கலைப்புலி தாணுவிடம் மன்னிப்பு கேட்ட விஷால்… கவுன்சில் எலெக்ஷனுக்காக காம்ப்ரமைஸ்….

vishal1

சில மாதங்களுக்கு முன்  வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த  விஷால்,  “தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் வேஸ்ட் பார்ட்டிகள்… தினமும் ஓசியில் போண்டா பஜ்ஜி சாப்பிடத்தான் லாயக்கு என்கிற ரீதியில் தயாரிப்பாளர் சங்கத்தைப் பற்றி சகட்டுமேனிக்கு கழுவி ஊற்றினார்.

அவர் சொன்ன கருத்துக்களைல் கடுப்பான, தயாரிப்பாளர் சங்கம் விஷால் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தது.

அதன்படி, தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து விஷாலை நீக்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

“தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் வாரப் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தேன். அதில் என்னுடைய சில தனிப்பட்ட கருத்துகளை தெரிவித்து இருந்தேன். இதையடுத்து, என்னை தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து 3 மாதம் இடைநீக்கம் செய்து எஸ்.தாணு உத்தரவிட்டார். எனவே இந்த இடைநீக்க உத்த ரவை ரத்து செய்ய வேண்டும்’’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ‘மனுதாரர் விஷால், தான் தெரிவித்த கருத்து குறித்து வருத்தம் தெரிவித்தால், அவரது இடைநீக்க உத்தரவை திரும்பப் பெறுவது குறித்து பரிசீலிக்கப்படும்’ என்று தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏஆர்எல்.சுந்தரேசன் தெரிவித்தார்.

இந்த வழக்கில் தன்னுடைய தரப்பில் விஷால் அளித்த பதில் மனுவில், “தமிழ் வார இதழில் படத் தயாரிப்பாளர் சங்க நடவடிக்கைகளை பற்றி எனது சொந்தக் கருத்தை தெரிவித்திருந்தேன். அதில், எனது கருத்துகளை, யாரையும் புண்படுத்தவோ, சர்ச்சையை உருவாக்கவோ கூறவில்லை. மேலும், அதே பேட்டியில் நான், தயாரிப்பாளர் சங்கத்தின் எந்தவொரு தனிப்பட்ட நிர்வாகிக்கு எதிராகவும் நான் செயல்படவில்லை எனவும் விளக்கமளித்திருந்தேன், இருப்பினும் சில நிர்வாகிகள், நான் அவர்களை தனிப்பட்ட முறையில் விமர்சித்ததாக கருதினர்.

இந்த சர்ச்சையை மென்மேலும் பெரிதாக்க விரும்பாததாலும், திரையுலகின் பல்வேறு சங்கங்களின் நட்புறவை நீட்டித்துக்கொள்ளவும், என்  பேட்டியில் நான் கூறிய கருத்துகள் எவரையேனும் புண்படுத்தியிருந்தால், எனது வருத்தங்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது நோக்கம் யாரையும் காயப்படுத்துவது அல்ல. மேலும், நான் படத் தயாரிப்பாளர் சங்க விதிமுறைகளை மிகவும் மதித்து நடக்கிறேன். என்னை தற்காலிகமாக, தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து நீக்கியதை திரும்பப் பெற வேண்டுமெனவும், என்னை சங்கத்தில் உறுப்பினராக மீண்டும் சேர்த்துக் கொள்ளவும் கோருகிறேன்.

உயர் நீதிமன்றம், எனது இந்த பிரமாண பத்திரத் தகவல்களைப் பதிவு செய்துகொண்டு, தீர்ப்பு வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்,” என்று விஷால் குறிப்பிட்டுள்ளார்.

விஷால் வருத்தம் தெரிவித்துள்ளதால், மீண்டும் தயாரிப்பாளர் சங்கம் அவரை உறுப்பினராக சேர்த்துக் கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்கத்தைப் பற்றி கடுமையாக பேசி வந்த விஷால் இப்போது திடீரென பல்டி அடித்தது ஏன்?

தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு பிப்ரவரி 5 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. அதை கருத்தில் கொண்டே காம்ப்ரமைஸ் ஆகி இருக்கிறார்.