போயஸ்கார்டனுக்குப் போன சிவகார்த்திகேயன்… – பொங்கி எழுந்த தயாரிப்பாளர்கள்…. – வெளிவராத EXCLUSIVE STORY…

remo-bhagyarajkannan-rdraja-24amstudios-sivakarthikeyan-anirudh-keerthisuresh


சினிமாவையும் அரசியலையும் பிரிக்க முடியாதுதான்.

அதே நேரம்… அரசியல் சுழலுக்குள் சிக்காமல் சினிமாவுக்குள் சதுரங்கம் ஆடுவதில்தான் இருக்கிறது சினிமா நடிகர்களின் சாமர்த்தியம்.

தப்பித்தவறி அரசியலுக்குள் சிக்கினால் புலிவாலைப் பிடித்த கதைதான்.

தெரிந்தோ தெரியாமலோ…. இப்போது அரசியல் என்கிற புலிவாலைப் பிடித்துவிட்டார் நடிகர் சிவகார்த்திகேயன்.

அது எதிர்காலத்தில் அவரை என்ன பாடுபடுத்தப்போகிறதோ?

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை கடந்த நவம்பர் 11 ஆம் தேதி அன்று தொடங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தநிலையில், ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா, எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன், (தலைமறைவாக இருக்கும்) வேந்தர் மூவீஸ் மதன் (சார்பில் டி.சிவா) ஆகிய மூன்று தயாரிப்பாளர்கள் கொடுத்த புகார் காரணமாக சிவகார்த்திகேயனின் புதிய படத்தை தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டது.

பொதுவிழாவில் அழுது தீர்த்தும் பிரயோஜனமில்லை…

இனியும் அமைதியாக இருந்தால் நம் தலையில் மிளகாய் அரைத்துவிடுவார்கள்…

என்ற இக்கட்டான சூழலில் அதிரடியான ஒரு முடிவை எடுத்தார் சிவகார்த்திகேயன்.

இந்த பிரச்சனையிலிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ளவும்,

தன்னை நிம்மதியாய் தொழில் செய்யவிடாத மூன்று தயாரிப்பாளர்களுக்கும்…

தனக்கு தடையாய் இருக்கும் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சில நிர்வாகிகளுக்கும் தக்க பாடம் கற்றுக்கொடுத்தே தீர வேண்டும் என்ற வெறியில்… வேகத்தில் சிவகார்த்திகேயன் கதவை தட்டிய இடம்… போயஸ் கார்டன்.

ஜெயலலிதா அப்பல்லோவில் இருக்க… அவருடன் சசிகலா இருக்க… சிவகார்த்திகேயன் யாரை அணுகினார்?

அதற்கு முன்னர், சிவகார்த்திகேயனுக்கு என்ன பிரச்சனை என்று பார்ப்போம்…

மெரீனா படம் தொடங்கி ரஜினி முருகன் வரை வெவ்வேறு தயாரிப்பாளர்களின் படங்களில்தான் நடித்து வந்தார் சிவகார்த்திகேயன்.

லிங்குசாமி தயாரித்த ரஜினி முருகன் படத்தில் நடித்தபோது ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் காரணமாக சம்பளம் 5 கோடியையும்… கைக்காசு 50 லட்சத்தையும் இழந்தார்.

எனவே… இனி மற்ற தயாரிப்பாளர்களின் படங்களில் நடிக்கவே கூடாது என்ற முடிவுக்கு வந்தார் சிவகார்த்திகேயன்.

அதன் தொடர்ச்சியாய் அவருடைய நண்பர் ஆர்.டி.ராஜாவினால் 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் என்ற புதிய பட நிறுவனம் தொடங்கப்பட்டது.

அந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவானதுதான் ரெமோ திரைப்படம்.

ரெமோ தொடங்கிய சில நாட்களிலேயே இயக்குநர்கள் மோகன் ராஜா, பொன்ராம், இன்று நேற்று நாளை பட இயக்குநர் ரவிகுமார் ஆகியோரது படங்களில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாகவும் இந்த மூன்று படங்களையும் 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் பட நிறுவனமே தயாரிக்க இருப்பதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அதோடு, இனி சிவகார்த்திகேயன் வெளிப்படங்களில் நடிக்க மாட்டார் என்றும்…

24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் படங்களில் மட்டுமே நடிப்பார் என்றும் படத்துறையில் பரவலாகப் பேசப்பட்டது.

சிவகார்த்திகேயனின் இந்த நடவடிக்கை தயாரிப்பாளர்கள் மத்தியில் அதிருப்தியையும், எதிர்மறையான விமர்சனங்களையும் ஏற்படுத்தியது.

இன்னொரு பக்கம், ஏற்கனவே சிவகார்த்திகேயனுக்கு அட்வான்ஸ் கொடுத்திருப்பதாக சொல்லி வந்த, ஸ்டுடியோக்ரீன் கே.இ. ஞானவேல்ராஜா, எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன், (தலைமறைவாக இருக்கும்) வேந்தர் மூவீஸ் மதன் (சார்பில் டி.சிவா) ஆகிய மூன்று தயாரிப்பாளர்களும்….

“எங்களுக்கு கால்ஷீட் கொடுக்காமல் 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் நிறுவனத்துக்கு அடுத்தடுத்து படம் பண்ணக் கூடாது”

– என்று தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்தனர்.

மூன்று தயாரிப்பாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், சிவகார்த்திகேயனை அழைத்து பேசியது தயாரிப்பாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளை உள்ளடக்கிய ஃபெடரேஷன் என்கிற கூட்டமைப்பு.

ஸ்டுடியோக்ரீன் கே.இ. ஞானவேல்ராஜாவிடம் அக்ரிமெண்ட் போட்டு அட்வான்ஸ் வாங்கியதை ஒப்புக்கொண்ட சிவகார்த்திகேயன் தரப்பு, எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதனிடமோ, வேந்தர் மூவீஸ் மதனிடமோ அட்வான்ஸ் வாங்கவில்லை என்று மறுத்தது.

சிவகார்த்திகேயனுக்கு 50 லட்சம் செக்காக கொடுத்த ஆதாரத்தை எஸ்கேப் மதன் வெளியிட, அது மான் கராத்தே படத்திற்கான சம்பள பாக்கி என சிவகார்த்திகேயன் தரப்பில் மறுக்க…

மற்றொரு தயாரிப்பாளரான வேந்தர் மூவீஸ் மதன் சார்பில் இந்த பிரச்சனையை கையாண்டு வரும் டி.சிவா, சிவகார்த்திகேயனுக்கு 25 லட்சம் ரொக்கமாக கொடுத்தாக சொல்லி இருக்கிறார்.

இதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதாலோ என்னவோ… வேந்தர் மூவீஸ் மதனிடம் அட்வான்ஸ் வாங்கியதாக சொல்லப்பட்ட குற்றச்சாட்டை முற்றிலுமாக நிராகரித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இந்தப் பிரச்சனையில் முடிவு எட்டப்படாமல் இழுத்துக்கொண்டேபோக, மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்க வேண்டிய புதுப்படம் தொடங்கப்பட வேண்டிய நாள் நெருங்கிக் கொண்டே இருந்தது.

மூன்று தயாரிப்பாளர்களுக்கு கால்ஷீட் தருவதாக உறுதியளிக்காவிட்டால், 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பை தொடங்கவிட மாட்டார்கள் என்பதை புரிந்து கொண்டார் சிவகார்த்திகேயன்.

இத்தனை வருடம் கஷ்டப்பட்டு அடைந்த நட்சத்திர அந்தஸ்த்தை அனுபவிக்கவிடாமல்… அறுவடை செய்யவிடாமல் தடையாய் நிற்கிறார்களே என்று வெறுத்துப்போன சிவகார்த்திகேயன் ஒருகட்டத்தில் வெகுண்டெழுந்தார்.

அதன் பிறகு அவர் சென்ற இடம்தான்… போயஸ் கார்டன்.

அங்கே சென்று தன் பிரச்சனைகளை சொன்னால் எதிரிகள் தலைதெறிக்க ஓடிவிடுவார்கள் என்று சிவகார்த்திகேயன் முடிவு எடுத்ததற்கு ஒரு காரணம் உண்டு.

சசிகலாவின் சகோதரரான திவாகரனின் சம்மந்தி (மகளின் மாமனாராம்) ஜெயிலராக வேலை பார்த்தவர்.

சிவகார்த்திகேயனின் அப்பாவும் ஜெயிலராக வேலை பார்த்தவர்.

அப்போது இருவரும் நண்பர்களாம்.

அந்த அடிப்படையில்தான் கார்டன் கதவை தட்டி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

எதிர்கால அரசியல்வாரிசாக அடையாளம் காட்டப்பட்டு வரும் திவாகரனின் மகன் ஜெயந்தை சந்தித்த சிவகார்த்திகேயன் திரையுலகில் தனக்கு ஏற்பட்ட அத்தனை நெருக்கடிகளையும் விவரித்திருக்கிறார்.

அதன் பிறகு நடந்ததெல்லாம் அவரே எதிர்பார்க்காத அதிரடி திருப்பங்கள்.

ஸ்டுடியோக்ரீன் கே.இ. ஞானவேல்ராஜா, எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன், வேந்தர் மூவீஸ் மதன் சார்பில் டி.சிவா ஆகிய மூன்று தயாரிப்பாளர்களுக்கும் போயஸ்கார்டனிலிருந்து அழைப்பு வந்திருக்கிறது.

ஹைதராபாத்தில் இருப்பதாக சொல்லி ஞானவேல்ராஜா ஜகா வாங்க, எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன், டி.சிவா இருவரும் கார்டனுக்கு சென்று ஜெயந்தை சந்தித்துள்ளனர்.

கால்ஷீட் கேட்டு சிவகார்த்திகேயனுக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாது.. அவரது படத்தின் படப்பிடிப்புக்கு இடையூறு செய்யக்கூடாது என்று இருவருக்கும் எச்சரிகை விடப்பட்டிருக்கிறது.

இருவரும் அதற்கு தலையாட்டிவிட்டு வந்துவிட, இனி நமக்கு தடையில்லை என்று உற்சாகமானாராம் சிவகார்த்திகேயன்.

அதோடு மோகன் ராஜா  இயக்கும் படத்தின் படப்பிடிப்புக்கான ஏற்பாடுகளையும் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

இந்த தகவலை அறிந்த ஞானவேல்ராஜா கடுப்பாகி இருக்கிறார்.

இன்னொரு பக்கம், தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் மத்தியிலும் சிவகார்த்திகேயனுக்கு எதிரான கோபம் கொப்பளிக்க ஆரம்பித்திருக்கிறது.

ஒட்டுமொத்த சினிமா அமைப்புகளையே டம்மியாக்குவதுபோல் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக திவாகரனின் மகன் ஜெயந்த் உத்தரவு பிறப்பித்ததை ஏற்கக்கூடாது என்ற முடிவுக்கு வந்திருக்கின்றனர்.

அதோடு, கலைப்புலி தாணு, டி.சிவா, மதுரைஅன்பு, சிவசக்தி பாண்டியன், கலைப்புலி சேகரன், லட்சுமி மூவி மேக்கர்ஸ் முரளி ஆகியோர் அடங்கிய சிலர் திவாகரனின் மகன் ஜெயந்தை சந்தித்து மூன்று தயாரிப்பாளர்களிடம் சிவகார்த்திகேயன் பணம் வாங்கியது உண்மை என்று விளக்கியுள்ளனர்.

அதோடு, இவர்களுக்கு சிவகார்த்திகேயன் கால்ஷீட் கொடுக்காமல்போனால் இந்தப் பிரச்சனையை கையில் எடுத்து பஞ்சாயத்து பண்ணி வரும் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு மரியாதை இல்லாமல் போய்விடும் என்றும்  தங்களுடைய சூழலை கூறியுள்ளனர்.

அதைக் கேட்டதும்   சற்றே இறங்கி வந்திருக்கிறார்  ஜெயந்த்.

சிவகார்த்திகேயனுக்கு போனைபோட்டு சம்மந்தப்பட்டவர்களுக்கு கால்ஷீட் கொடுத்து பிரச்சனையை முடிக்கும்படி கட்டளையிட்டிருக்கிறார்.

அதேபோல் சிவகார்த்திகேயன் புதுப்படம் தொடங்குவதற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் தடையாய் இருக்கக் கூடாது என்றும் எச்சரித்து அனுப்பியுள்ளார்.

அதன் பிறகு இந்த குழுழுவினரும் சிவகார்த்திகேயன் தரப்பும் ஒரு நட்சத்திர ஹோட்டலில் கூடி  ஜெயந்தின் தீர்ப்பின்படி  செயல்படுவது என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

திவாகரனின் மகனும்… போயஸ் கார்டனின் புதிய நாட்டாமையுமான ஜெயந்தின் தீர்ப்பைத்தான்… ஃபெடரேஷன் என்கிற பழைய நாட்டாமைகள் தங்களுடைய தீர்ப்புபோல் சொல்லி சிவகார்த்திகேயனுக்கும் – மூன்று தயாரிப்பாளர்களுக்கும் இடையிலான பிரச்சனையை தீர்த்து வைத்துள்ளனர்.

பிரச்சனை சுமுகமாக முடிந்த மகிழ்ச்சியில் மோகன் ராஜா இயக்கும் படத்தில் உற்சாகமாக நடித்துக்கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

அவர் போயஸ் கார்டனுக்குப் போன விஷயம் உதயநிதிக்கு சொல்லப்பட்டதும், தி.மு.க. மேலிடத்துக்கு தெரிவிக்கப்பட்டதும் சிவகார்த்திகேயனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

-ஜெ.பிஸ்மி

 

இந்த செய்தியை வீடியோவாக பார்க்க க்ளிக் பண்ணவும்….