வல்ல தேசம் – விமர்சனம்

valldesam

லண்டனில் திரைப்பட இயக்கம், ஒளிப்பதிவு படித்துவிட்டு அங்கே உருவான சில ஆங்கில படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய என்.டி.நந்தா என்ற இளைஞர் இயக்கியுள்ள படம்.

லண்டனில் வசிக்கும் சர்வதேச ஆயுதவியாபாரி டேவிட்டினால் இந்தியாவுக்கு ஆபத்து என்பதால், ராணுவத்தின் புலனாய்வு பிரிவைச் சேர்ந்த அனுஹாசனை லண்டனுக்கு உளவாளியாக அனுப்பி டேவிட்டை அழிக்க திட்டம் போடுகிறார் ராணுவ அதிகாரி நாசர்!

லண்டன் சென்ற அனுஹாசனின் கணவரை உளவாளி என்று தவறாக நினைத்து, தன் ஆட்களை வைத்து  கொல்கிறார் டேவிட்.

அதோடு, அனுஹாசனின் குழந்தையையும் கடத்திக்கொண்டு போய்விட, அதுவரை ஹவுஸ்வொய்ப் போல் சாந்தமாக இருந்த அனுஹாசன், ராணுவ அதிகாரியாக களத்தில் இறங்கி சாகசம் செய்வதுதான் வல்லதேசம் படத்தின் கதை.

ஏறக்குறைய விஸ்வரூபம் படத்தின் கதைதான். கமல்ஹாசனுக்கு பதில்…. அனுஹாசன்.

இதுவரை மென்மையான கதாபாத்திரங்களில் பார்த்து பழக்கப்பட்ட அனுஹாசனுக்கு இதில் உண்மையிலேயே வித்தியாசமான வேடம்.

விஜயசாந்தி ரேன்ஜுக்கு அதிரடி ஆக்‌ஷனில் கலக்கி இருக்கிறார்.

குழந்தை மீது பாசம் கொண்ட தாயாகவும், பொறுப்பு மிக்க இராணுவ அதிகாரியாகவும் தன்னை வித்தியாசப்படுத்தி வெளிப்பட்டிருக்கிறார் அனுஹாசன்!

இராணுவ உயர் அதிகாரியாக நாசர், அமைச்சர் பாலாசிங், ஆயுதவியாபாரி டேவிட் ஆகியோரின் பங்களிப்பும் சிறப்பு.

இயக்குநரான நந்தாவே ஒளிப்பதிவையும் செய்திருக்கிறார். லண்டனை வேறு கோணத்தில் அள்ளிக் கொண்டு வந்திருக்கிறார்.

எல்.வி.முத்துக்குமாரசாமியின் பின்னணி இசை கவனிக்க வைக்கிறது.

லண்டனை கதைக்களமாக வைத்து முழுக்க முழுக்க லண்டனிலேயே படமாக்கப்பட்டிருப்பதாலோ என்னவோ ஆங்கிலப் படத்தைப் பார்ப்பதுபோல் இருக்கிறது.

அனைவரும் தமிழில் பேசுவதால் ஆங்கிலப்படத்தின் தமிழ் டப்பிங் படம் போல் இருப்பதையும் மறுப்பதற்கில்லை.