வெள்ளைக்காரனை வசூலில் மிஞ்சுமா கதாநாயகன்?

vishnu-vishal-studioz-production-no

வெண்ணிலா கபடிகுழு படத்தில் அறிமுகமான விஷ்ணு விஷால் அவ்வப்போது நல்ல படங்களில் நடித்தாலும், அவை வெற்றிப்படமாக மாறவில்லை.

அதனால் சற்று விரக்தியடைந்தவர் வெற்றிப்படத்துக்கான ரூட்டை தேடிப் பிடித்தார்.

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படம் விஷ்ணு விஷால் நினைத்ததுபோலவே வெற்றிப்படமாக அமைந்தது.

இப்போது அதே ஃபார்முலாவில் தன்னுடைய விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் பேனரில் தயாரித்து, அறிமுக இயக்குநரான முருகானந்தம் இயக்கத்தில் கதாநாயகன் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

சுமார் 29 வருடங்களுக்கு முன் 1988 ல், பாண்டியராஜன் நடிப்பில் வெளியான கதாநாயகன் படத்தின் பெயரை தற்போது தன்னுடைய படத்துக்கு சூட்டியிருக்கிறார் விஷ்ணுவிஷால்.
பழைய கதாநாயகன் படத்தைப்போலவே இதுவும் காமெடி படம்தான்.

விஷ்ணுவிஷாலுக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடிக்கும் கதாநாயகன் படத்தில் ஏறக்குறைய இரண்டாவது ஹீரோவைப்போல் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சூரி.
சரண்யா பொன்வண்ணன், ஆனந்த் ராஜ், அருள்தாஸ் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.

வெண்ணிலா கபடி குழு படத்தின் ஒளிப்பதிவாளரான லெக்ஷ்மன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

கதாநாயகன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகை சரண்யா பொன்வண்ணன், “விஷ்ணுவிடம் எந்த ஒரு விஷயத்தையும் கற்றுக் கொள்ள வேண்டிய ஆர்வமும், முயற்சியும் உள்ளது. இது அவரை கண்டிப்பாக அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும்.

இந்தப்படத்தின் இயக்குநர் முருகானந்தம் மிகவும் திறமையானவர். ஒரு நடிகர் மக்களிடத்தில் எந்த மாதிரியான இடத்தை பெற்றிருக்கிறார் என்பதை உணர்ந்து அதற்கேற்ப வேலை வாங்குகிறார். இந்தப்படம் கண்டிப்பாக ஒரு ஃபேமிலி எண்டர்டெய்னராக இருக்கும்.” என்று சொன்னார்.

“இந்தப்படத்தில் முதன் முறையாக ஷேக் கதாபாத்திரத்தில் காமெடியாக நடித்திருக்கிறேன். படத்தின் இயக்குநர் என்னுடன் மரகத நாணயம் படத்தில் நடித்திருந்தார். இப்போது அவர் படத்தில் நான் நடித்திருக்கிறேன். படத்தில் எனது கதாபாத்திரத்தை நன்றாக வடிவமைத்துள்ளார்.” என்றார் நடிகர் ஆனந்த் ராஜ்.

“விஷ்ணு விஷால் ஒரு நல்ல நடிகராக மட்டுமல்ல, ஒரு சிறந்த தயாரிப்பாளராகவும் இருக்கிறார். படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. எங்கள் குழு எப்போதும் நகைச்சுவையாக மகிழ்ச்சியுடன் பணியாற்றினோம்.” என்றார் இயக்குநர் முருகானந்தம்.

கதாநாயகன் படத்தின் நாயகனான நடிகர் விஷ்ணு விஷால் பேசும்போது தன்னுடைய கடந்த காலத்தை நினைவுகூர்ந்து பேசினார்…

“பல தோல்விகளுக்குப் பிறகு வெண்ணிலா கபடி குழு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படம் வெற்றியடைந்தது. முதல் படம் நல்ல பெயரை பெற்று தந்த போதிலும் அடுத்தடுத்த படங்கள் சறுக்கல்களையே தந்தன. எனினும் முயற்சியை கைவிட வில்லை. அந்த முயற்சிதான் என்னுடைய தயாரிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்திற்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தது. அதே மாதிரியான ஒரு தரமான படமாக கதாநாயகன் படம் வந்துள்ளது.”

விழாவில் கதாநாயகன் படத்தின் முன்னோட்டமும், இரண்டு பாடல்காட்சிகளும் திரையிடப்பட்டன.

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் வெற்றியையும் வசூல் சாதனையையும் கதாநாயகன் படம் முறியடிக்கும் என்றே தோன்றுகிறது.

உழைப்பே உயர்வு தரும். ஆல் த பெஸ்ட் விஷ்ணு விஷால்.