விஜய் படத்துக்காக விதிமீறல்…! – கவுன்சிலை கழுவி ஊற்றும் தயாரிப்பாளர்கள்…!

dytns8vvmaamsgl

சிறுபடத்தயாரிப்பாளர்களுக்கு ஒரு நியாயம், பெரிய பட்ஜெட் படத்தயாரிப்பாளர்களுக்கு ஒரு நியாயம் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் பாரபட்சமாக நடந்து கொண்டிருப்பதாக எப்போதுமே ஒரு குற்றச்சாட்டு உண்டு.

கடந்த காலங்களில் பல்வேறு சம்பவங்கள் இந்த குற்றச்சாட்டில் உண்மை இருப்பதை புரிய வைத்திருக்கின்றன.

விஷால் தலைவரான பிறகு இந்த குறையையும் குற்றச்சாட்டையும் களைவதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.

தற்போது நடைபெற்றுவரும் ஸ்டிரைக்கும் கூட சிறுபடத்தயாரிப்பாளர்களின் நலன் கருதி… அவர்களுக்கு நன்மை கிடைப்பதற்காகவே என்று சொல்லப்பட்டநிலையில்…

இன்று தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சாயம் வெளுத்திருக்கிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், நடிக்கும் விஜய் 62 படத்தின் படப்பிடிப்பு சென்னையிலிருக்கும் விக்டோரியா ஹாலில் ரகசியமாக நடைபெற்று வருகிறது.

இந்த தகவல் தயாரிப்பாளர்கள் மத்தியில் பரவியதால் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் நடிக்கும் படம்… சன் டி.வி தயாரிக்கும் படம் என்றால் விதியை தளர்த்திவிடுவீர்களா? என்று கவுன்சில் நிர்வாகிகளை வறுத்தெடுத்து வருகிறார்கள்.

விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புக்கு ரகசிய அனுமதி கொடுத்த விவகாரம் தயாரிப்பாளர்கள் மத்தியில் பரவி, நாங்களும் படப்பிடிப்பு நடத்துவோம் என்று பலரும் கிளம்பினால் ஸ்டிரைக் பிசுபிசுத்துப்போய்விடும் என்பதை உணர்ந்து, தயாரிப்பாளர் சங்கத்தின் செயலை நியாயப்படுத்தி வாய்ஸ்மெஸேஜ் ஒன்றை வாட்ஸ்அப்பில் பரவிவிட்டிருக்கிறது கவுன்சில்.

23 ந் தேதியிலிருந்து வெளியூர் மற்றும் வெளிநாட்டில் நடக்கும் படப்பிடிப்புகள் நிறுத்தப்படுகின்றன. அதற்கு முன் தமிழ்நாட்டில் 16 ஆம் தேதியிலிருந்தே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுவிட்டன.

தவிர்க்க முடியாத காரணத்தால் படப்பிடிப்பு வைப்பவர்கள் மட்டும் சங்கத்தில் ஆதாரத்தோடு கடிதம் கொடுத்தால் படப்பிடிப்பு நடத்திக் கொள்ள அனுமதி தரப்படும் என்று ஏற்கனவே கூறப்பட்டதாம்.

அதன் அடிப்படையிலேய சன் டி.வி நிர்வாகமும், மேலும் சில தயாரிப்பாளர்களும் கவுன்சிலுக்கு கடிதம் கொடுத்தார்களாம்.

அதன் அடிப்படையிலேயே விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை நடத்திக்கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டது என்று கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது.

இந்த விளக்கத்தை ஏற்காத நடிகர் சரத்குமார் உட்பட பல தயாரிப்பாளர்கள் வாட்ஸ்அப்பில் கவுன்சிலை கழுவி ஊற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

என்ன விளக்கம் சொன்னால் என்ன?

விஜய் படத்துக்காக விதியை தளர்த்தியதன் மூலம் சிறுபடத்தயாரிப்பாளர்களின் நம்பிக்கையை இழந்துநிற்கிறது தயாரிப்பாளர்கள் சங்கம்.