திறப்புவிழா – விமர்சனம்

Thirappu Vizha Movie Stills

 

டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராக மக்கள் போராடிவரும் தற்போதைய சூழலில், அதே கருத்தை வலிமையுடன் வலியுறுத்துவதால் கவனத்தை ஈர்க்கிறது -திறப்புவிழா.

கிராமத்தில் புதிதாகத் திறக்கப்படும் ‘டாஸ்மாக்’ கடையின் விற்பனையாளரான ஜெய ஆனந்த், குடிமகன்களிடம் கூடுதல் பணம் வாங்கி, அவர்களின் குடும்பங்களுக்கு உதவிகளைச் செய்கிறார்.

அருகில் பார் நடத்துகிறவர்கள் போலி சரக்கு விற்க, அதை தட்டிக்கேட்கிறார் ஜெய ஆனந்த்.

போலி சரக்கைக் குடித்ததால் ஊர் மக்கள் இறந்துபோக, பழியை ஜெய ஆனந்த் மீது போடுகிறார்கள்.

கைதாகி ஜாமீனில் வரும் ஜெய ஆனந்தை, ஊரை விட்டு வெளியேறச் சொல்கிறார்கள் ஊர் மக்கள்.

தான் யார் என்பதையும், எதற்காக இந்த ஊருக்கு வந்தேன் என்பதையும் ப்ளாஷ்பேக்கில் சொல்கிறார் ஜெய ஆனந்த்.

அதன் பிறகு, ஊர் மக்கள் ஒத்துழைப்புடன் ‘டாஸ்மாக்’ கடையை மூட வேண்டும் என்ற போராட்டத்தில் ஈடுபடுகிறார்.

அவருடைய போராட்டத்துக்கு வெற்றி கிடைத்ததா? என்பது திறப்புவிழா படத்தின் க்ளைமாக்ஸ்.

மதுக்கடைக்கு எதிரான போராட்டம் என்ற பிரதான கதையினுள், அதே கிராமத்தில் வசிக்கும், ரஹானா (மனிஷாஜித்) வுக்கு ஜெய ஆனந்துக்குமான காதல் கிளைக்கதை. கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தில் அழகாய் பொருந்தி இருக்கிறார்.

மதுக்கடையை மூட வேண்டும் என்ற போராட்டத்தில் ரஹானா எடுக்கும் அந்த அதிரடியான முடிவு அதிர்ச்சி.

புதுமுகம் ஜெய ஆனந்த் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.

கிராமத்து படத்துக்கு தேவையான இசையை கொடுத்திருக்கிறார் வசந்த ரமேஷ்.

திறப்பு விழா…. காலத்துக்கு பொருந்தாத உருவாக்கம். காலத்துக்கு தேவையான உள்ளடக்கம்.