தோல்விப்பட இயக்குநர்களுடன் சூர்யாபோடும் கூட்டணி

suriya

தமிழ்சினிமாத்துறையே ஒரு பந்தயக்களம்தான். இங்கேயும் ஓடுகிற குதிரைகளின் மீதுதான் பணம் கட்டுவார்கள். அதாவது வெற்றிப்படம் இயக்குநர் ஹீரோக்களை வைத்தே படம் எடுப்பார்கள்.

ஹீரோக்களும் வெற்றிப்படம் கொடுத்த இயக்குநருடன் இணைந்து படம் கொடுக்கவே விரும்புவார்கள்.

இந்த விஷயத்தில் சூர்யா சற்றே மாறுபடுகிறார்.

கடந்த சில வருடங்களாக படமில்லாமல் வீட்டில் சும்மா உட்கார்ந்திருந்த செல்வராகவனை அழைத்த சூர்யா தற்போது அவரது இயக்கத்தில் ‘NGK’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படம் முடிந்ததும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா.

அயன் படத்தை அடுத்து சூர்யாவை வைத்து கே.வி. ஆனந்த் இயக்கிய மாற்றான் படம் கமர்ஷியலாக வெற்றிபெறவில்லை.

தொடர்ந்து அவர் இயக்கிய அனேகன், கவன் ஆகிய படங்களும் ஓடவில்லை.

இந்த சூழலில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருக்கிறார் சூர்யா.

இந்தப்படம் குறித்த எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில் சமீபத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பை இயக்குநர் கே.வி.ஆனந்த் வெளியிட்டார்.

அடுத்த படம் சூர்யா உடன் என்றும், இந்தப் படத்தை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது என்றும் அறிவித்ததோடு இந்த படத்தில் எழுத்தாளர் பட்டுகோட்டை பிரபாகர், இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், கலை இயக்குனர் கிரண் ஆகியோருடன் தான் பணியாற்றவிருப்பதையும் குறிப்பிட்டார்.

கே.வி.ஆனந்தின் படங்களுக்கு எழுத்தாளர்கள் சுபாதான் கதை திரைக்கதை வசனம் எழுதுவார்கள்.

இந்த படத்தில் சுபா இல்லை. அவர்களுக்குப் பதில் பட்டுக்கோட்டை பிரபாகர் இணைந்திருக்கிறார்.