சாட்டிலைட் ரைட்ஸ்…. சன் டிவியின் திடீர் வேகம்…. பின்னணி என்ன?

nayanthara-aram

சில வருடங்களுக்கு முன்புவரை, புதுப்படங்களுக்கு பூஜை போடப்படும்போதே அதன் சாட்டிலைட் உரிமையை டிவி சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கிக் குவித்தன.

முன்னணி ஹீரோக்கள், முன்னணி இயக்குநர்கள், பெரிய பட்ஜெட் படங்கள் என்றால் சன் டிவி கொத்திக்கொண்டு போய்விடும்.

சன் டிவியின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாவிட்டாலும் மற்ற சேனல்களும் ஓரளவுக்கு படங்களை வாங்கி வந்தன.

சேனல்களுக்கு இடையிலான இந்த போட்டியில் தயாரிப்பாளர்கள் செமத்தியாய் குளிர்காய்ந்தார்கள்.

சாட்டிலைட் ரைட்ஸ் மூலம் கிடைக்கும் பணத்தை நம்பியே பல படங்கள் தயாரிக்கப்பட்டன.

இந்நிலையில் சன் டிவியின் போக்கில் சில வருடங்களுக்கு முன் மாற்றம் ஏற்பட்டது.

தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் சன் நிர்வாகத்துக்கு குடைச்சல் கொடுத்ததால், பதிலுக்கு சாட்டிலைட் ரைட்ஸ் வாங்குவதை நிறுத்தியது.

அதன் பிறகு, எப்பேற்பட்ட படமாக இருந்தாலும் ரிலீஸாகி அதன் தலையெழுத்து தெரிந்த பிறகே வாங்குவோம் என்று வேடிக்கை காட்டத் தொடங்கியது – சன் டிவி.

மற்ற சேனல்களும் சாட்டிலைட் ரைட்ஸ் விஷயத்தில் அடக்கி வாசிக்க ஆரம்பித்தன.

இதனால் தயாரிப்பாளர்கள் முழி பிதுங்கிப்போனார்கள்.

இப்படியான சூழலில்தான், சமீபகாலமாக முன்னணி நடிகர்களின் படங்களின் சாட்டிலைட் ரைட்ஸை வாங்குவதில் சன் டி.வி. தீவிரம் காட்டி வருகிறது.

பொன்.ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம், நயன்தாராவின் ‘அறம்’, பிரபுதேவாவின் ‘குலேபகாவலி’, செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் ‘மன்னவன் வந்தானடி’, சிபிராஜின் ‘சத்யா’ ஆகிய படங்களின் தொலைக்காட்சி உரிமங்களை சமீபத்தில் வாங்கிக்குவித்துள்ளது.

சன் டிவியின் இந்த மாற்றத்துக்கு என்ன காரணம்?

அமேசான், ஹாட்ஸ்டார், நெட் ஃப்ளிக்ஸ் வழியில் சன் நெக்ஸ்ட் என்ற மொபைல் செயலி மூலம் டிஜிட்டல் உலகில் அடியெடுத்து வைத்துள்ளது சன் டிவி.

சன் நெக்ஸ்ட் மூலம் சன் நெட்வொர்க்கில் ஒளிபரப்பாகும் நாடகங்கள் மற்றும் திரைப்படங்களை மாதம் 50 ரூபாய் கட்டணத்தில் பார்க்க முடியும்.

அசுர வளர்ச்சி பெற்று வரும் அமேசானுக்கு போட்டியாக, சன் நெக்ஸ்ட்டை வளர்ப்பதற்காகவே தற்போது பெரிய படங்களின் சாட்டிலைட் ரைட்ஸை வாங்கிக் குவிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது சன் டிவி.

– ஜெ.பிஸ்மி