வேலைக்காரன் படத்துக்கு விதியை மீறி தணிக்கை சான்றிதழா?

velaikkaran-24amstudios-siva_kartikeyan-rdrajaofficial-nayantharau-velaikkaranfl

சிவகார்த்திகேயன் தன்னுடைய நண்பர் பெயரில் தயாரித்துள்ள ‘வேலைக்காரன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவதற்கு முன்னரே டிசம்பர் 22-ஆம் தேதி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டது.

ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட பிறகுதான் ‘வேலைக்காரன்’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பே தொடங்கப்பட்டது.

சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்து தற்போது இறுதிக்கட்டப் பணிகளை துரிதப்படுத்தி இருக்கிறார்கள். ஆனாலும், படத்தின் போஸ்ட்புரடக்ஷன்ஸ் பணிகள் திட்டமிட்டபடி முடியவில்லை.

இதற்கிடையில் வேலைக்காரன் படத்தின் இசைவெளியீட்டை ஆடம்பரமான நட்சத்திர ஹோட்டலில் பல லட்சம் செலவு செய்து நடத்தினர்.

இது ஒருபக்கம் இருக்க, வேலைக்காரன் படத்தின் ரிலீஸுக்கு இன்னும் 17 நாட்களே உள்ளநிலையில் இதுவரை தணிக்கைக்கு அனுப்பப்படவில்லை.

தணிக்கை வாரியம் சமீபத்தில் செய்த சீர்திருத்தத்தின்படி ஒரு படத்தின் தணிக்கைக்கு அதிகபட்சம் 65 நாட்கள் காலஅவகாசம் எடுத்துக் கொள்ளப்படும் என தணிக்கை வாரியம் அறிவித்துள்ளது.

அதே நேரம் ஒரேநாளில் சான்றிதழ் வழங்கும் அதிகாரமும் தணிக்கை வாரியத்துக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஏற்கனவே பல படங்கள் தணிக்கைக்கு விண்ணப்பிக்கப்பட்டு சான்றிதழுக்காக காத்திருக்கின்றன. அந்தப் படங்களுக்கு சான்றிதழ் வழங்காமல் விதியை மீறி வேலைக்காரன் படத்துக்கு சான்றிதழ் வழங்கப்பட்டால், இதனால் பாதிப்புக்குள்ளாகும் சில தயாரிப்பாளர்கள் நீதிமன்றத்துக்கு செல்லும் திட்டத்தில் உள்ளனர்.

டிசம்பர் 22 ஆம் தேதிக்கு இன்னும் சில நாட்களே உள்ளநிலையில் வேலைக்காரன் படம் இன்னும் தணிக்கைக்கு அனுப்பப்படவில்லை. எனவே டிசம்பர் 22 ஆம் தேதிக்குள் வேலைக்காரன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.