டிவி சீரியலை இயக்க இயக்குநர் விக்ரமன் தயக்கம்

vikraman1

சின்னத்திரை இயக்குநர்கள் சங்க ஆண்டு மலர் மற்றும் வெப்சைட் துவக்கவிழாவில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் , திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவர் விக்ரமன் , ஃபெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

சின்னத்திரை இயக்குநர் சங்கத்தின் ஆண்டு சிறப்பு மலரை தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் வெளியிட, தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் விக்ரமன் பெற்றுக்கொண்டார்.

சின்னத்திரை வெப்சைட்டை ஆர்.கே. செல்வமணி மற்றும் சிவன்ஸ்ரீநிவாசன் துவக்கி வைத்தனர்.

சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் தளபதியின் வரவேற்புரைக்குப் பின் பேசிய தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், “சின்னத்திரை இயக்குனர்கள் சங்கம் சிறப்பாகவே செயல் பட்டுக்கொண்டிருக்கிறது.

நாங்கள் அனைவரும் ஒரே இன்ஸ்ட்டியுட்டில் ஒன்றாக படித்தவர்கள். இதை ஆரம்பிக்க ஒரு வித்தாக இருந்தவர் ஆர்.கே. செல்வமணி தான்.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் சின்னத்திரைக்கும் பெரியதிரைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அணுகுமுறை மற்றும் படைப்புரீதியாக மட்டும் தான் வித்தியாசம் உள்ளது.

இரண்டும் தனித் தனியாக இருப்பதுதான் கொஞ்சம் சங்கடமாக இருக்கிறது. இன்னும் சில தினங்களில் பெரியதிரை மற்றும் சின்னத்திரை சங்கங்கள் ஒன்றாக வேண்டும். இப்போது வேறு வேறாக இருந்தாலும் கருத்துப் பரிமாற்றமும் , தொழில்நுட்ப பரிமாற்றங்களும் ஒன்றாக இருக்கவேண்டும் என்பது தான் என்னுடைய கனவு.

பாலிவுட்டில் மற்றும் ஹாலிவுட்டில் பெரிய நடிகர்களும் கேமராமேன்களும் சின்னித்திரை தொடர்களில் பணியாற்றி வருகிறார்கள். அந்த நிலை இங்கும் வர வேண்டும்” என்றார்.

இயக்குநர் சங்க தலைவர் விக்ரமன், “பத்தாண்டுகளுக்கு மேலாக பல பேர் சின்னதிரையில் சீரியல் இயக்க வேண்டும் என்று பல பிரபல சேனல்கள் மற்றும் தயாரிபாளர்களும் என்னை அப்ரோச் செய்தார்கள். அதற்கு நான் சொன்னேன் “கதை , திரைக்கதை , மற்றும் வசனத்தை மட்டும் நான் பண்ணுகிறேன்.

ஆனால் இயக்க மாட்டேன் என்று கூறிவிட்டேன். இப்பொது பெரிய திரையில் படம் இயக்கி கொண்டு இருக்கிறேன். நாம் சீரியல் செய்தால் விமர்சனங்கள் வரும் என்று பார்த்தேன்.

ஒரு கட்டத்தில் சரி ஒரு சீரியல் எடுத்துபார்ப்போம் என்று முடிவெடுத்தேன். என்ன பயம் என்றால் பெரியதிரையில் சாதித்ததை சின்னத்திரையில் செய்யமுடிவில்லை என்று இயக்குநர்கள் பேசுவார்கள்.

அதனால் பெரியதிரையிலும் சாதித்து சின்னத்திரையிலும் சாதித்த ஒருவரிடம் சென்று கேட்டேன் அதற்கு அவர் சொன்னார் இது திரைப்படம் எடுக்கும் அளவிற்கு சுலபம் கிடையாது. ஒரு மாதத்தில் முப்பது நாள் என்றால் அந்த முப்பது நாளும் வேலை இருக்கும்.

உங்களுக்கு மட்டும் இல்லை உங்கள் முழு குழுவுக்கும் எல்லா நாளும் வேலை இருக்கும் என்று சொன்னார். அப்போதுதான் புரிந்தது சின்னதிரையில் இருக்கும் கஷ்டங்கள். அதனால்தான் நான் கதை , திரைக்கதை , வசனம் மட்டும் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறினேன்.” என்று பேசினார்.

ஃபெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி பேசும்போது, “தனி தனி அமைப்பாய் இருந்தாலும் ஒரே இலக்கோடு செயல்பட்டால் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணத்தில்தான் இந்த சின்னதிரை இயக்குனர் சங்கத்தை பெரிய பெரிய இயக்குநர்கள் சேர்ந்து ஆரம்பித்தார்கள்.

சின்ன விதையாக விதைத்த இந்த சின்னத்திரை இன்று ஆலமரமாக வளர்ந்திருக்கின்றது. நமக்குள் வேறுபாடு இல்லாமல் இருக்கிறோம்.

பெரியதிரையின் ஆண்டு வருமானத்தை விட, தமிழ் சின்னத்திரையின் (Satellite ) ஆண்டு வருமானம் ஐந்து மடங்கு அதிகம். பெரியதிரைக்கு நிகரான தொழில்நுட்பக் கலைஞர்கள் சின்னத்திரையிலும் இருக்கிறார்கள்.” என்று குறிப்பிட்டார்.