இம்சைஅரசன் 24 ஆம் புலிகேசி விவகாரத்தில் வேலு… வடிவேலு… அடாவடிவேலு…. …!

vadivelu_2

லைகா, ஷங்கரின் கூட்டுத் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில், வடிவேலு ஹீரோவாக நடிக்க கடந்த வருடம் துவங்கப்பட்ட படம் ‘இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி’.

2006 ஆம் ஆண்டு   ஷங்கரின் ‘எஸ் பிக்சர்ஸ்’ பட நிறுவனத்தின் மூலம்  தயாரிக்கப்பட்ட ‘இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி’ படத்தின் இரண்டாம் பாகம் இது.

‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’க்கு ஆரம்பத்திலிருந்தே தடங்கல்தான்.

சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையிலேயே,  வழக்கமான தன்னுடைய சுயரூபத்தைக் காட்ட ஆரம்பித்தார் வடிவேலு.

படங்களில் காமெடியனான வடிவேலு நிஜத்தில் தெலுங்குப்பட வில்லன்களைனவிட கொடூரமான ஆள் என்பது அவரை வைத்து படம் எடுத்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.

தயாரிப்பாளர்களை இயக்குநர்களை சித்ரவதை செய்யும் சாடிஸ்ட் அவர்.

இம்சைஅரசன் -2  படத்தில் நடிக்கத் தொடங்கிய சில நாட்களிலேயே இயக்குநர் சிம்புதேவனை அநியாயத்துக்கு டார்ச்சர் செய்ததோடு, இயக்குநருக்கு ஒத்துதுழைப்பு கொடுக்கவும்  மறுத்துவிட்டார்.

இதனால், கடுப்பான இயக்குநர் ஷங்கர் இதுகுறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார்.

ஷங்கர் கொடுத்த புகாரை தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு அனுப்பி வைத்து வடிவேலுவிடம் விளக்கம் கேட்டனர்.

இந்நிலையில் தற்போது படு நக்கலாக ஒரு பதில் கடிதத்தை அனுப்பியுள்ளார் வடிவேலு….

“இம்சை அரசன் 24-ம் புலிகேசியில் நடிக்க 1-6-2016இல் ஒப்புக் கொண்டேன். 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் படத்தை முடித்துவிடுவதாகவும், அதுவரை வேறெந்தப் படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ள வேண்டாம் என்றும் என்னிடம் உறுதி அளித்ததால், வேறு படங்களில் நடிப்பதை நான் தவிர்த்தேன்.

ஆனால், டிசம்பர் 2016 வரை படத்தைத் தொடங்காமலே காலம் தாழ்த்தினர்.  அதன்பிறகும் பல்வேறு தேதிகளில் அந்தப் படத்தில் நடித்துக் கொடுத்தேன். இந்நிலையில், என்னுடைய பிரத்யேக ஆடை வடிவமைப்பாளரை எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் நீக்கியது.

அத்துடன், கெட்ட நோக்கத்தோடு எனது புகழுக்கும் பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கடிதத்தைக் கொடுத்தது.

இந்த ஒரு படத்தின் மூலம்தான் எனக்கு  சினிமா உலகில் புகழ் ஏற்பட்டது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கி உள்ளனர்.

நான் நடித்துத் தர மறுத்திருந்தால், பட நிறுவனம் டிசம்பர் 2016க்குள் ஏன் புகார் தரவில்லை? ஒப்பந்த காலம் முடிந்து ஒரு வருடத்திற்குப் பிறகு கெட்ட நோக்கோடு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று நடிகர் சங்கம் என்னை வற்புறுத்துவதற்கு முன்பு, என்னை அழைத்து கருத்து கேட்காதது விதிகளுக்கு முரணானது.” எனக் கடிதத்தில் pவளக்கம் அளித்துள்ள வடிவேலு, “இந்தப் படத்தில் நாசர் நடிப்பதால், நடிகர் சங்க நலனுக்காக அவரால் செயல்பட முடியாத நிலைமை உள்ளது.” என்று நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் மீதும் அவதூறு சேற்றை வாரி இறைத்திருக்கிறார்.

நடிகர் சங்கத் தேர்தலில் நாசர் அணிக்கு ஆதரவு தெரிவித்தார் வடிவேலு. அதை எல்லாம் மறந்துவிட்டு இந்த விவகாரத்தில் வடிவேலு மீது தவறு இருப்பதை உணர்ந்து நியாயமாக செயல்பட்டதால் நாசரை அவமானப்படுத்துவதுபோல் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் வடிவேலு.

இந்த விவகாரம் காரணமாக வடிவவேலுவின் திரையுலக வாழ்க்கை அஸ்தமனமாவதை அவராலேயே தடுக்க முடியாது என்பதே உண்மைநிலவரம்.