தெரு நாய்கள் – விமர்சனம்

theru-naaigal

நாட்டின் வளர்ச்சி என்ற பெயரில் டெல்டா மாவட்டங்களில் விவாசயத்தை அழிக்கும் முயற்சியை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து செய்து வருகின்றன.

அதை நேரடியாக படங்களில் சொல்ல தணிக்கைக்குழு அனுமதிக்காது என்பது மட்டுமல்ல, தேச விரோத கருத்தைச் சொன்னதாக அந்தப் படத்தையே தடை செய்ய வாய்ப்பிருக்கிறது.

இந்த அபாயத்தை உணர்ந்து, தணிக்கையின் கண்களை உறுத்தாத அளவுக்கு டெல்டா மாவட்டங்களின் தற்போதைய சிக்கல்களை சொல்ல முயன்றிருக்கிறார்கள்.

செவ்வனே செய்திருந்தால் முயற்சி திருவினையாகி இருக்கும். தெருநாய்கள் படத்தையும் மக்கள் கொண்டாடி இருப்பார்கள்.

தன்னுடைய சுயலாபத்துக்காக விவசாயிகளின் நிலத்தைப் பறித்து எண்ணெய் நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பவர்கள்தான் தெரு நாய்கள்.

கதைக்கு நெருக்கமான டெல்டா மாவட்டப் பகுதியான மன்னார்குடியை கதைக்களமாக்கி இருக்கிறார் இயக்குநர் ஹரி உத்ரா.

மன்னார்குடியில் செல்வாக்குமிக்கவர்களான மதுசூதனனுக்கும், சேட்டுக்கும் ஏழாம்பொருத்தம்.

எப்போதும் முறைத்துக் கொண்டே திரியும் அவர்கள் ஒருவரையொருவர் போட்டுத்தள்ளத் துடிக்கிறார்கள்.

வெளிநாட்டு நிறுவனங்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு, எரிவாயு குழாய்களை பதிப்பதற்காக விவசாய நிலங்களை விவசாயிகளிடமிருந்து பறிக்கும் வேலையை செய்து வருகிறார் மதுசூதனன்.

இனிப்புக் கடை நடத்தி வரும் இமான் அண்ணாச்சியின் இடத்தை மதுசூதனன் வாங்க விரும்புகிறார்.

தன்னுடைய நிலத்தைக் கொடுக்க  மறுக்கிறார் இமான் அண்ணாச்சி.

அதனால் அவரை மதுசூதனன் கொலை செய்து விடுகிறார்.

இமான் அண்ணாச்சியின் கடையில் வேலைப்பார்க்கும் அப்புக்குட்டி மற்றும் அவரது சகாக்கள் வெகுண்டெழுகிறார்கள்.

யாரும் நெருங்க முடியாத மதுசூதனனை கடத்துகிறார்கள்.

அவர்களிடம் இருந்து மதுசூதனன் தப்பித்தாரா? இல்லையா? என்பதுதான் தெருநாய்கள் படத்தின் மீதிக்கதை.

அரசாங்கமே விளை நிலங்களை அழிக்கும் வேலையை செய்து வரும் தற்போதைய சூழலில், விவசாயத்தையும், விளைநிலங்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற கருத்தை சொல்ல வந்ததற்காக மட்டும் இயக்குநரை பாராட்டலாம்.

சொல்ல வந்த கருத்தை இன்னும் ஆழமாகவும், தெளிவோடும், செறிவோடும், தொழில்நுட்ப நேர்த்தியோடும் சொல்லி இருந்தால் படத்தையும் பாராட்டி இருக்கலாம்.