3.40 கோடி கையாடல், 10 லட்சம் மோசடி – விஷால் மீது அடுத்தடுத்து கிளம்பும் குற்றச்சாட்டுகள்…

vishal_thupparivalan-audio-function-news

தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுவை நடத்தவிடாமல் விஷாலின் எதிரணியினர் செய்த கலாட்டாவினால் கூட்டம் சில நிமிடங்களிலேயே முடிவுற்றது.

நிர்வாகிகளை முதலில் பேசவிட்டு அதன் பிறகு தங்களுடைய எதிர்ப்பை, சந்தேகங்களை, அதிருப்தியை பதிவு செய்ய வேண்டும் என்ற அடிப்படைமரபைக் கூட கடைபிடிக்காமல் அநாகரிகமாக நடந்து கொண்டனர்.

இது சரியான விஷயமா?

விஷால் எதிர்ப்பு அணியைச் சேர்ந்த தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சியிடம் கேட்டால்…

“சங்க பணத்தை கையாடல் பண்ணியிருந்தால் நாங்கள் ஏன் பொதுக்குழுவை கூட்டப் போகிறோம்? என மீடியா முன்பு அன்று சமாளித்துப் பேசினார் விஷால்.

ஆனால் உண்மையில் சங்கப் பணமான 3 கோடியே 40 இலட்சம் கையாடல் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை சங்கத்தில் பொறுப்பிற்கு வந்தவர்கள் யாரும் எஃப் டி யாகப் போடப்பட்ட 7 கோடியே 40 இலட்சத்தில் பத்து வருடங்களாக கைவைத்ததில்லை.

ஆனால் விஷாலும் இதையேதான் ராகவேந்திரா மண்டபத்தில் மீடியா முன்பு சொன்னார். எஃப் டி பணம் எந்தவிதத்திலும் எடுக்கப்படாது. அப்படியே இருக்கும் என்றார்.

அவர் சொன்னபடி நடந்திருந்தால் நேற்று அரையாண்டு கணக்கை சமர்ப்பித்திருக்கலாமே?

ஏன் சமர்ப்பிக்கவில்லை? கணக்கு எங்கே எனக்கேட்டால் தேசியகீதம் பாடி கூட்டத்தை முடிக்கலாம்னு நேற்றுதான் தெரிஞ்சிக்கிட்டோம்.

உண்மையானவர்கள் கணக்கு வழக்கை பிரதியெடுத்து ஒவ்வொருவர் கையிலும் கொடுத்திருந்தால் ஏன் இந்த சத்தம்? சங்கடங்கள் எல்லாம்?

கூச்சல் போடுறாங்க.. திட்றாங்கன்னு வீடியோ எடுத்து அனுப்புறாங்க.. அவருடைய வீட்டுல ஒரு இலட்ச ரூபா காணாமப் போனாலே லபோ திபோன்னு கத்தமாட்டாரா? ஆனா இங்கே வருடக்கணக்காக காப்பாற்றி வந்த 7.40 கோடியில் 3.40 கோடியைக் காணோம்னா கூப்பிட்டு வச்சு கொஞ்சவா செய்வாங்க?

பதவிங்கிற பேர்ல கொள்ளையடிச்சவங்களை நாங்க எப்படி நடத்தணும்னு எதிர்பார்க்கிறீங்க?”

என்று ஆவேசப்பட்ட சுரேஷ் காமாட்சி, விஷாலுக்கு பகிரங்கமாக ஒரு சவாலும்விடுகிறார்.

“3 கோடியே 40 இலட்சத்தை கையாடல் பண்ணியிருக்காங்கன்னு நான் நிரூபிக்கிறேன்.

அவர் எடுக்கவில்லை என்பதை மீடியா முன் நிரூபிக்கத் தயாரா? அவர் எடுக்கவில்லை என நிரூபித்தால் நான் சங்கத்தை விட்டு விலகத் தயார்.

விஷால் எடுத்திருந்தால் சங்கத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்யத் தயாரா?

இது விஷாலுக்கு நான் விடும் நேரடி சவால்.

சவாலை சந்திக்க விஷால் முன்வருவார் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்..”

சுரேஷ்காமாட்சியின் குற்றச்சாட்டு ஒரு பக்கம் இருக்க, விஷாலுடன் நடிக்க வைப்பதாக கூறி, அவருடைய மானேஜரான ராபின் என்பவர், பெங்களூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் 10 லட்சம் பணத்தை வாங்கி ஏமாற்றிவிட்டதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பணத்தை இழந்த அந்த இளைஞர் வாட்ஸ்அப்பில் இது குறித்து தகவல் தெரிவித்திருக்கிறார்.