அஜித் ரசிகர்களுக்கு பதில் சொல்லாதீர்கள்….! – ரசிகர்களுக்கு விஜய்யின் வேண்டுகோள்

mersal-movie-audio-launch-stills-002

விஜய் நடிக்கும் ‘மெர்சல்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு ரஜினி வருகிறார்…

கமல் வருகிறார்… என்று கடந்த சில நாட்களாகவே படத்துறையில் பரபரப்பு.

விஜய் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் சினிமாவுக்கு வந்து 25 வருடங்களாவிட்டன, ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ தயாரிக்கும் 100-ஆவது படம் ‘மெர்சல்’ போன்ற விஷயங்களை முன்னிலைப்படுத்தி விழா நடைபெறவிருப்பதால் கமல், ரஜினி வருகை தர இருப்பதாக சொல்லப்பட்டது.

இந்த யூகங்களுக்கு மாறாக, நேற்று (20-8-17) சென்னையில் நடைபெற்ற மெர்சல் இசைவெளியீட்டு விழாவுக்கு கமல், ரஜினி இருவரும் வரவில்லை.

தனுஷ் தவிர வேறு ஹீரோக்களும் வரவில்லை.

ஆனாலும் இதுவரை நடைபெற்ற இசைவெளியீட்டு விழாக்களின் பிரம்மாண்டங்களை மிஞ்சுகிற வகையில் மெர்சல் படத்தின் இசைவெளியீட்டு விழாவை மிரட்டலாக நடத்தினர்.

விழாவில் வழக்கம்போல் விஜய் புராணம்தான்.

சினிமாத்துறையினருக்கே உரித்தான போலித்தனமான பேச்சுகள்.

அட்லியின் பேச்சோ அதிகப்பிரசங்கித்தனம்.

விஜய்யின் பேச்சுதான் உண்மையாய் உணர்வுபூர்வமாய் இருந்தது.

மெர்சல் படத்தில் பணியாற்றிய படக்குழுவினரை பாராட்டிய விஜய்,

“அட்வைஸ் செய்யும் அளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாது. அதே சமயம், இப்போது சில விஷயங்களை பேசியாக வேண்டும்.”

என்ற பீடிகையோடு பேச்சைத் தொடர்ந்தார்…

“எனது வாழ்க்கையில் நடந்த சில விஷயங்களை உங்களோடு பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.

வெளியூர் செல்லும்போது ரசிகர்களையும், நண்பர்களையும் சந்திப்பேன்.

அப்போது நிறைய விஷயங்கள் என்னோடு பேசுவார்கள், விவாதிப்பார்கள்.

பலரும் என்னைச் சுற்றியிருக்கும் எதிர்மறை விஷயங்களை எப்படி கையாள்கிறீர்கள் என கேட்பார்கள்.

அதை தவிர்த்துவிட்டு, உங்களுடைய வேலையை மட்டும் பார்த்துவிட்டு போய் கொண்டே இருங்கள்.

கத்தி கத்திப் பார்த்துவிட்டு சோர்ந்து போய்விடுவார்கள்.

இது எனது வாழ்க்கையில் நிறைய நடந்துள்ளதால் சொல்கிறேன்.

தேவையில்லாத விஷயங்களுக்கு எல்லாம் பதிலளித்துக் கொண்டு இருக்காதீர்கள். வேண்டாம் நண்பா.”

என்று விஜய் பேசியபோது அரங்கத்தில் நிரம்பியிருந்த விஜய் ரசிகர்களின் ஆரவாரம் அடங்க வெகு நேரமானது.

சமூகவலைத்தளங்களில் தன்னை தரக்குறைவாக விமர்சிக்கும் அஜித் ரசிகர்களைப் பற்றித்தான் விஜய் இப்படி குறிப்பிடுகிறார் என்பதை அவர்கள் புரிந்து கொண்டதுதான்  இத்தனை ஆரவாரத்துக்கும் காரணம்.

தல சொன்னாலும், தளபதி சொன்னாலும்  கேட்கிற ஆட்களா இந்த விசிலடிச்சான்கள்?