தோல்வியில் முடிந்த முதல்கட்ட பேச்சுவார்த்தை….! – பேரம் படியாததினால் மீண்டும் பேச்சுவார்த்தை?

actor-vishal-press-meet-10

திரையரங்கு கட்டணத்துக்கு மத்திய அரசு விதித்த ஜி.எஸ்.டி.க்குப் பிறகும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள 30 சதவிகித கேளிக்கைவரியை வேறு பெயரில் வசூலிக்க தமிழக அரசு எடுத்த முடிவுக்கு திரையுலகில் எதிர்ப்பு கிளம்பியது.

தொடர்ந்து நடைபெற்ற நான்கு நாள் திரையரங்க வேலைநிறுத்தத்துக்குப் பிறகு தமிழக அரசு – திரையுலகினர் அடங்கிய குழ ஒன்று அமைக்கப்பட்டது.

இந்தக்குழுவின் முதல் கூட்டம் நேற்று தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது.

தமிழக அரசு சார்பில் உள்துறை செயலாளர்கள் மற்றும் தொழில்துறை செயலாளர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில்,தமிழ் திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் அபிராமி ராமநாதன், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் மற்றும் ஃபெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் தமிழ் திரையுலகினர் சார்பில் கலந்து கொண்டார்கள்.

இந்தக் கூட்டத்தில் என்ன பேசப்பட்டது?

“தயாரிப்பாளர்களுக்கு கூடுதல் சுமையாக இருக்கும் கேளிக்கை வரியை ரத்து செய்யச் சொல்லி அரசிடம் கோரிக்கை வைத்திருந்தோம். அது பற்றி இன்றைய கூட்டத்தில் விவாதித்தோம்.

இது குறித்த இறுதி முடிவை ஜூலை 24-ஆம் தேதி நடக்கவுள்ள இறுதிக் கூட்டத்தில் அறிவிப்பதாக சொன்னார்கள். நல்லதொரு முடிவு வரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்.”’ என்று விஷால் தெரிவித்துள்ளார்.

அதே கூட்டத்தில் கலந்து கொண்ட இயக்குநர் ஆர்.கே.செல்வமணியின் பேச்சிலும் நேற்றைய கூட்டத்தின் மீதான நம்பிக்கையின்மையே வெளிப்பட்டிருக்கிறது.

“முதற்கட்ட பேச்சுவார்த்தையில், கேளிக்கை வரி, திரையரங்க கட்டணம் மற்றும் திரைப்படத்துறையை ஒழுங்குபடுத்துவது குறித்து பேசினோம்.

அவர்களுடைய கருத்தைத் தெரிவித்து, சில நிபந்தனைகளையும் விதித்துள்ளார்கள். அதனை மாற்ற முடியாது என்றும் சொன்னார்கள்.

சில விஷயங்களை மட்டும் மீண்டும் பேசலாம் என்றார்கள்.

இது குறித்து திரைப்பட வர்த்தக சபையில் கலந்து ஆலோசித்து, மீண்டும் ஜூலை 24-ம் தேதி பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள உள்ளோம். அந்தக்கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று நம்புகிறேன்.”

விஷால் மற்றும் ஆர்.கே.செல்வமணி இருவரது பேச்சையும் பார்க்கும்போது நேற்று நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துவிட்டது என்பது உறுதியாகிறது.

அதைத்தான் பூசி மெழுகி பூடகமாக சொல்லிஇருக்கிறார்கள்.

முதல்கட்டம் இரண்டாவது கட்டம் என்று எத்தனை கட்டப் பேச்சுவார்த்தை நடந்தாலும், 30 கோடி பிரச்சனை சுமுகமாக முடிந்தால்தான் திரையுலகத்துக்கு சாதகமான முடிவு ஏற்படும் என்பதே யதார்த்தம்.

அதுவரை பேச்சுவார்த்தை என்ற பெயரில் பேரம் நடந்து கொண்டே இருக்கும்..