சிவாஜி மணிமண்டபத் திறப்புவிழாவில் ரஜினி, கமல்….! – முதலில் மறுப்பு…! பிறகே அழைப்பு….!

sivaji

சென்னை அடையாறில் கட்டப்பட்டுள்ள நடிகர் சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தை ஒருவழியாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.

ரஜினி, கமல், சரத்குமார், நாசர், விஜயகுமார், கார்த்தி, விஷால் உட்பட ஏராளமான திரையுலகப்பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவுக்கு ரஜினியையும், கமல்ஹாசனையும் அழைக்கக் கூடாது என்று அரசுத்தரப்பில் சிவாஜி குடும்பத்தினருக்கு சொல்லப்பட்டதாகவும், அவர்கள் இருவரையும் அழைக்காமல் மணிமண்டபத்தைத் திறந்தால் நாங்கள் கடும் விமர்சனங்களை சந்திக்க நேரும் என்று சிவாஜி குடும்பத்தினர் கேட்டுக் கொண்டதாகவும், அதன் பிறகே ரஜினி, கமலுக்கு அழைப்பிதழ் அனுப்பிவைக்கப்பட்டதாகவும் தகவல்.

எனவே, விழாவுக்கு ரஜினி, கமல் வந்தாலும் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாது, பார்வையாளர்களாக மட்டுமே வந்து செல்வார்கள் என்று எதிர்பார்த்ததுபோலவே மேடைக்கு கீழே உள்ள இருக்கையில் ரஜினியும், கமலும் அமர்ந்திருந்தனர்.

அவர்களை மேடைக்கு வருமாறு அமைச்சர் ஜெயக்குமார் அழைப்பு விடுத்ததையடுத்து இருவரும் மேடைக்கு வந்தனர். ரஜினிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பொன்னாடை போர்த்த, கமலுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பொன்னாடை போர்த்தினார்.

விழாவுக்கு வந்தவர்களுக்கு இது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

கடந்த மே மாதம், தனது ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டபோது தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என அரசை விமர்சித்தார் ரஜினிகாந்த். அவரது பேச்சுக்கு, தமிழக அமைச்சர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

அதுபோல், கடந்த சில மாதங்களாக கமல்ஹாசனும் தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நிறைந்துவிட்டதாக தமிழக அரசுக்கு எதிராக தொடர்ந்து கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.

அவருடைய கருத்துகளுக்கு கடுமையான பதிலடி கொடுத்து வருபவர் அமைச்சர் ஜெயக்குமார்தான்.

இதை எல்லாம் மறந்துவிட்டு ரஜினி, கமல் இருவருக்கும் உரிய மரியாதையை கொடுத்தது பாராட்டத்தக்க அரசியல் நாகரிகமாக இருந்தது.

அதைவிட, ரஜினி கமல் இருவரையும் மேடையில் அமர வைத்துவிட்டு, அவர்களின் விமர்சனங்களுக்கு பதில் சொல்கிறேன் என்ற பெயரில் அவர்களைப் பற்றி தரக்குறைவாக பேசாமல் இருந்ததும் பாராட்டத்தக்கதாக இருந்தது.

அட பரவாயில்லையே…

– ஜெ.பிஸ்மி