இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக….! – விஜய் டிவியில் வேலைக்காரன்….

velaikkaran-movie-stills-1-1

தமிழ்சினிமாவில் தற்போதுள்ள தயாரிப்பாளர்களில் படு ஸ்மார்ட்டாக பிசினஸ் பண்ணும் தயாரிப்பாளர்களில் முக்கியமானவர் எஸ்.ஆர்.பிரபு. தன்னுடைய சாமர்த்தியத்தினால் தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வியாபாரத்தையும் ஸ்மார்ட்டாக செய்து முடித்தார்.

அதாவது படம் ரிலீஸாவதற்கு முன்பே, தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் தெலுங்கு ரைட்ஸை 6 கோடிக்கு விற்றார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங்குக்கு ஒரு கோடி சம்பளம் கொடுத்தது தெலுங்கு ரைட்ஸ் பிசினஸில் அவருக்கு பெரிதும் கை கொடுத்தது மட்டுமல்ல கூடுதல் தொகை கிடைக்கவும் காரணமாக அமைந்தது.

ஓவர்சீஸ் 4 கோடி, டிஜிட்டல் ரைட்ஸ் 5 கோடி, சாட்டிலைட் ரைட்ஸ் 7 கோடி என படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே மொத்த முதலீட்டையும் எடுத்துவிட்டார் எஸ்.ஆர்.பிரபு.

இதில் டிஜிட்டல், மற்றும் சாட்டிலைட் ரைட்ஸ் விற்றதில் எஸ்.ஆர்.பிரபுவின் புத்திகூர்மையைப் பாராட்ட வேண்டும்.

கடந்த நவம்பர் 17 அன்று வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படத்தை, படம் வெளியான 38 ஆவது நாளே அமேசான் பிரைமில் வெளியிட்டுக்கொள்ள அனுமதி கொடுத்துள்ளார். இப்படியொரு கண்டிஷனுக்கு அவர் ஒப்புக்கொண்டதால் டிஜிட்டல் ரைட்ஸ் விற்றதில் சில கோடிகள் கூடுதல் வரவு.

டிஜிட்டல் ரைட்ஸ் விற்பனையில் மட்டுமல்ல, சாட்டிலைட் ரைட்ஸ் விற்பனையிலும் தன்னுடைய சாமர்த்தியத்தைப் பயன்படுத்தி கூடுதல் லாபம் பார்த்துள்ளார் எஸ்.ஆர். பிரபு.

இதற்காக அவர் சிவகார்த்திகேயனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

புரியவில்லை?

சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படத்தை முதலில் வினாயகர் சதுர்த்தி அன்று வெளியிட திட்டமிட்டனர். பின்னர், ஆயுதபூஜைக்கு ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. இந்த தேதியின் அடிப்படையில் வேலைக்காரன் படத்தை வரும் 2018 பொங்கலுக்கு டிவியில் ஒளிபரப்பிக் கொள்ளும் நிபந்தனையுடன் சாட்டிலைட் ரைட்ஸை விஜய் டிவிக்கு  16 கோடிக்கு விற்றனர்.  சிவகார்த்திகேயனின் முந்தையப்படமான ரெமோவின் சாட்டிலைட் ரைட்ஸ் 8 கோடிக்குத்தான் விலைபோனது. ரெமோவின் விலையோடு ஒப்பிடும்போது வேலைக்காரன் படத்துக்குக் கொடுக்கப்பட்டது மிகப்பெரிய தொகை. இரண்டு மடங்கு.

வேலைக்காரன் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் அக்ரிமெண்ட் கையெழுத்தான உடனே சுறுசுறுப்பான விஜய் டிவியின் மார்க்கெட்டிங் டீம் களத்தில் இறங்கி, பொங்கலுக்கு வேலைக்காரன் ஒளிபரப்பு என்று சொல்லி, விளம்பரங்களை வாங்கிக்குவித்தது.

இந்தநிலையில், வேலைக்காரன் படத்தின் ரிலீஸ் திடீரென டிசம்பர் 22 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

அதனால் பொங்கல் அன்று விஜய் டிவியில் வேலைக்காரன் ஒளிபரப்பாக  வாய்ப்பில்லாமல் போக, அதிர்ச்சியடைந்தது சேனல் நிர்வாகம்.

பொங்கலுக்கு ஏதாவது ஒரு புதுப்படம் போட்டே ஆக வேண்டிய நெருக்கடியில் விஜய் டிவி இருந்த நேரத்தில்தான் தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் சாட்டிலைட் பிசினஸை முடித்தார் எஸ்.ஆர். பிரபு.

வேலைக்காரன் ஒளிபரப்பாக வேண்டிய அதே பொங்கலுக்கு தீரன் அதிகாரம் ஒன்று படம் ஒளிபரப்பு என்ற அடிப்படையில் 7 கோடிக்கு சாட்டிலைட் ரைட்ஸ் பிசினஸ் முடிக்கப்பட்டது.

பொங்கலுக்கு ஒளிபரப்பாக வேண்டிய வேலைக்காரன் படம் ஏப்ரல் 14 – தமிழ்ப்புத்தாண்டு அன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.

வேலைக்காரன் படத்தை குடும்பத்தோடு பார்க்க விரும்புகிறவர்கள், சில வாரங்கள் காத்திருந்தால் பைசா செலவில்லாமல் ஓசியிலேயே பார்க்கலாம்.