போலீஸை நம்பி பிரயோஜனமில்லை…! – திருட்டு டிவிடியை பிடிக்க வரும் ‘விஷாலின் போலீஸ் படை’

vishal-police

நடிகர் சங்கத்தின் செயலாளர், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்ற கிரீடங்கள் தலையில் ஏறுவதற்கு முன்பே, திருட்டு டிவிடி போன்ற பைரசிக்கு எதிரான தன்னுடைய போராட்டத்தை ஆரம்பித்தவர் விஷால்.

காரைக்குடிக்குப் படப்பிடிப்புக்குப் போனபோது, அங்கே அனுமதியில்லாமல் கேபிள் டிவியில் புதுப்படம் ஓடிக்கொண்டிருப்பதைக் கண்டு, நேரடியாக களத்தில் இறங்கி கேபிள் டிவி ஆபரேட்டரை கையும்களவுமாகப் பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தார்.

அதன் பிறகு சாலையில் ஓடுகிற ஆம்னி பஸ்களில் இல்லாம் ஏறி இறங்கி, ‘செக்கர்’ வேலை எல்லாம் பார்த்தார் விஷால்.

உச்சகட்டமாக ஒரு சம்பவம்…

தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய ஒரு இடத்தில் விஷால் நடித்த படமொன்றின் படப்பிடிப்பு.

இயக்குநர், ஆக்ஷன் என்று சொன்னதும் டயலாக் பேசி விஷால் நடிக்க வேண்டும்.

அந்த நேரம் பார்த்து, ஒரு ஆம்னி பஸ் படப்பிடிப்பு நடந்த இடத்தை கடக்க, பஸ்ஸுக்குள் ஏதோவொரு படம் ஓடிக்கொண்டிருப்பதை கண்ட விஷால், டயலாக்கை மறந்து, நடிக்க வேண்டியதை மறந்து, கேமரா ஓடிக்கொண்டிருப்பதை மறந்து எடுத்தாராம் ஓட்டம்.

ஆம்னி பஸ்ஸை துரத்திச் சென்று மடக்கி, பஸ்ஸுக்குள் ஏறி என்ன படம் ஓடுகிறது என்று சோதனையிட்டதெல்லாம் கடந்த கால வரலாறு.

இப்படியாக பைரசிக்கு எதிராக அவதாரம் எடுத்த விஷால், திருட்டு டிவிடியை ஒழித்தே தீருவேன் என்று சபதம் எடுத்தார்.

அவருடைய எண்ணத்துக்கு ஏற்ப, விஷாலின் தலையில் நடிகர் சங்கத்தின் செயலாளர், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என காலம் இரண்டு கிரீடங்களை சூட்டியது.

மனுஷன் சும்மா இருப்பாரா…

பைரசிக்கு எதிராக பெரும் போராட்டமே நடத்திக் கொண்டிருக்கிறார். நேரம் கிடைக்கும்போதெல்லாம், போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்துக்குச் சென்று திருட்டு டிவிடியை தடுக்கும்படி எத்தனையோ தடவை மனு கொடுத்துவிட்டு வந்திருக்கிறார் விஷால்.

ஒரு பிரயோஜனமும் இல்லை.

கள்ளச்சாராயம், விபச்சாரம், சூதாட்டம், போதைபொருள் போன்ற சட்டவிரோத செயல்களை தடுக்க வேண்டிய காவல்துறையினர், அவற்றை எல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்க, மாதாமாதம் மாமூல் என்ற பெயரில் பெரும் தொகையை வாங்கி பங்குபோட்டுக்கொள்கின்றனர்.

இந்தப் பட்டியலில் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக திருட்டு டிவிடிகாரர்களும் இணைந்துவிட்டனர்.

காவல்துறையினருக்கு மாமூல் கொடுத்து வருகிறார்கள்.

மாதந்தோறும் கரன்ஸிக்கட்டுகளைக் கொண்டு வந்து காலடியில் கொட்டும் திருட்டு டிவிடிகாரர்கள் மீது காவல்துறை எப்படி நடவடிக்கை எடுக்கும்?

இந்த உண்மையை மிக சமீபத்தில்தான் உணர்ந்து கொண்டாராம் விஷால்.

எனவே இனி போலீஸை நம்பி பிரயோஜனமில்லை என்ற முடிவுக்கு வந்து புதிய முயற்சியில் இறங்கிவிட்டார்.

அதாவது, ‘திருட்டு டிவிடியை தடுக்க நாமே ஒரு போலீஸ் டிபார்ட்மெண்ட்டை உருவாக்குவது’ என்பதுதான் விஷால் எடுத்த அதிரடி முடிவு.

அதை உடனடியாக செயல்படுத்தவும் தொடங்கவிட்டார்.

பிலிம்சேம்பர் வளாகத்தில் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அலுவலகம் இருக்க, தி.நகர் ஏரியாவில் புதிதாக ஒரு ஆபீஸ் போட்டிருக்கிறார்கள்.

மாதம் 3 லட்சம் ரூபாய் செலவில் இயங்க ஆரம்பித்துள்ளது அந்த ஆபிஸ். முன்னாள் போலீஸ் உயரதிகாரிகள், எக்கச்சக்கமான ஜிம்பாய்ஸ்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

இவர்கள்தான் விஷாலின் போலீஸ் படை.

திருட்டு டிவிடி எங்கெல்லாம் விற்கப்படுகிறதோ… அங்கெல்லாம் ரெய்டு நடத்தி சம்மந்தப்பட்டவர்களை சுளுக்கெடுத்து, போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைப்பதுதான் விஷால் போலீஸ் படையின் வேலை.

இவர்களே களத்தில் இறங்கி சட்டத்தை கையில் எடுப்பதால் ஏதாவது சட்டம் ஒழுங்கு பிரச்சனை, காவல்துறையினரால் பிரச்சனைகள் ஏற்பட்டால், அவற்றை சமாளிப்பதற்காக 20 வக்கீல்கள் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.

இந்த விஷால் போலீஸ் படைக்காக மாதம் 20 லட்சம் செலவிட திட்டமிடப்பட்டிருக்கிறது.

விஷாலின் இந்த அதிரடி முயற்சிக்கு தயாரிப்பாளர்கள் தரப்பில் வரவேற்பும், பாராட்டும் கிடைத்து வரும் அதே நேரத்தில், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பழைய நாட்டாமைகள் செம கடுப்பில் இருக்கிறார்கள்.

விஷாலின் போலீஸ் படைக்கு வெற்றி கிடைக்குமா?

-ஜெ.பிஸ்மி

Tags: