‘டிக் டிக் டிக்’ – இரவல் தலைப்புடன் வரும் இந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படம்

tic-tic-tic-copy

‘மிருதன்’ படத்தை தொடர்ந்து ‘ஜெயம்’ ரவி, சக்தி சௌந்தர் ராஜன் மீண்டும் இணைந்துள்ள படம் ‘டிக் டிக் டிக்’.

நேமிச்சந்த் ஜபக் தயாரிப்பில், ‘ஜெயம்’ ரவி, நிவேதா பெதுராஜுடன் வின்சென்ட் அசோகன், ரமேஷ் திலக், ஜெயபிரகாஷ், அர்ஜுனன், ரித்திகா முதலானோரும் நடித்துள்ள இந்த படத்திற்கு இரண்டு பெருமைகள் உண்டு.

ஒன்று – டி.இமான் இசையமைக்கும் 100-ஆவது படம்.

இரண்டு – இந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படம்.

‘டிக் டிக் டிக்’ படத்தை இம்மாதம் 26-ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.

டிக் டிக் டிக் படம் பற்றி ‘ஜெயம்’ ரவி என்ன சொல்கிறார்?

‘‘நான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதும் நிறைய பேர், ‘என்ன விண்வெளி சம்பந்தப்பட்ட படத்தில் நடிக்கிறீர்களா? இது சாத்தியமா, ரிஸ்க் இல்லையா?‘ என்றெல்லாம் பயமுறுத்தினார்கள்!

இதை நான் ரிஸ்க் என்று நினைக்கவில்லை. விரும்பி ஏற்றுக்கொண்ட படம் இது.

நல்ல படம் எடுத்தால் ரசிகர்கள் நிச்சயம் ஆதரவு தருவார்கள்.

இந்த படத்தை தரமான ஒரு படமாக எடுத்துள்ளார் இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன்.

இந்த படத்தின் கலை இயக்குநர் மூர்த்திக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. மிகப் பெரிய அளவில் இதில் அவரோட ஒர்க் பேசப்படும்.

இந்த படத்தில் என்னுடன் இணைந்து நடித்துள்ள நிவேதா பெதுராஜுக்கு நிறைய ஆக்ஷன் காட்சிகள் உண்டு! அதில் நடிக்கும்போது அவருக்கு நிறைய அடி பட்டது. இருந்தாலும் அதையெல்லாம் பொறுத்துகொண்டு நடித்தார்.

என்னோட பையன் ஆரவ் ரவியும் இதில் நடித்துள்ளான்.

இது மாதிரியான ஒரு சந்தோஷம் அவ்வளவு எளிதாக யாருக்கும் கிடைக்காது.

என் தம்பி இமான் இசை அமைக்கும் நுறாவது படம் இது! படத்தின் ரிலீஸ் தேதிக்கு ஒரு மாதம் முன்னதாகவே அனைத்து வேலைகளையும் முடித்து கொடுத்து விட்டார்! இந்த டெடிகேஷன் தான் அவரோட வளர்ச்சிக்கு முக்கிய காரணம்.

இந்த மாதிரி ஒரு ஸ்கிரிப்ட் யோசிக்கிறதே கஷ்டம். இது மாதிரியான ஒரு ஸ்கிரிப்ட்டை ரெடி செய்து அதை சவாலாக எடுத்தும் காட்டியுள்ளார் இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன். அவரோட தன்னம்பிக்கைக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும்!

நானும், சக்தி சௌந்தர் ராஜனும் இணைந்து உருவாக்கிய ‘மிருதன்’ குழந்தைகள் பார்க்க முடியாத படமாக அமைந்து விட்டது. ஆனால் இந்த படம் குழந்தைகளும் விரும்பி பார்க்கக் கூடிய படமாக இருக்கும். நம்பி வரலாம்.’’ என்றார் ‘ஜெயம்’ ரவி!

இம்மாதம் 26- ஆம் தேதி ரிலீசாகிறது டிக் டிக் டிக்.