விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் பட்ஜெட் 125 கோடி

vijay3

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய் 61 படத்தின் படப்பிடிப்பு தற்போது வெளிநாடுகளில் நடைபெற்று வருகிறது.

இந்தப்படத்தைத் தொடர்ந்து  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் விஜய்.

விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியின்  ‘துப்பாக்கி’  ‘கத்தி’ படங்கள் கமர்ஷியலாக வெற்றியடைந்ததை கருத்தில் கொண்டு இந்தப் படத்தை தயாரிக்க லைகா நிறுவனம் ஆர்வத்தோடு முன்வந்தது.

அதாவது, ஏ.ஆர்.முருகதாஸ் புரடக்ஷன்ஸ் பட நிறுவனம் ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரித்துக் கொடுக்க, கணிசமான லாபம் வைத்து அந்தப் படத்தை பிசினஸ் செய்து கல்லா கட்டலாம் என்ற கனவில்தான் விஜய் 62 படத்தை லைகா  நிறுவனம் தயாரிக்க முன்வந்தது.

இதற்கிடையில் தற்போது மகேஷ்பாபுவை வைத்து ஸ்பைடர் என்ற தெலுங்குப் படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ஸ்பைடர் படத்தின் படப்பிடிப்பு முடிவடைவதற்குள்ளாகவே 150 கோடிக்கு பிசினஸ் செய்யப்பட்டுள்ளது.

எனவே, விஜய்யை வைத்து இயக்க உள்ள படத்துக்கு ஃபர்ஸ்ட் காப்பி விலையாக 125 கோடி என்று நிர்ணயம் செய்தார் ஏ.ஆர்.முருகதாஸ்.

125 கோடி ருபாய் முதலீடு செய்து இந்தப் படத்தை தயாரித்தால் 150 கோடிக்கு குறையாமல் படத்தை பிசினஸ் செய்தாக வேண்டும்.

அதற்கான வாய்ப்பு இல்லை என்பதால், இப்படத்தின் தயாரிப்பிலிருந்து லைகா நிறுவனம் விலகிவிட்டதாக  சொல்லப்படுகிறது.

இந்த தகவல் வெளியானதை அடுத்து, ஸ்ரீக்ரீன் புரடக்ஷன்ஸ் சரவணன்  விஜய் 62 படத்தை வாங்க தூண்டில் போட்டிருக்கிறார்.

பாகுபலி- 2 படத்தின் தமிழக தியேட்டரிகல் ரைட்ஸை வாங்கிய ஸ்ரீக்ரீன் புரடக்ஷன்ஸ் சரவணன், விநியோகஸ்தர்களிடம் வாங்கிய பணத்தை உரியவர்களிடம் கொடுக்காமல் போனதால் பாகுபலி-2 படத்தை திட்டமிட்ட தேதியில் வெளியிடுவதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டது.

தவிர, சசிகலாவின் கணவர் எம்.நடராஜன், வேலூர் தங்கக்கோவில் சாமியார், ஒரிசாவில் பணியாற்றும் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆகியோரின் கருப்புப்பணத்தை வைத்து திரைப்பட வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவர் இவர்.

இதை எல்லாம் கருத்தில் கொண்டு, ஸ்ரீக்ரீன் புரடக்ஷன்ஸ் நிறுவனத்துக்கு படம் தர மறுத்துவிட்டார் ஏ.ஆர்.முருகதாஸ்.

அதே நேரம் 125 கோடி கொடுத்து தன்னுடைய படத்தை வாங்குவதற்கு கோடம்பாக்கத்தில் தயாரிப்பாளர்களும் இல்லை.

இப்படியான சூழலில்தான் விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ்  இணையும் படத்தை தயாரிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் முன் வந்துள்ளது.

சன் பிக்சர்ஸ் படத்தில் நடித்தால் ஆளும்கட்சியின் கோபத்துக்கு ஆளாக வேண்டுமே என்ற சூழல் தற்போது இல்லை என்பதால், விஜய் தரப்பிலும் பச்சைக்கொடி காட்டப்பட்டுவிட்டது.

ரஜினி நடித்த ‘எந்திரன்’ படத்துக்குப் பிறகு படத் தயாரிப்பிலிருந்து விலகியிருந்த ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம்,  தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் படத்தின் மூலம் மீண்டும் படத் தயாரிப்பில் இறங்கவிருக்கிறது.