உள்குத்து – விமர்சனம்

ulkuthu1a

‘திருடன் போலீஸ்’ படத்தில் திரும்பிப்பார்க்க வைத்த இயக்குநர் கார்த்திக் ராஜுவின் இரண்டாவது படம்.

அதே ‘அட்டகத்தி’ தினேஷ், பாலசரவணனை வைத்துக் கொண்டு வேறு ஒரு களத்தில் இறங்கி ‘உள்குத்து’ குத்தியிருக்கிறார்.

வழக்கமான பழிவாங்கும் கதைதான்.

அதையே கொஞ்சம் வித்தியாசமாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லி ரசிக்க வைத்திருக்கிறார்.

அனாதை என்று பொய்யைச் சொல்லிக் கொண்டு ஒரு மீனவர் குப்பத்துக்கு வரும் அட்டகத்தி தினேஷ், குப்பத்து இளைஞனான பாலசரவணனின் நண்பராகி அங்கேயே டேராபோடுகிறார்.

குப்பத்தின் முக்கியப்புள்ளியான, சரத் லோகித்ஷா அவரது மகன் திலீப் சுப்பராயன் இருவருடைய விசுவாசத்தையும் பெற்று அவர்களது நம்பிக்கைக்குரியவனாகவும் மாறுகிறார் தினேஷ்!

ஒரு சூழலில் எதிரிகளிடமிருந்து தப்பித்து ஓடிவரும் திலீப் சுப்பராயனை காப்பாற்றி நடுக்கடலுக்கு கூட்டிச்செல்லும் தினேஷ், அங்கே வேறுமுகம் காட்டி உள்குத்து குத்துகிறார்.

விசுவாசியான தினேஷ், துரோகியானது ஏன்? என்ற கேள்விக்கு விடைதான் உள்குத்து படத்தின் பின்பாதி.

பாலசரவணனின் தங்கை நந்திதா மீது தினேஷுக்கு காதல் என்றொரு கிளைக்கதை.

கந்துவட்டி தொழில், வட்டியை வசூலிக்க செய்யும் ரௌடித்தனம் என காட்சிகள் நகர்வதால் படத்தில் அநியாயத்துக்கு வெட்டுகுத்து.

ஆனாலும் எடுத்துகொண்ட கதைக்கு திரைக்கதை மூலம் விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறார்.

முதல் பாதி கொஞ்சம் மந்தமாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் தெறிக்கிறது திரைக்கதை.

அட்டகத்தி தினேஷ் ஆக்ஷன் ஹீரோவாக மாறியிருக்கிறார். ஆஜானுபாகுவான சரத் லோகித்ஷாவை தினேஷ் எதிர்ப்பது வழக்கமான ஹீரோயிசம்.

குப்பத்து பெண்ணாக நந்திதா. நடிக்க பெரிதாக வாய்ப்பில்லை என்றாலும் தன்னால் முடிந்ததை செய்திருக்கிறார்.

‘சுறா சங்கர்னா சும்மாவா’ என்று அடிக்கடி வசனம் பேசும் பாலசரவணன் ஆரம்பத்தில் ரசிக்க வைத்தாலும் பிறகு அதுவே எரிச்சலாகிறது.

சரத் லோகித்ஷாவின் ஒரே மாதிரியான நடிப்பும், முறைப்பும் சலிக்க வைக்கிறது.

திலீப் சுப்பராயன், ஜான் விஜய், ஸ்ரீமன், சாயா சிங் என ஒவ்வொருவருக்கும் நினைவில் நிற்கும் பங்கை அளித்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் ராஜு.

பி.கே.வர்மாவின் ஒளிப்பதிவும், ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசையும் உள்குத்துவுக்கு வலு சேர்த்துள்ளன.