தியேட்டர் அதிபர்களுக்கு எதிராக ஒரு தயாரிப்பாளரின் குமுறல்…

vishal

சினிமா தொழிலை சீர்திருத்தப்போவதாக சொல்லிக் கொண்டு சீரியஸாக சில நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார் விஷால்.

அவரது முயற்சிகள் எந்தளவுக்கு பலன் அளிக்கும் என்பது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் விஷாலிடம் தோற்ற தாணு போன்றவர்கள் ஓரணியில் திரண்டு நிற்கிறார்கள்.

தியேட்டர் உரிமையாளர்களையும், விநியோகஸ்தர்களையும் சிண்டு முடிந்துவிட்டு, விஷால் அறிவித்த வேலைநிறுத்தத்துக்கு வேட்டு வைக்கும் வேலையை செய்யத் தொடங்கிவிட்டனர்.

இதற்கான முன்னோட்டம்தான் தமிழ் திரைப்பட வர்த்தக சபை என்ற ஒட்டடை படிந்த சங்கத்தை மீண்டும் தூசு தட்டியது.

விஷாலுக்கு எதிராக அணிதிரள்பவர்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் தயாரிப்பாளர்கள் பிளவுபட்டு நிற்கிறார்கள்.

ஆனாலும் விஷாலுக்கு ஆதரவானவர்களின் எண்ணிக்கைதான் அதிகம்.

அவர்களில் ஒருவர் கஸாலி. சாய்ந்தாடு என்ற படத்தை தயாரித்து இயக்கியுள்ள இவர் விஷாலின் செயல்பாடுகளுக்கு ஆதரவாக தெரிவித்துள்ள கருத்து கவனிக்கத்தக்கதாக இருக்கிறது.

இனி காஸாலியின் வார்த்தைகள்…

gazali-directorஒரு உண்மையான விவசாயிக்குத் தெரியும். களை எது விளை பயிர் எது என்று!

அவ்வாறு தெரியவில்லையென்றால் அவர் நிஜமான விவசாயி அல்ல.

அதுபோல, ஒரு உண்மையான தயாரிப்பாளருக்குத் தெரிய வேண்டும் தன் பொருளை சந்தைப் படுத்துவதற்கு உதவி செய்பவர் யார் என்று.

கசப்பென்றால் கதறியழும் குழந்தைகளல்ல நாம்.

நீண்டகால பார்வை தேவைப்படும் தயாரிப்பாளர்கள்.

சில நடவடிக்கைகள் சில நேரம் கசக்கத்தான் செய்யும்.

ஆனால், நீண்டகால நோக்கில் நிரந்தரப் பயன் தரும்.

சரி, உங்களிடம் இப்போது ஸ்டிரைக் வேண்டுமா என்று கேட்டால் ஒரு தியேட்டர் அதிபராக வேண்டாம் என்பீர்கள்.

காரணம், யாரோ ஒரு தயாரிப்பாளர் பணம் செலவு செய்து படம் தயாரிக்கிறார், அவரே கஷ்டப்பட்டு மீண்டும் பணம் செலவு செய்து கியூபுக்கு அநியாயமாக அளவுக்கதிகமாக பணம் கட்டுகிறார், அவரே மீண்டும் போஸ்டர், பேப்பர், பேனர், டீவி, எஃப் எம், இடையிலிருக்கும் ஏஜண்ட்வரை பணத்தைக் கடன் அல்லது கழுத்தை அறுக்கும் வட்டிக்கு வாங்கி செலவு செய்கிறார்.

தியேட்டர் வைத்திருக்கும் உங்கள் பங்கு என்ன?

உட்கார்ந்த இடத்துக்கு கன்டெண்ட் வருகிறது.

கூட்டம் குறைவாக இருந்தால் பார்க்கிங் வசூலும், கேண்ட்டீன் வியாபாரமும் குறைந்து தியேட்டருக்கு நஷ்டம் என்ற புலம்பல் வேறு!

தியேட்டருக்குக் கூட்டம் ஏன் குறைகிறது என்ற காரணம் உங்களோடு சேர்த்து எல்லோருக்குமே தெரியும்… நன்றாக எடுக்காத சில படங்களைத் தவிர்த்து.

ஒசியில் உள்ளங்கைகளிலும், படித்து கை நிறைய சம்பாதிப்பவனும் திருட்டுத்தனமாகப் பார்த்தால் தியேட்டருக்கு எப்படி வருவான்?

இந்த இழி நிலைக்கு எதிராக சினிமாவின் முக்கிய அங்கமான நீங்கள் போராடியிருக்கிறீர்களா?
வீதிக்கு வந்திருக்கிறீர்களா?

நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்.

சுயநலம் அவசியம் வேண்டும்..

அது வாத்து முட்டைமேல் இருக்கும்வரை பிரச்சனையில்லை.

அந்த வாத்தை வயிற்றை அறுக்கும் சுயநலம்தான் எல்லோருக்குமே கேடு.

இப்போது ஒரு தயாரிப்பாளராகச் சொல்லுங்கள்.. நடவடிக்கை அவசியமா?

வெட்டப்படப் போவது களையா, கிளையா அல்லது மரமா, பயிரா?

இப்போதும் நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள்.

சரி, நாம் எதற்காக, யாருக்காகப் படம் தயாரிக்கிறோம்?

20% நஷ்டப்பட்டால் அது நல்ல தொழில்.

50% நஷ்டப்பட்டால் நிறைய யோசித்து சரி செய்ய வேண்டிய தொழில்.

அதுவே 90% நஷ்டப்பட்டால் அவசியம் மறு யோசனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய தொழில்.

நாம்.. அதாவது தியேட்டர் அதிபர்களோ அல்லது விநியோகஸ்தர்களோ அல்ல, தயாரிப்பாளர்கள் எந்த நஷ்ட நிலையில் இருக்கிறோம்?

கண்ணாடி கொண்டு தேட வேண்டாம் எல்லார் கையிலும் புண்.

மொத்தத்தில் சங்கம் எடுக்கப்போகும் ‘ஆப்பரேசன் வீடிங்- Operation Weeding’ என்ற ஸ்டிரைக் அவசியம் என்பது என் போன்ற தயாரிப்பாளர்களின் நிலைப்பாடு!

– கஸாலி.