5 கோடி சம்பளம் பத்தாது, லாபத்திலும் பங்கு கொடு! – தயாரிப்பாளர்களை தலைசுற்ற வைக்கும் சிவகார்த்திகேயன்!

09

இன்றைய தேதியில் முன்னணி ஹீரோக்கள் வரிசையில் கால்மேல் கால் போட்டு அமர்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

மெரீனா, மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என இவர் நடித்த படங்களின் தொடர் வெற்றியே இந்த முன்னாள் தொகுப்பாளரை இன்னாள் நட்சத்திரமாக்கி இருக்கிறது.

இதுவரை நடித்த படங்களுக்கு பெரிசாக சம்பளம் வாங்கவில்லையே என்று அடிக்கடி வருத்தப்படும் சிவகார்த்திகேயன், இனி ஏமாளியாக இருக்கப்போவதில்லை என்று தன் குலதெய்வ கோவிலில் சபதம் எடுத்துவிட்டார் போலிருக்கிறது.

தமிழ்சினிமா வரலாற்றிலேயே எந்த கதாநாயக நடிகரும் கேட்காத அளவுக்கு ஏகப்பட்ட கணக்குகளைப் போட்டு புதுமையானமுறையில் சம்பளம் கேட்க ஆரம்பித்திருக்கிறார்.

கடைசியாக அவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் 20 கோடிக்கும் பிசினஸ் ஆகி, சுமார் 30 கோடி வரை வசூல் செய்திருப்பதாக நம்புகிறார் சிவகார்த்திகேயன்.

எனவே தன்னைத் தேடி வரும் தயாரிப்பாளர்களிடம் ஒரு கணக்கு சொல்லி சம்பளம் கேட்கிறாராம்.

அவர் போடும் கணக்கும், கேட்கும் சம்பளமும் அவரிடம் கால்ஷீட் கேட்டுப்போகும் தயாரிப்பாளர்களை மிரள வைக்கிறதாம்.

அப்படி எவ்வளவு பாஸ் சம்பளம் கேட்கிறார்?

முதலில் எனக்கு 5 கோடி சம்பளம் கொடுங்க, 5 கோடி செலவு பண்ணி படத்தை எடுங்க. 10 கோடி செலவு பண்ணி எடுத்த படத்தை 25 கோடிக்கு பிசினஸ் பண்ணுங்க. கிடைக்கிற 15 கோடி லாபத்தில எனக்கும் பங்கு கொடுங்க..!

– இதுதான் சிவகார்த்திகேயன் சம்பளம் கேட்கும் ஸ்டைல் என்று விளக்கினார் ஒரு தயாரிப்பாளர்.

ஆக..சம்பளம் 5 கோடி, லாபத்தில் பங்கு 5 கோடி என்று வைத்துக் கொண்டால் சிவகார்த்திகேயன் சம்பளம் 10 கோடியா?

ஹலோ…! இன்கம்டாக்ஸ் ஆபிசுங்களா…