வெற்றிவேல் – விமர்சனம்

Vetrivel Stills 003

தாரை தப்பட்டை தோல்விப்படத்தைக் கொடுத்த சசிகுமாரின் அடுத்த நம்பிக்கையாக வெளிவந்துள்ள படம் வெற்றிவேல்.

கிராமத்து கதை, கலர் கலர் சட்டை என நவீன ராமராஜனாக வலம் வந்திருக்கிறார் சசிகுமார்.

சரி படத்தின் கதை?

தம்பியின் காதலுக்கு உதவப்போய் தன் காதலை பறிகொடுத்த அண்ணனின் தியாகம்தான் வெற்றிவேல் படத்தின் ‘சுருக்’ கதை.

படிப்பு ஏறாமல் கிராமத்தில் உரக்கடை வைத்திருக்கும் சசிகுமார் மியா ஜார்ஜை காதலிக்கிறார்.

சசிகுமாரின் காதல் வொர்க்அவுட்டாகும் நேரத்தில், சசிகுமாரின் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம்.

சசிகுமாரின் தம்பி ஆனந்த் நாக், பிரபுவின் மகளான வர்ஷாவை காதலிக்கிறார். இவர்களது காதலை பிரபு ஏற்க மறுக்க, திருவிழாவின்போது நண்பர்களுடன் சேர்ந்து வர்ஷாவை கடத்துகிறார் சசிகுமார். ஆனால், கடத்தி வந்த வர்ஷா அல்ல, வேறு பெண்.

வர்ஷாவுக்கு பதிலாக நிகிலாவை கடத்தி வந்துவிட, அதனால் நிகிலாவின் தந்தை தற்கொலை செய்து கொள்கிறார்.

அவரது திருமணமும் நின்று போக, சசிகுமார் நிகிலாவின் கழுத்தில் தாலி கட்டுகிறார்.

பல படங்களில் பார்த்து சலித்துப்போன கதைதான். அதையே, சற்று சுவராஸ்யமாக கொடுக்க முற்பட்டிருக்கிறார் அறிமுக இயக்குநர் வசந்தமணி.

ஹீரோவுக்கு அறிமுகப் பாடல், கதாநாயகியைக் கண்டதும் காதல், தம்பி ராமையாவின் காமெடி, தம்பியின் காதல் பிரச்சனையைத் தீர்க்கப்போய் தானே சிக்கலில் மாட்டுவது என முதல்பாதியில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை.

இரண்டாம்பாதி வழக்கமான ஃபார்முலா சினிமா. நம் யூகத்தை பொய்யாக்காமல் காட்சிகள் நகர்கின்றன.

அதனால் படத்தில் சுவாரஸ்யத்துக்கு வேலையில்லாமல் போய்விடுவது மட்டுமல்ல ஆயாசத்தையும் ஏற்படுத்துகிறது.

க்ளைமேக்ஸிலும் புதுமை இல்லை.

வில்லனிடம் அடிவாங்கி, எம்.ஜி.ஆர். ஸ்டைலில் திருப்பி அடித்துவிட்டு, வில்லன்களுக்கு அட்வைஸ் பண்ணிவிட்டு வரும் வழக்கமான சசிகுமார் பட க்ளைமாக்ஸ்.

பி அன்ட் சி ரசிகர்களை குறிவைத்து வெற்றிவேல் கதையை தேர்வு செய்திருக்கிறார் சசிகுமார்.

ஏ சென்டர் ரசிகனுக்கு நிகராக அவர்களும் வளர்ந்துவிட்டார்கள் என்பதை சசிகுமார் எப்போது உணரப்போகிறாரோ?

படையப்பா உட்பட பல ஹிட் பாடல்களை நகலெடுத்திருக்கிறார்கள்.

சினிமாவுக்கு கதை எழுதும்போது கடிகாரத்தை மட்டுமல்ல காலண்டரையும் பார்க்க வேண்டும்.

வெற்றிவேல் – 80களில் வெளிவந்திருந்தால் பெரிய வெற்றிப்படமாகி இருக்கும்.