விஐபி-2 – விமர்சனம்

vip2

கதை –

கட்டுமானத்துறையில் நம்பர் ஒன்னாக இருக்கும் வசுந்தரா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் அதிபரான வசுந்தராவுக்கும், அனிதா கன்ஸ்ட்ரக்ஷனின் என்ஜினியர் ரகுவரனுக்கும் இடையில் நடக்கும் மோதல்தான் விஐபி-2.

சிறந்த பொறியாளர் விருதைப் பெற்ற ரகுவரனின் திறமையைக் கேள்விப்பட்டு, அவர் தன்னுடைய கம்பெனியில் தனக்குக் கீழ் வேலைபார்க்க வேண்டும் என்று என்று நினைக்கிறார் வசுந்தரா.

ரகுவரனோ அவரது அழைப்பை நிராகரிக்கிறார்.

ஹாஸ்பிடல் புராஜெக்ட் ஒன்றை கைப்பற்றுவதில் அடுத்த மோதல்.

அனிதா கன்ஸ்ட்ரக்ஷனுக்கும், வசுந்தரா கன்ஸ்ட்ரக்ஷனுக்குமிடையேயான போட்டியில், ரகுவரனின் திறமையால், அந்த புராஜெக்ட் அனிதா கன்ஸ்ட்ரக்ஷனுக்குக் கிடைக்கிறது.

ஒரு சாதாரண நிறுவனத்தில் வேலைசெய்யும் ரகுவரன், நம்பர் ஒன் நிறுவனத்தை நடத்தி வரும் தன்னை வீழ்த்திவிட்டதாக நினைத்து அவர் மீது வன்மம் கொள்கிறார் வசுந்தரா.

அதன் பிறகு ரகுவரன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் முட்டுக்கட்டை போடுகிறார்.

தன்னால் தன்னுடைய கம்பெனி நஷ்டப்படுவதை விரும்பாமல் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, சொந்தமாக ஒரு நிறுவனத்தை தொடங்குகிறார் ரகுவரன்.

தன்னுடைய சாமர்த்தியத்தால் ரகுவரனின் கம்பெனியை தன் வசப்படுத்துவதன் மூலம் அவரை மீண்டும் ‘வேலையில்லா பட்டதாரி’யாக்குகிறார் வசுந்தரா.

அதன்பிறகு ரகுவரன் எப்படி விஸ்வரூபம் எடுக்கிறார் என்பதே விஐபி2 படத்தின் கதை.

 

கமெண்ட் –

விஐபிக்கும், விஐபி-2க்கும் பெரிய வித்தியாசமில்லை.

முதல் பாகத்தில் ஆண் வில்லனுடன் மோதி ஜெயித்த தனுஷ் இந்தப் படத்தில் கஜோலுடன் மோதி இருக்கிறார்.

தனுஷ் உடைய கேரியரில் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது – ‘வேலையில்லா பட்டதாரி’.

அந்தப் படத்தின் வெற்றியை காசு பண்ண நினைத்தது தப்பில்லை. வலுவான கதை, பரபரப்பான திரைக்கதை என்று தெறிக்கவிட்டிருக்க வேண்டாமா?

தனக்குக் கிடைத்த இரண்டாவது வாய்ப்பையும் வீணடித்திருக்கிறார் இயக்குநர் சௌந்தர்யா ரஜினிகாந்த்.