துப்பறிவாளன் – விமர்சனம்

thupparivaalan-stills-010a

அயல்நாட்டு படங்களின் பாதிப்பில் படங்களை இயக்குவதையே தன்னுடைய ‘தொழில்தர்மமாக(?)’ வைத்திருக்கும் மிஷ்கின், இம்முறை ஷெர்லாக் ஹோம்ஸ் பாதிப்பில் விஷாலுக்கு தொப்பியைப்போட்டு துப்பறியும் படத்தைக் கொடுத்திருக்கிறார்.

தொடர்கொலைகளை செய்துவிட்டு அவற்றை விபத்துபோல் செட்டப் செய்து போலீஸை ஏமாற்றி வரும் குற்றவாளிகள் கூட்டத்தை தன்னுடைய புத்தி சாதுர்யத்தால் கண்டுபிடிக்கும் ஒரு துப்பறிவாளனின் கதைதான் ‘துப்பறிவாளன்’.

இப்படி இரண்டு வரியில் ஒன்லைனை சுலபமாக சொல்லிவிட முடிகிறவர்களுக்கு, படத்தின் கதை இதுதான் என்று சொல்வதற்குள் தலைசுற்றிப்போகும்.

எவராலும் அறுதியிட்டு சொல்ல முடியாத அளவுக்கு கதையிலும், திரைக்கதையிலும் அநியாயத்துக்கு குழப்பம்.

தானும் குழம்பி, படம் பார்ப்பவர்களையும் குழப்பி இருக்கிறார் மிஷ்கின்.

ஜான் விஜய் தரும் அசைன்மென்ட்டை வினய், ஆண்ட்ரியா, பாக்யராஜ் மற்றும் ஒரு மொட்டைத்தலையன் கொண்ட ஒரு கும்பல் கர்மசிரத்தையாக செய்து முடிக்கிறது.

சிம்ரனின் கணவர் வின்சென்ட் அசோகன், போலீஸ் அதிகாரி நரேன், தொழில்அதிபர் ஜெயப்பிரகாஷ் என வரிசையாக கொல்லப்படுகிறார்கள்.

ஒவ்வொரு கொலையும் பக்காவாக திட்டமிடப்பட்டு விபத்தைப்போல் அரங்கேற்றப்படுகிறது.

இவர்களுக்கு உடந்தையாக இருந்து பிறகு மனம் திருந்திய நபரை கொல்லும் முயற்சியில் ஒரு நாயும் கொல்லப்பட, சுவாரஸ்யமான கேஸ் வராதா என்று காத்திருக்கும் துப்பறிவாளன் கணியன் பூங்குன்றனிடம் (விஷால்) தன்னுடைய நாய் கொல்லப்பட்ட கேஸைக் கொண்டு வருகிறான் ஒரு சிறுவன்.

நாயின் மரணத்தைக் கண்டுபிடிக்க களத்தில் இறங்கும் கணியன் பூங்குன்றனின் துப்பறிதலில் அடுத்தடுத்து அதிர்ச்சிகள்.

அத்தனை மர்மமுடிச்சுகளையும் அவிழ்த்து குற்றவாளிகளை கண்டுபிடிக்கிறார் துப்பறிவாளன் .

ஷெர்லாக் ஹோம்ஸ் இன்ஸ்பிரேஷன் என்று சொல்லிக் கொண்டு துப்பறிவாளன் கணியன் பூங்குன்றனை (விஷால்) தன்னைப்போலவே அல்லது பாதி கிறுக்கனாகவே சித்தரித்திருக்கிறார் மிஷ்கின்.

ஷெர்லாக் ஹோம்ஸை ஓரமாக வைத்துவிட்டு, சுஜாதாவின் கணேஷ் – வஸந்தையும், பட்டுக்கோட்டை பிரபாகரின் பரத் – சுசியையும் படித்திருந்தால் கூட துப்பறிவாளனை இன்னும் ஸ்மார்ட்டாகக் காட்டியிருக்கலாம்.

பல காட்சிகளில் கணியன் பூங்குன்றன் மரைகழன்றதுபோல் நடந்துகொள்வதால், அவரது சாகசத்தைக்கூட ரசிக்க முடியவில்லை.

தன்னைத் தேடி வருபவர்கள் பற்றியும், அவர்கள் எதற்காக தேடி வந்திருக்கிறார்கள் என்பது பற்றியும் கடகடவென ஒப்பிப்பதெல்லாம் காமெடியின் உச்சம். இவர் துப்பறிவாளனா அல்லது ஜோதிடரா என்ற சந்தேகம் வருகிறது.

துப்பறிவாளன் படத்தின் மிகப்பெரிய ஆச்சர்யம்… மிஷ்கின் மீது விஷால் வைத்த நம்பிக்கை.

மிஷ்கின் என்ன சொன்னாரோ அதை அப்படியே கிளிப்பிள்ளையைப்போல் விஷால் செய்திருக்கிறார்.

அதனாலோ என்னவோ, உயரமான மிஷ்கினை பார்ப்பதுபோலவே இருக்கிறார்.

சைனீஸ் ரெஸ்ட்டாரன்ட், பிச்சாவரம் சண்டைக்காட்சிகளில் விஷாலின் உழைப்பு உண்மையில் மிரட்டல்.

சண்டைக்காட்சிகளுக்காக மெனக்கெட்ட விஷால் அப்படியே மிஷ்கினிடம் ஸ்கிரிப்ட்டையும் கேட்டிருக்கலாம்.