அட…! இதுதான் மேட்டரா? – சிவகார்த்திகேயனின் சீக்ரெட்…!

velaikkaran-24amstudios-siva_kartikeyan-rdrajaofficial-nayantharau-velaikkaranfl


மோகன் ராஜா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘வேலைக்காரன்’ படத்தை தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் ‘சீமராஜா’ என்ற படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

வேலைக்காரன் படம் தயாரிப்பில் இருந்தேபோதே தொடங்கப்பட்ட இந்தப் படத்திற்கு சமீபத்தில் தலைப்பு அறிவிக்கப்பட்டது.

சிவகார்த்திகேயன் பிறந்த நாளான ஃபிப்ரவரி 17-ஆம் தேதி வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக்கில் சீமராஜா என்ற தலைப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதோடு, ‘சீமராஜா’ விநாயக சதுர்த்திக்கு ரிலீசாகவிருக்கிற அறிவிப்பும் இடம் பெற்றிருந்தது.

குறுகியகாலத்திலேயே மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்ட சிவகார்த்திகேயனின் வெற்றிக்கு அவரது திறமை அதிர்ஷ்டம் காரணமாக இருந்தாலும் இவை எல்லாவற்றையும்விட முக்கியமான காரணம்… சிவகார்த்திகேயனின் படங்கள் வெளியிடப்படும் தேதி.

தொடர்விடுமுறையை கணக்கில் கொண்டே சிவகார்த்திகேயன் நடித்த ஒவ்வொரு படங்களும் பக்காவாக திட்டமிடப்பட்டு திரைக்குக் கொண்டு வரப்படுகின்றன.

அவரது கேரியரில் மிகப்பெரிய வெற்றியைப்பெற்ற வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் 2013, செப்டம்பர் 6 ஆம் தேதி வெளியானது. 7 மற்றும் 8 ஆம் தேதிகள் வாரவிடுமுறை, 9 ஆம் தேதி வினாயகர் சதுர்த்தி என நான்கு நாட்கள் தொடர்விடுமுறை என்பதால், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்துக்கு வசூல் கொட்டியது.

ரஜினி முருகன் படமும் பொங்கல்விடுமுறையில் வெளியானதால் வணிகரீதியில் வெற்றியடைந்தது.

தொடர்விடுமுறை தினத்தை ஒட்டி படத்தை வெளியிட்டால், வெற்றி நிச்சயம் என்பதை புரிந்து கொண்ட சிவகார்த்திகேயன் அடுத்து நடித்த ரெமோ படத்தையும் அதே பாணியில், அதாவது தொடர்விடுமுறையில் 2016 அக்டோபர் 7 ஆம் தேதி வெளியிடப்பட்டது. 8 ஆம் தேதி சனி 9 ஆம் தேதி ஞாயிறு, 10 ஆம் தேதி சரஸ்வதி பூஜை, 11 ஆயுதபூஜை 12 ஆம் தேதி மொகரம் என ஐந்து நாட்களும் விடுமுறை என்பதால் ரெமோ படம் பார்க்க மக்கள் தியேட்டருக்கு திரண்டு வந்தனர்.

இதே பாணியில்தான் வேலைக்காரன் படத்தை ரிலீஸ் செய்யவும் தேதி குறித்தனர். வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, 2017 செப்டம்பர் 29 ஆம் தேதி படம் ரிலீஸாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை என தொடர்விடுமுறை நாட்களை குறிவைத்தே இந்த தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்குள் வேலைக்காரன் பட பணிகள் முடிவடையவில்லை. எனவே ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு, பிறகு டிசம்பர் 22 ஆம் தேதி கிருஸ்துமஸ் விடுமுறையை ஒட்டி வேலைக்காரன் படத்தை வெளியிட்டனர். அப்படியும் வேலைக்காரன் கமர்ஷியல் வெற்றியைக் கொடுக்கவில்லை என்பது தனிக்கதை.

இந்நிலையில்தான் சீமராஜாவின் ரிலீஸ் தேதியையும் தொடர்விடுமுறையை கருத்திக் கொண்டு 2018 வினாயகர் சதுர்த்திக்கு வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது புரிகிறதா சிவகார்த்திகேயனின் சக்சஸ் சீக்ரெட்?

-ஜெ.பிஸ்மி

seemaraja