விஷாலுக்கு எதிராக தூசு தட்டப்பட்ட தமிழ் திரைப்பட வர்த்தக சபை!

tamilfilmchamber

 

தமிழ்த்திரைப்படத்துறையில் தயாரிப்பாளர்களுக்காக பல அமைப்புகள் இருந்தாலும், தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்தான் வலிமையான அமைப்பாக உள்ளது.

பிலிம் சேம்பர் என்கிற தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை முன்னோடியான அமைப்பாக இருந்தும், அது அவ்வளவாக செயல்படாத அமைப்பாகவே இருந்து கொண்டிருக்கிறது.

காரணம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்களை உள்ளடக்கிய அமைப்பு என்பதால் அதை யாரும் கண்டு கொள்வதில்லை.

இதற்கிடையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோரைக் கொண்ட தமிழ் திரைப்பட வர்த்தக சபை (Tamil Film Chamber of Commerce) என்ற பெயரில் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு அமைப்பை தொடங்கினார்கள். தொடங்கிய சில மாதத்திலேயே செயல்படாத அமைப்பாக முடங்கிப்போனது.

இந்நிலையில், தமிழ் திரைப்பட வர்த்தக சபையை இன்று மீண்டும் தூசு தட்டி எடுத்துள்ளனர்.

இந்த சபை ஏற்கெனவே தொடங்கப்பட்டிருந்தாலும், இத்தனை காலமும் அமைதியாக இருந்தது.
இன்று முதல் மீண்டும் செயல்பட ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திரைப்பட விநியோகஸ்தரும், திரையரங்கு உரிமையாளருமான ‘அபிராமி’ ராமநாதன் தமிழ் திரைப்பட வர்த்தக் சபையின் தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மற்ற நிர்வாகிகள் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரைப்பட வர்த்தக சபையை மீண்டும் தூசு தட்ட வேண்டிய அவசியம் என்ன?

தமிழ் திரைப்பட வர்த்தக சபைக்கு ஆதரவளித்துள்ள திரையுலகப் பிரமுகர்களின் பட்டியலைப்பார்த்தாலே புரியும்.

இந்த சங்கத்துக்கு ஆதரவளித்துள்ளதாக சொல்லப்படும், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ் தாணு, மதுரை அன்பு செழியன், விநியோகஸ்தரும் திரையரங்கு உரிமையாளருமான திருப்பூர் சுப்பிரமணியம், விநியோகஸ்தர் சங்க தலைவர் அருள்பதி, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் பன்னீர் செல்வம், விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் தலைவர் செல்வின் ராஜ், செயலாளர் ராஜமன்னார், அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா என அனைவரும் ஏதோ ஒரு வகையில் விஷாலினால் பாதிக்கப்பட்டவர்கள். அல்லது விஷாலின் வளர்ச்சியை விரும்பாதவர்கள்.

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட விஷால் அதிரடியாக பல விஷயங்களை செய்து வருகிறார். அவரது செயல்பாடு ஏற்கனவே கவுன்சிலை கட்டியாண்ட பெருசுகளை டென்ஷனாக்கி இருக்கிறது.

முன்னாள் நிர்வாகிகளாக கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்ப்பதைவிட, இன்னொரு அமைப்பைத் தொடங்கி விஷாலுக்கு போட்டியாக களத்தில் இறங்கலாம் என்ற என்ற எண்ணத்தில்தான் தமிழ் திரைப்பட வர்த்தக சபையை தூசு தட்டியுள்ளதாக தகவல்…

விஷாலின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வந்த தாணு, விஷாலின் நடவடிக்கையால் அதிருப்தியுற்றவர்களையும் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்தவர்களையும் ஒருங்கிணைத்து இதை சாதித்துள்ளார். அதாவது, தாணுவின் முயற்சியில்தான் தமிழ் திரைப்பட வர்த்தக சபை மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.

இது பற்றி அபிராமி ராமநாதனிடம் கேட்டால், “இந்த அமைப்பு திரையுலகின் நலனை மட்டுமே பிரதான நோக்கமாகக் கொண்டு செயல்படும். இதன் நிலைப்பாடு யாருக்கும் எதிரானது அல்ல. அரசுகளிடம் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து தமிழ் சினிமா நலனுக்காக பாடுபடும்,” என தெரிவிக்கிறார் அபிராமி ராமநாதன்.