தானா சேர்ந்த கூட்டம் படத்துக்கு தடையா?

suriya-thaanaa-serndha-kutham

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான விஷால், செயலாளர் ஞானவேல்ராஜா, பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு ஆகியோரது செயல்பாடுகளினால் அதிருப்தியுற்ற சிலர் இவர்கள் மூவரையும் வேரறுக்கும் வேலையைத் தொடங்கிவிட்டனர்.

யார் அந்த சிலர்?

தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் நாட்டாமைகளும், விஷால் தரப்பு கொண்டு வர திட்டமிட்டுள்ள சீர்திருத்தத்தினால் பாதிக்கப்படுவோம் என்று அஞ்சி நடுங்குகிற தியேட்டர் அதிபர்களும் விநியோகஸ்தர்களும்தான்.

வேரறுப்பு வேலையின் முதல்கட்டமாக, விஷால், ஞானவேல்ராஜா, எஸ்.ஆர்.பிரபு சம்மந்தப்பட்ட படங்களுக்கு ரெட் போட்டிருப்பதாக கடந்த சில வாரங்களாகவே படத்துறையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது நடக்கும் சில சம்பவங்கள் மூலம் ரெட் விவகாரம் மெல்ல மெல்ல வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்திருக்கிறது.

எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள ‘கூட்டத்தில் ஒருத்தன்’ ஜூலை 14ஆம் தேதி அன்று ரிலீசாகவிருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் திடீரென்று ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தின் ரிலீஸை இரண்டு வாரங்கள் தள்ளி அதாவது ஜூலை 28-ஆம் தேதி ரிலீஸ் என்று அறிவித்துள்ள எஸ்.ஆர்.பிரபு, ரிலீஸ் தேதியை தள்ளி வைத்ததற்கு அண்மையில் நடைபெற்ற தியேட்டர் ஸ்டிரைக்கை காரணம் காட்டியுள்ளார்.

எஸ்.ஆர்.பிரபுவுக்கு போடப்பட்ட ‘ரெட்’ காரணமாகவே கூட்டத்தில் ஒருத்தன் படத்தை ரிலீஸ் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் திரையுலகில் பேச்சு அடிபடுகிறது.
இது ஒரு பக்கம் இருக்க, கே.ஈ.ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும், சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படத்துக்கும் இதேபோன்ற சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நயன்தாராவின் காதலரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் ‘தனா சேர்ந்த கூட்டம்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23-ஆம் தேதி வெளியாகிறது.

இதற்கிடையில் திரைப்படக் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு ரெட் போட்டிருப்பதால் தானா சேர்ந்த கூட்டம் படம் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ரிலீஸ் தேதிக்குள் இந்தப் பிரச்சனையை தீர்க்கும்படி ஞானவேல்ராஜாவுக்கு சூர்யா கட்டளையிட்டிருப்பதாகவும் தகவல்.

தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர், பொருளாளர் இருவருக்கும் ஏற்பட்ட தலைவலி இப்படி இருக்க, தலைவர் விஷால் மட்டும் தப்பிக்க முடியுமா என்ன?

அவரது நடிப்பில் வளர்ந்து வரும் துப்பறிவாளன் படத்தை வெளிவரவிடாமல் செய்ய வியூகங்கள் அமைக்கப்பட்டுள்ளனவாம்.

தியேட்டர் அதிபர்களும் விநியோகஸ்தர்களும் ஒன்று சேர்ந்தால் தன்னுடைய துப்பறிவாளன் படத்தை ரிலீஸ் செய்யவிடாமல் செய்துவிட முடியும் என்ற யதார்த்தத்தை விஷாலும் உணர்ந்துவிட்டார்.

இதற்கும், துப்பறிவாளன் படப்பிடிப்பை அவர் அடிக்கடி கேன்ஸல் செய்வதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்று தெரியவில்லை.

ஜெ.பிஸ்மி