போயஸ்கார்டனின் கட்டளையைக் காலில் போட்டு மிதித்த சிவகார்த்திகேயன்

sivakarthikeyan2

‘பசங்க புரடக்ஷன்ஸ்’ பாண்டிராஜ், ‘வுண்டர் பார் பிலிம்ஸ்’ தனுஷ், ‘எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்’ மதன், ‘திருப்பதி பிரதர்ஸ்’ லிங்குசாமி ஆகியோர் வட்டிக்கு வாங்கிய பணத்தில் எடுக்கப்பட்ட மெரீனா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கிச்சட்டை, ரஜினி முருகன் ஆகிய படங்கள்தான் சின்னத்திரை தொகுப்பாளரான சிவகார்த்திகேயனுக்கு வெள்ளித்திரையில் வெற்றியையும், விலாசத்தையும் கொடுத்தன.

இதை எல்லாம் இத்தனை சீக்கிரம் மறந்துவிடுவார் என ஆரம்பகாலத்தில் அவருக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்கள் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

சிவகார்த்திகேயன் நடித்த படங்களுக்கு தொடர்ந்து கிடைத்த வெற்றி சிலரது கண்களை உறுத்த, அவருக்கு முகவரி கொடுத்த தயாரிப்பாளர்கள் ஓரம்கட்டப்பட்டனர்.

இனி மற்ற தயாரிப்பாளர்களின் படங்களில் நடிக்கக் கூடாது என்று சிவகார்த்திகேயனுக்கு சொல்லப்பட்டதோடு, அவசர அவசரமாக 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டது.

சிவகார்த்திகேயனின் பெயரில் இந்த நிறுவனம் இல்லை என்றாலும், அவரை நம்பியே கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டினார்கள் பைனான்ஸியர்கள்.

மதுரைப்பக்கம் கிரானைட் குவாரி நடத்தும் பண முதலைகளும் கோடிக்கணக்கான பணத்தை சிவகார்த்திகேயனின் காலடியில் கொட்டின.

இந்தப் பணத்தில்தான் 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் படநிறுவனம் வளர்ந்தது.

முதல் தயாரிப்பாக ‘ரெமோ’ படத்தைத் தயாரித்த 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் அடுத்து மோக்னராஜா இயக்கத்தில் ‘வேலைக்காரன்’ படத்தையும் ஆரம்பித்தது.

அது மட்டுமல்ல, ரெமோ தொடங்கிய சில நாட்களிலேயே இயக்குநர்கள் மோகன் ராஜா, பொன்ராம், இன்று நேற்று நாளை பட இயக்குநர் ரவிகுமார் ஆகியோரது படங்களில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாகவும் இந்த மூன்று படங்களையும் 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் பட நிறுவனமே தயாரிக்க இருப்பதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

மோகன்ராஜா இயக்கும் வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பை கடந்த நவம்பர் 11 ஆம் தேதி அன்று தொடங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில், “ஏற்கனவே சிவகார்த்திகேயனுக்கு அட்வான்ஸ் கொடுத்திருப்பதாகவும், எங்களுக்கு கால்ஷீட் கொடுக்காமல் 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் நிறுவனத்துக்கு அடுத்தடுத்து படம் பண்ணக் கூடாது” – என்று தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில், ஸ்டுடியோக்ரீன் கே.இ. ஞானவேல்ராஜா, எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன், வேந்தர் மூவீஸ் மதன் (சார்பில் டி.சிவா) ஆகிய மூன்று தயாரிப்பாளர்களும், புகார் கொடுத்தனர்.

மூன்று தயாரிப்பாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், சிவகார்த்திகேயனை அழைத்து பேசியது தயாரிப்பாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளை உள்ளடக்கிய ஃபெடரேஷன் என்கிற கூட்டமைப்பு. இதனால் சிவகார்த்திகேயனின் புதிய படத்தை தொடங்க முடியாமல் சிக்கல் ஏற்பட்டது.

இந்தப் பிரச்சனையில் முடிவு எட்டப்படாமல் இழுத்துக்கொண்டேபோக, சசிகலாவின் தம்பி திவாகரனின் மகன் ஜெய்ஆனந்தை சந்தித்தார் சிவகார்த்திகேயன்.

தனக்கு ஏற்பட்ட அத்தனை பிரச்சனைகளையும் விவரித்தார்.

கே.இ. ஞானவேல்ராஜா, எஸ்கேப் மதன், டி.சிவா ஆகிய மூன்று தயாரிப்பாளர்களையும் அழைத்து, சிவகார்த்திகேயனுக்கு தொல்லை கொடுக்கக் கூடாது என்று எச்சரித்தாராம் ஜெய்ஆனந்த்.

இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் சிவகார்த்திகேயனுக்கு எதிராக கொந்தளித்ததோடு, மதுரை அன்பு மூலம் போயஸ் கார்டனுக்கு சென்று ஜெய்ஆனந்திடம் உண்மை நிலவரத்தை விளக்கியுள்ளனர்.

அப்போதுதான் சிவகார்த்திகேயன் மீது தவறு இருப்பது அவருக்கு புரிந்ததாம். உடனே சிவகார்த்திகேயனுக்கு போனைபோட்டு சம்மந்தப்பட்டவர்களுக்கு கால்ஷீட் கொடுத்து பிரச்சனையை சுமுகமாக முடிக்கும்படி கட்டளையிட்டிருக்கிறார் ஜெய்ஆனந்த்.

அவர் சொன்ன தீர்ப்பின்படி, வேலைக்காரன் படத்துக்கு அடுத்து கே.இ. ஞானவேல்ராஜா, எஸ்கேப் மதன், வேந்தர் மூவீஸ் மதன் ஆகிய மூவரில் ஒருவருக்கு கால்ஷீட் கொடுத்திருக்க வேண்டும்.

சிவகார்த்திகேயன் தரப்போ, பொன்ராம் இயக்கும் படத்தையும் 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பதாக அறிவித்தது.

அடுத்து, இன்று நேற்று நாளை பட இயக்குநர் ரவிகுமாரின் படத்தையும் 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் நிறுவனமே தயாரிக்க இருக்கிறது.

இந்நிலையில், ‘நானும் ரௌடிதான்’ பட இயக்குநரும் நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

‘‘விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் கைப்பற்றி இருக்கிறோம்!’’ என சன் டிவியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்யப்பட்டிருக்கிறது.

இதை எல்லாம் பார்க்கும்போது, போயஸ் கார்டனின் எதிர்கால அரசியல் வாரிசான ஜெய்ஆனந்த் சொன்ன தீர்ப்பை சிவகார்த்திகேயன் நிராகரித்துவிட்டார் என்றே தோன்றுகிறது.

“சசிகலா சிறைக்கு சென்றுவிட்டார். தினகரனை அ.தி.மு.க. அமைச்சர்களே ஓரங்கட்டிவிட்டனர். இனி சசிகலா குடும்பம் தலைஎடுப்பதே கஷ்டம். நாம் மட்டும் எதற்கு ஜெய்ஆனந்தின் பேச்சை மதிக்க வேண்டும்?” என்று சிவகார்த்திகேயன் நினைத்துவிட்டார் போலிருக்கிறது.

– ஜெ.பிஸ்மி

 

ஏற்கனவே இது குறித்து தமிழ்ஸ்கிரீன்.காம் வெளியிட்ட செய்தி 

http://tamilscreen.com/sivakarthikeyan-issue/