முன்னாள் தலைவர் சிந்தாமணி முருகேசனின் ஆசியுடன், தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஞானவேல்ராஜா தன்னுடைய நம்ம அணியினரை ஊடகங்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

அப்போது பேசிய ஞானவேல்ராஜா, இன்றைய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் இன்றைய தலைவரான அருள்பதி செய்த தகிடுதத்தங்களை பட்டியலிட்டார். அதைக் கேட்ட நமக்கு பகீரென்றிருந்தது.
ஞானவேல்ராஜாவின் பேச்சு இதோ…

“முதலில் இந்த தேர்தல் பற்றிய உட்கட்டமைப்பைச் சொல்லிவிடுகிறேன்.

இது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்திற்கான தேர்தல்.

இதே போன்ற விநியோகஸ்தர்கள் சங்கங்கள் கோவை, சேலம், மதுரை, நெல்லை, திருச்சி என ஆறு இடங்களில் தனித்தனியாக இயங்கி வருகின்றன.

இந்த ஆறு அமைப்புகளும் சேர்ந்து கூட்டமைப்பாகவும் செயல்படுகின்றன.

இந்த கூட்டமைப்பின் தலைவர் செல்வின் ராஜ். இவர் இதுவரை எத்தனை படத்தை விநியோகம் செய்தார் என்று யாருக்குமே தெரியாது. நான் பதினைந்து ஆண்டுகாலமாக இந்தத்துறையில் இருக்கிறேன். அவர் எந்த படத்தை விநியோகம் செய்தார் என்று எந்த உறுப்பினர்களுக்கும் தெரியவில்லை. ஆனால் அவர்தான் இப்போது இந்த விநியோகஸ்தர் கூட்டமைப்பின் தலைவர்.

அவர் அணிந்திருக்கும் உடை, பயணம் செய்யும் பயணச்சீட்டு, சாப்பிடும் சாப்பாடு, தங்கும் விடுதி என அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பவர் அன்புசெழியன்.

அவர் என்ன பேசச் சொல்கிறாரோ அதை மட்டும் பேசுவார். இதற்கு ஒரேயொரு உதாரணத்தை மட்டும் சொல்கிறேன். அதன் பிறகு ஏன் இந்த ஞானவேல்ராஜா தயாரிப்பாளர் சங்க செயலாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துவிட்டு, இந்த விநியோகஸ்தர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் என்பதன் பின்னணியும் காரணமும் அனைவருக்கும் புரிந்துவிடும்.

ஆர்கா மீடியாஸ் என்ற ஹைதரபாத்தைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவனம்தான் பாகுபலி2 படத்தை தயாரித்தது.

இந்த நிறுவனம் தமிழகத்தைச் சேர்ந்த கே புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்திற்கு தமிழக வெளியீட்டு உரிமையும், உலகளவில் தமிழ் மொழியில் வெளியிடும் உரிமையையும் விற்றனர். கே புரடக்ஷன்ஸ் உலக விநியோக உரிமையை பகுதி பகுதியாக பிரிந்து விற்பனை செய்த பிறகு தமிழகத்தின் வெளியீட்டு உரிமையை ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரனுக்கு விற்பதற்காக ஒரு தொகையை நிர்ணயித்து, ஒப்பந்தம் போட்டு, எட்டு கோடி ரூபாய் முன்பணத்தையும் பெற்றுக் கொண்டார்.

இந்தநிலையில், கே புரொடக்ஷன்ஸைச் சேர்ந்த ராஜராஜனுக்கு நெருக்கடி கொடுத்து ஸ்ரீகிரீன் புரடக்ஷன்ஸ் சரவணன் என்பவருக்கு இரண்டாவது ஒப்பந்தத்தை போடவைத்தார் அன்புசெழியன்.
அதாவது ஏற்கனவே ஒரு தொகைக்கு விற்பனை செய்யப்பட்ட படத்தை தற்போதையை தலைவரானஅருள்பதியின் உதவியுடன் செகண்ட் அக்ரீமெண்ட்டை போடப்பட்டது.

அதன் பிறகு. பாகுபலி படத்தின் உரிமையை நான்தான் வாங்கி இருக்கிறேன் என்று ஸ்ரீகிரீன் சரவணன் மூலம் கூட்டமைப்பிடம் ஒரு புகார் கொடுக்க வைக்கின்றனர். அதன் அடிப்படையில் ஆஸ்கார் ரவிச்சந்திரனை பேச்சு வார்த்தைக்கு அழைக்கிறார்கள் கூட்டமைப்பினர்.

இந்தப்படத்திலிருந்து விலகிக் கொள்ளும்படி அவருக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். நீங்கள் வாங்கிய விலையால் உங்களுக்கு நட்டம் ஏற்படும் என்று பயமுறுத்துகின்றனர். அதற்கு ஆஸ்கார் ரவிச்சந்திரன் பரவாயில்லை. எது வந்தாலும் நான் எதிர்கொள்கிறேன் என்கிறார். ஒரு கட்டத்தில் ஆஸ்கார் ரவிச்சந்திரன் மிரட்டப்படுகிறார். வேறு வழியில்லாமல் இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினார்.

அதன் பிறகு ஸ்ரீகிரீன் சரவணன் பாகுபலி2 படத்தை விற்பனை செய்கிறார். அந்த படம் விற்பனையானவுடன் அன்புசெழியன், ஸ்ரீகிரின் சரவணனை லாக் பண்ணுகிறார். சரவணன் வசூல் செய்த தொகையில் 24 கோடி ரூபாயை அன்புசெழியன் எடுத்துக் கொள்கிறார்.
ஸ்ரீகிரீன் சரவணன் தரவேண்டிய கடன்தொகையை வசூலிப்பதற்காக அன்புசெழியன் செய்த ஏற்பாடு.

பாகுபலி2 படத்தின் தமிழக உரிமை முப்பத்துநான்கு கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது. எழுபது கோடி ரூபாய் அளவுக்கு ஷேர் கிடைத்தது. ஆனால் அந்த தயாரிப்பாளருக்கு சேரவேண்டிய சுமார் பதினான்கு கோடி ரூபாய் இன்றைய தேதி வரைக்கும் சேரவில்லை. இதுபோக படத்தின் அதிகப்படியான வசூலான தொகையில் கிடைக்கும் லாபத்தொகையும் அந்த தயாரிப்பாளருக்குக் கொடுக்கவில்லை.

பாகுபலி2 படத்தின் செங்கல்பட்டு உரிமையை அருள்பதி மற்றும் படூர் ரமேஷ் கூட்டணியினர்தான் பெற்றிருந்தார்கள்.எந்தவொரு முன்னணி நட்சத்திரங்கள் படங்கள் தொடங்கினாலும் தமிழகத்திலுள்ள ஆறு விநியோகஸ்தர்கள் சங்கத்தில் ஏதேனும் ஒன்றில் யார் மூலமாகவாது ஒரு பொய்ப்புகார் கொடுக்கவைத்து, அதற்கு கட்டைப்பஞ்சாயத்து பேசி, சுயலாபம் பார்த்து வருகிறார்கள்.

விரைவில் அஜித் நடிக்க உள்ள விசுவாசம் படத்திற்கும் இவர்களால் ஆபத்தும், பஞ்சாயத்தும் வரக்கூடும்.

எனவே தற்போதுள்ள நிர்வாகத்தினர் கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபட்டு, தங்களின் சுயலாபத்திற்காக பாடுபடுவதால் இந்நிர்வாகத்திற்கு எதிராக இந்த முறை நடைபெறும் தேர்தலில் நாங்கள் நம்ம அணி சார்பில் போட்டியிடுகிறோம்.

அத்துடன் விரைவில் நடைபெறவிருக்கும் மதுரை விநியோகஸ்தர் சங்கத்திற்கு நடைபெறும் தேர்தலில் நம்ம அணி போட்டியிடும்.’‘ என்றார்.

இதே கூட்டத்தில் பேசிய மற்றொரு விநியோகஸ்தர், தறபோதைய கூட்டமைப்பினர் அஜித்தை மிரட்டி 2 கோடி பெற்றதாகவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

அடுத்தவன் பணத்தை அபகரிப்பதில் அரசியல்வாதிகளையே மிஞ்சிவிட்டார்களே இந்த விநியோகஸ்தர்கள்….