தமிழக அரசுக்கு எதிராக அணி திரளும் விஜய் ரசிகர்கள்….!

sarkar

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘சர்கார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது.

அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் புகைபிடிப்பது போன்ற புகைப்படம் இடம் பெற்றது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.

பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தொடர்ந்து டாக்டர் ராமதாஸ் கடுமையான வார்த்தைகளால் விஜய்க்கு எச்சரிகைவிடுத்தார்.

இதனை தொடர்ந்து தமிழக அரசின் சுகாதாரத்துறை நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. “விஜய் புகைபிடிப்பது மாதிரி வெளியாகியுள்ள ‘சர்கார்’ போஸ்டர்களை உடனடியாக நீக்க வேண்டும், இல்லை என்றால் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்”  என்று அதில் தெரிவித்திருந்தது.

எனவே சர்கார் போஸ்டர்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலிருந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் நீக்கியது.

தமிழக அரசின் சுகாதாரத்துறை எடுத்த நடவடிக்கைக்கு சமூகவலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் கடும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

vijay fans

“தான் ரசிக்கும் ஒரு கலைஞனை ஸ்டைலான தோரனையில் காண ஆசைப்படுவது ஒவ்வொரு ரசிகனின் விருப்பமாகும்.

ஆனால் தீயதை பின்பற்றும் மனப்பக்குவமற்றநிலையில் தளபதி விஜய் அவர்களின் ரசிகர்கள் ஒருபோதும் இல்லை. விஜய் அவர்கள் சினிமாவில் புகைபிடிப்பதை ஸ்டைலாக பார்ப்பார்கள் அவ்வளவுதான்.

தமிழ் நாட்டில் மாதம் மாதம் ஒரு பிரச்சனை ,போராட்டம்  இளைஞர்கள் வேலை இல்லாத்திண்டாட்டம், விவசாயப்பிரச்சனை என  இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இதை கண்டுகொள்ளாமல் இருப்பவர்கள் தளபதி விஜயை மட்டும் குறி வைப்பது ஏன்?

சமூக வலைத்தளதில் இருந்து தளபதி விஜய் அவர்களின் (புகை)ப்படத்தை நீக்க முடியும். ஆனால் சமூக மக்களின் மனதில் நீக்க முடியாத அளவிற்கு உச்சத்தில் இருக்கிறார் விஜய்.

விஐபி-யில் தனுஷ் பீடி பற்ற வைப்பதையோ, AAA -ல் சிம்பு பீடி பற்ற வைத்ததையோ, அருவி பட போஸ்டரையே, அசுரவதம் படத்தை பற்றி யாரும் கேட்கவில்லை. தளபதி விஜய் படங்கள் மட்டும் தான் அவர்கள் கண்களுக்கு தெரிகிறது.

யாரை தொட்டால் விளம்பரம் வரும் என அவர்களுக்கு தெரியும். முன்பு ரஜினி தற்பொழுது விஜய் அவ்வளவே!

நீங்கள் தளபதி விஜய் அவர்களின் சர்க்கார் படத்தில் சிகரெட் பிடிப்பதை சுட்டி காட்டியவர்கள் அவர் தூத்துக்குடி சென்று உதவியதை ஏன் சுட்டி காட்டவில்லை? தளபதியை  வைத்து உங்களுக்கு விளம்பரம் தேடி கொள்வதே முக்கிய எண்ணம். பிரச்சனை சிகரெட் இல்லை தளபதி விஜய்தான்!

எத்தனை எதிர்ப்புகள் வரும்? அதனை எதிர்த்து போராட எனக்கு தெம்பு உண்டு என்பது விஜய் அவர்களின் வழி. எதிர்ப்புகள் வருமென தெரிந்தும் சமூக கருத்துக்களை கொண்ட படங்களில் தொடர்ந்து நடிப்பவர் தளபதி  விஜய் அவர்கள். அரசியல் வலைகளும் சூழ்ச்சிகளும் இவரை ஒன்றும் செய்ய முடியாது.”

என்று கடுமையாக கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

அதுமட்டுமல்ல, இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு எதிராக மாவட்டத்தலைநகரங்களில் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டு வருகிறார்களாம்.

இதற்கிடையில் தமிழக அரசின் உத்தரவை தொடர்ந்து நீக்கப்பட்ட விஜய் சிகரெட் பிடிக்கும் புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் தங்களுடைய டிபியாக வைக்கத் தொடங்கியுள்ளனர்.

தன்னுடைய ரசிகர்கள் இப்படி எல்லாம் கொந்தளிப்பதை வேடிக்கை பார்க்கும் விஜய்க்கு ஒரு வார்த்தை…

சிகரெட் பிடிப்பதுபோல் சர்கார் பட போஸ்டர் வெளியிட்டதற்கு வருத்தம் தெரிவித்தால் உங்களுடைய இமேஜ் இன்னும் உயருமே விஜய்?

– ஜெ.பிஸ்மி